Published : 19 Nov 2019 11:51 am

Updated : 19 Nov 2019 11:51 am

 

Published : 19 Nov 2019 11:51 AM
Last Updated : 19 Nov 2019 11:51 AM

ஏட்டிக்குப் போட்டியா... போட்டிக்கு வாறீயா?

college-competition-events

காலேஜ் பக்கம் போனாலே ஒரே புலம்பல். இந்தக் காலத்துப் பசங்க பேப்பர் படிக்கிறதில்ல; புத்தகம் படிக்கிறதில்ல; அரசியல் தெரியல. ஏதாவது ஒரு போட்டி வெச்சா திறமை இருக்கிற பையனும் கலந்துக்கிறதில்ல. நூத்துல ரெண்டு பேருதான் எல்லாப் போட்டியிலும் கலந்துக்கிட்டு பரிசு வாங்குறாங்க என்று அறிக்கை வாசிக்கிறாங்க கல்லூரியின் கலை, பண்பாட்டு நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள். பையனும் வரணும், போட்டியும் நடக்கணும். வாசிக்கவும் செய்யணும் என்ன பண்ணலாம்? சில ஏடாகூட யோசனைகள்.

மேகஸின் போட்டி


முதல்ல காலேஜ் கேம்பஸுக்குன்னு ஒரு மேகஸின் தொடங்கணும். அதோட சப்ளி மெண்ட்டா ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் ஒரு மேகஸின். எல்லாம் பிரிண்டிங்ல வரணும்னு; இல்ல, பிடிஎஃப் மேகஸினா இருந்தாலும் பரவாயில்ல (பிரின்டிங் மேகஸினே போட்டாலும் பயலுக பிடிஎஃப் இருக்குதான்னுதான் கேட்பாய்ங்க). அப்புறம் என்ன வாரந்தோறும் போட்டிதான்... பரிசுதான்.

போட்டோ போட்டி 1:

எல்லாப் பத்திரிகைகளும் ஏற்கெனவே நடத்துன போட்டிதான். ஒரு பிரபலத்தோட ஆஃப் சைஸ் போட்டோவை ‘பிளர்’ பண்ணிப் போட்டு, இவங்க யாருன்னு கேட்கிறது. நடிகர் நடிகைன்னா இளைஞர்கள் சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அரசியல்வாதின்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவது கண்டுபிடிச்சிடு வாங்க. போட்டி ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக் கணும்னா, அவங்க வாத்தியாருங்க யாரோட போட்டோவையாவது போடலாம். குறிப்பா, லாங்குவேஜ் எடுக்கிற வாத்தியாருங்க படம்.

போட்டோ போட்டி 2

காலேஜ்ல இருக்கிற ஏதாவது ஒரு கட்டிடத்தின் போட்டோவை நாலு துண்டாக்கி ஒவ்வொரு வாரமும் ஒரு துண்டைப் போடணும். நான்கையும் இணைத்து அது எந்த கட்டிடம் என்று கண்டுபிடித்து எழுதுவோருக்குப் பரிசு தரலாம். லைப்ரைரி கட்டிடத்தின் படத்தைப் போட்டால் முக்கால்வாசிப் பேரால் கண்டுபிடிக்க முடியாது, வாத்தியார்கள் உள்பட.

வாட்ஸ்அப் ‘டிபி’ போட்டி

சொந்த முகத்தை வைக்காமல் நடிகர், நடிகை, குழந்தை, கார்ட்டூன் கேரக்டர், விலங்கு, பறவை படங்களை ‘டிபி’யாக வைக்கிறவங்க அதிகமா இருக்காங்க. குறிப்பா இளம் பெண்கள். ஆக, வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக்கில் ஒருவர் வைத்திருக் கும் ‘டிபி’யை கொடுத்து, அவர் யார்ன்னு கண்டுபிடிக்கச் சொல்லலாம். (கிஃப்ட்? அந்தப் பொண்ணு, பையனோட நம்பர் கிடைக்கிறதே கிஃப்ட்தானப்பா)

கவிதைப் போட்டி

ஒரு மனுஷன் கவிதை எழுதத் தொடங்குறதுக்குச் சரியான நேரம் கல்லூரிக் காலம்தான். கவிதைப் போட்டி அறிவிக்கலாம். அம்மா பற்றி, அப்துல் கலாம் பற்றி எழுதுபவர்களை போய் ‘ஸ்கூல் காம்படீசன்ல’ எழுதுன்னு விரட்டிவிட்டுறலாம். கிரஷ், வாத்தியார் பற்றி எழுதுபவர்களை கல்லூரியில் தொடர அனுமதிக்கலாம். இவங்களுக்குப் பரிசு கொடுக்காவிட்டாலும் பரவாயில்ல, பதிப்பகங்களில் விற்பனை யாகாமல் தேங்கிய மொக்கை புத்தகங்களக் கொடுத்து, எதிர்காலத்தைச் சூனியமாக்கிவிடக் கூடாது.

