Published : 17 Nov 2019 10:00 AM
Last Updated : 17 Nov 2019 10:00 AM
கருவுற்றிருக்கும்போது ஏற்படும் இயல்பான மாற்றங்களுக்கு நடுவே எதிர்பாராத மாறுதல்களும் சிலருக்கு ஏற்படலாம். கருப்பை நார்திசுக்கட்டிகள் அவற்றுள் ஒன்று. சிலருக்கு இது கர்ப்ப (Fibroids) காலத்திலும் வரக்கூடும்.
கருப்பை நார்திசுக்கட்டிகள் எந்த இடத்தில் வந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கருப்பையின் வெளிச்சுவரில் கட்டி வந்தால், அது வெளிப்புறமாகவே ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தக் கட்டிகள் கருவில் வளர்கின்ற குழந்தையைப் பாதிப்பதற்கான சாத்தியம் குறைவு. கருப்பையின் இரண்டாம் பகுதியிலோ கரு தங்கியிருக்கும் பகுதியிலோ வரக்கூடிய கட்டிகள் சிலநேரம் அதிகமாக வளராமல் இருக்கலாம்.
கர்ப்ப காலக் கவனம்
குழந்தையின் வளர்ச்சியால் கருப்பையில் அதிக ரத்த ஒட்டம் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையோடு சேர்ந்து கட்டியும் பெரிதாக வளரக்கூடும். இதனால் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியும் அசைவுகளும் பாதிக்கப்படும். குழந்தையின் கால் கீழ் நோக்கி இருக்கலாம்; குழந்தை நெடுக்குவாட்டில் இருக்கலாம். குழந்தை சரியாகத் திரும்புவதற்குப் போதுமான இடம் இல்லாமல் போகலாம். பிரசவ வலி வருவதில் பிரச்சினைகள் வரலாம். சீக்கிரமாக வலி வந்து ஏதேனும் சிக்கல் ஏற்படவும் கூடும். இவ்வளவு பிரச்சினைகளைத் தரக்கூடிய இந்தக் கட்டிகளைக் கர்ப்ப காலத்தில் எளிதில் அகற்றிவிட முடியாது.
திருமணம் ஆகாத நிலையிலோ குழந்தைப் பேறு நிகழாத நிலையிலோ இவ்வகைக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டால் கர்ப்பம் நிகழ்வதற்கு முன்னதாகவே அதை அகற்றிவிடுவது நல்லது. இதனால் கர்ப்ப காலத்தில் கட்டிகளால் வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துவிட முடியும். ஒருவேளை சிலருக்குக் கர்ப்பம் தரித்திருக்கும்போதுதான் இந்தக் கட்டிகளைப் பற்றித் தெரியவருகிறது என்றாலும், அதற்காகப் பயப்பட வேண்டாம். கர்ப்ப காலத்தை மற்றவர்களைவிட அதிகமாக மருத்துவரின் உதவியோடு எதிர்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும்போது கருப்பையின் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் கட்டியை வேண்டுமானால் அகற்றலாம்.
கருப்பைக்குள் இருக்கும் கட்டியை அகற்ற முற்படக் கூடாது. முன்பே சொன்னதுபோல் கருப்பைக்குள் வரக்கூடிய ரத்தத்தின் அளவு அதிகமாக இருப்பதால், கட்டியை அகற்றுவதால், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். அதனால், அந்தக் காலகட்டத்தில் கட்டி யில் கவனம் செலுத்துவதைவிடக் கருவின் மேல்தான் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்தை நல்லவிதமாக முடித்துவிட்டு ஓராண்டு கழித்துகூடக் கட்டியை அகற்றிக்கொள்ளலாம்.