‘டிக்டாக்’ போட்டி

‘கல்சுரல் ப்ரோகிரா’முக்கு பேர் கொடுடான்னு சொன்னா, ஒரு பயலும் கேட்க மாட்டான். அதுவே உங்களால என்னென்ன வித்தியாசமா செய்ய முடியுமோ அதை ‘டிக்டாக்’ வீடியோவாப் பண்ணிக் குடுங்கன்னு மேகஸின்ல அறிவிப்பு வெளியிடுங்க. அப்புறம் பாருங்க நம்ம காளையர்கள், கன்னியர்களோட ஆட்டத்த.

பொதுஅறிவுப் போட்டி

இதுவும் எல்லாரும் நடத்திச் சலிச்சப் போட்டிதான். ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஹீரோ யார்? ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நாயகியின் பெயர் என்ன என்பது மாதிரியான கேள்விகளைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம் அரசியல் சார்ந்த கேள்விகளைக் கேட்கலாம். பரிசாக பேனா, புத்தகம் தந்தால் ஒரு பய வர மாட்டான். செல்போன், ஸ்மார்ட் வாட்ச் என்று ஸ்மார்ட்டாக சிந்திக்கவும். (நிதி ஆதாரம்? அதான் செல்ஃப் ஃபைனான்ஸ் கோர்ஸ்ல கோடி கோடியா சம்பாதிக்கிறீங்கள்ல).

கையடக்கப் பிரதி

இந்த மேகஸின்களுக்கு யாரை எடிட்டராகப் போடுறது? ரொம்ப ஈஸி. ஆர்வமுள்ள ஒவ்வொருத்தனையும் ஒரு வாட்ஸ்அப் குழு தொடங்கச் சொல்லுங்க. யார் ‘அட்மி’னா இருந்து குரூப்பை கலகலப்பா வெச்சுக்கிறானோ அவனையே ஆசிரியராகப் போடலாம். அந்த மாதிரி வீடியோவுல புழங்குறவனை இந்தப் பொறுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளி வெக்கிறது, கல்லூரிக்கு நல்லது.

கட்டுரைப் போட்டி

‘இந்தியா 2020’ என்பது மாதிரியான மொக்கை தலைப்புகளைக் கொடுக்காமல், நான் விரும்பும் நாயகன் என்பது மாதிரி ஆரம்பிக்கலாம். தல, தளபதி ரசிகர்கள்ல சில பேரு இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுவார்கள். அதை யாருமே படிக்காட்டி, எதிரும் புதிருமா இரு ரசிகர்களையும் கட்டுரை எழுதச் சொல்லி இலக்கிய யுத்தத்தை ஆரம்பித்து வைக்கலாம்.

போட்டோகிராபி போட்டி

‘ஐடி கார்டு’ இல்லாத பையன், பொண்ணுங்ககூட இருக்கலாம், செல்போன் இல்லாத பையனோ பொண்ணோ சான்ஸே இல்ல. அவர்களுக்கு போட்டோகிராபி போட்டி வைக்கலாம். வகுப்பறை ஜன்னல் வழியே தெரியும் உலகத்தை மட்டும் படம் எடுத்து பரிசு வாங்கத் துடிக்கும் பிள்ளையார்களைத் துரத்தி, மயில் வாகனனைப் போல ஊரெல்லாம் சுற்றி வரச் செய்யலாம். கூடவே குறும்(பு)ப்படமும் எடுக்கச் சொல்லலாம். பசங்க, பொண்ணுங்களோட திறமை அப்பத்தான் நம்ம பேராசிரியர்களுக்குக் கொஞ்சமாவது புரியும்.

- கிருத்திக்

ஏட்டிக்குப் போட்டிகல்லூரி போட்டிமாணவர்கள் போட்டிகல்லூரி கலை நிகழ்ச்சிகலை போட்டிகள்பண்பாட்டு போட்டிகள்

You May Like

More From This Category

More From this Author