பயணம் தவிர்ப்போம்
கட்டிகள் தவிர, கர்ப்ப காலத்தில் தாய் மார்கள் வேறு சில விஷயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களில் நீண்ட தொலைவு பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கு, எப்போது, எதனால் கருச்சிதைவு ஏற்படும் என்பதை மருத்துவரால்கூடச் சொல்ல முடியாது. பிரச்சினை வந்து வருத்தப்படுவதைவிடப் பிரச்சினையைத் தவிர்ப்பதுதான் நல்லது. முதல் மூன்று மாதங்களில் கரு நல்லவிதமாகக் கருப்பையில் தங்குவதற்கான கால கட்டம் என்பதால் அலைச்சல் தேவையில்லை. அவசியம் இருந்தாலொழிய தொலைதூரப் பயணத் தைத் தவிர்ப்பது நல்லது. காரிலோ ரயிலிலோ போகலாம். அப்படியே போக நேர்ந்தாலும் இடையிடையே நிறுத்தி நிறுத்திப் போவது நல்லது. தகுந்த உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதோடு உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புகை தாய்க்குப் பகை
புகையும் மதுவும் அனைவருக்கும் கேடு என்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் புகை பிடிப்பவர்கள் அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தப் புகையைச் சுவாசிப்பதையும் அடியோடு தவிர்க்க வேண்டும். புகையின் பாதிப்பால் குறை மாதப் பிரசவம் ஏற்படலாம். குழந்தைகளுக்குப் பிறவிக்கோளாறு, மந்த புத்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வளர்ந்த பிறகு கோளாறான நடத்தை உடையவர்களாக இருப்பதற்கான சாத்தியமும் உண்டு. கவனக் குறைவு, கற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பிரசவத்தின் போதோ அதற்கு முன்னதாகவோ குழந்தை கருப்பையிலேயே மலம் கழிக்க நேரிடலாம். இது அம்னியோடிக் திரவத்தில் கலக்க நேரிட்டு அதனால் குழந்தைக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதை Mechonium aspiration syndrome என்பார்கள்.
கர்ப்ப காலம் தவிர தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் புகை, மது போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. அது குழந்தையின் வளர்ச்சியில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
தடுப்பூசி அவசியம்
பெண் குழந்தைகளுக்கு ரூபெல்லா ஊசி போட வேண்டியது அவசியம். இப்படிப் போடாத பெண்களுக்கு அவர்களுடைய கர்ப்ப காலத்தில் ரூபெல்லா நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குழந்தையாக இருக்கும்போதே பெண் களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவது மிக அவசியம். பெண் குழந்தைகளுக்கு 13-லிருந்து 15 மாதத்துக்குள் ரூபெல்லா முதல் தடுப்பூசியைப் போட வேண்டும். அதற்குப் பிறகு மூன்றிலிருந்து நான்கு வயதிற்குள் ஒரு ஊசி போட வேண்டும். தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, ரூபெல்லா ஆகிய மூன்றுக்குமான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
RH பயம் தேவையில்லை
ஹீமோகுளோபின் மேல் இருக்கக்கூடிய புரதத்தை RH என்கிறோம். சிலருக்கு RH –ve ஆகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பெண்ணுக்கு RH –ve ஆக இருந்து ஆணுக்கு RH +ve ஆக இருந்து குழந்தைக்கு RH +ve இருந்தால், தாயாலேயே அந்தக் குழந்தைக்கு RH +veக்கான எதிர்ப்பு அணுக்களை உருவாக்க முடியும். இதற்கு முன்னால் அந்தப் பெண்ணுக்குக் கருச்சிதைவோ ரத்தப் பரிமாற்றமோ இல்லாதிருந்தால் குழந்தை RH +ve ஆக பிறப்பதில் பிரச்சினை கிடையாது. RH factor கணவனுக்கும் மனைவிக்கும் வேறு வேறாக இருப்பது முதல் குழந்தையைப் பாதிக்காது.
குழந்தை பிறந்த 48 மணி நேரத்துக்குள் RH antibody injection போட வேண்டும். ஆனால், அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிமாற்றமோ வேறு பிரச்சினையோ இருந்திருந்தால் மிகக் கவனமாகக் கண் காணிக்க வேண்டும். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் அது எந்த அளவுக்கு அதிகமாயிருக்கிறது என்பதைக் கண்டறிய இயலும். குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கான சிகிச்சைகளைத் தர வேண்டும். RH factor வந்துவிட்டாலே பதற்றப்படத் தேவையில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு RH-ஐ சமன்படுத்த ஊசி போடுவார்கள். இப்படி ஊசி போடுவதன் மூலம் அடுத்த பிரசவத்தில் வரக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
(நலம் நாடுவோம்)
- அமுதா ஹரி, மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in