Published : 17 Nov 2019 10:05 am

Updated : 17 Nov 2019 10:05 am

 

Published : 17 Nov 2019 10:05 AM
Last Updated : 17 Nov 2019 10:05 AM

நட்சத்திரன் நிழல்கள் 32: லதாவை ஒன்று கேட்பேன்

pudhiya-paravai-female-character

இப்படத்தை இயக்கிய இயக்குநர் தாதா மிராஸி இப்படத்தில் சிவாஜியின் தந்தையாக நடித்திருந்தார். ஆங்கிலத்தில் வெளியான ‘சேஸ் எ குரூக்டு ஷேடோ’ என்னும் படத்தின் தழுவலில் உருவான வங்கப் படம் ‘சேஷ் அங்கா’. இதைத் தழுவியே ‘புதிய பறவை’ உருவாக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. ஆரூர்தாஸின் வசனங்கள் பெரிதாகக் கவனிக்கப்பட்டன. படத்துக்கான உடைகள் சிங்கப்பூரிலும் இங்கிலாந்திலும் தைத்துக் கொண்டு வரப்பட்டன.

புதிய பறவை படம் பற்றிப் பேச்சை எடுத்தாலே உடனே அதில் கோபால் வேடமேற்று நடித்திருந்த சிவாஜியின் நடிப்பைப் பற்றியே பலரும் பேசுவார்கள். அடுத்ததாகப் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘எங்கே நிம்மதி’ எனப் படத்தின் இனிமையான பாடல்களைப் பற்றிச் சிலாகிப்பார்கள். அதிலும் குறிப்பாக, சிவாஜியின் ஸ்டைலைப் பற்றிப் பேசுவார்கள். ‘மெல்ல நட மெல்ல நட’ பாடலிலும் ‘எங்கே நிம்மதி’ பாடலிலும் உள்ளே பனியன் அணியாமல் வெள்ளைச் சட்டை போட்டு, அதை முழங்கைக்கு மேலே வரை மடித்துவிட்டு, ஸ்டைலாக நடந்துவரும் காட்சிகளை எல்லாம் சிவாஜி ரசிகர்கள் சொல்லிச் சொல்லி மாய்வார்கள்.


படத்தை முதன்முறை பார்த்தபோது எப்படி உணர்வுவயப்பட்டுப் பேசினார்களோ அப்படியே இப்போதும் எப்போதும் உணர்வுவயப்படுவார்கள். சிவாஜி சிகரெட் புகைக்கும் அழகையும் ஸ்டைலையும் புளகாங்கிதத்துடன் சொல்வார்கள். இந்த கோபால் ஒரு தொழிலதிபர். சூழ்நிலை காரணமாகத் தன் மனைவியைக் கொன்றுவிட்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டுக்குக் கப்பலில் வந்துகொண்டிருப்பவர். அவருடைய மனைவி சித்ராவாக நடித்த சௌகார் ஜானகியும் நவநாகரிக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தக் கப்பலில்தான் சரோஜாதேவி ஏற்று நடித்த அழகுப் பதுமைக் கதாபாத்திரமான லதா, கோபாலைச் சந்திக்கிறார். லதா மலேசியா காவல் துறையின் துப்பறியும் பிரிவைச் சேர்ந்தவர்.

ஓய்வை விரும்பாத ரசிக மனம்

மிடுக்கும் துடுக்கும் கொண்ட தொழிலதிபர் கோபால் மனைவியை ஏன் கொன்றார்? காரணம், சித்ரா எப்போதும் குடி, கும்மாளம், கொண்டாட்டம் என்று தன் வாழ்வை நகர்த்தியவர். அப்படிப்பட்ட ஒருவரை ஏன் கோபால் திருமணம் செய்துகொண்டார்? தாயை இழந்த சோகத்தில் கோபால் இலக்கின்றி அலைந்து திரிந்தபோது, சித்ரா அவரை அமைதிப்படுத்தினார். முதலில் தனக்கு நிம்மதியை அளித்த அதே சித்ராவால் பின்னர் தனது நிம்மதி பறிபோனதாகக் கருதி, அதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் கோபால் அவரை அடித்தார். அந்த அடியில் இதயம் பலவீனமாக இருந்த சித்ரா சட்டென்று இறந்துவிட்டார். கொலைசெய்வது கோபாலின் நோக்கமல்ல என்றாலும் அவர் செய்தது கொலை.

தனது நிம்மதியைக் கொன்றதாக கோபால் நம்பும் அவருடைய மனைவி சித்ரா, மலேசியாவின் புகழ்பெற்ற நடனமாது. இரவு நேரக் கேளிக்கை விடுதியில் ஆடிப்பாடி, அங்கே வருபவர்களின் துன்பங்களை எல்லாம் போக்குவதே அவரது வேலை. அப்படிப் பலரது துன்பங்களை அவரது பாடல் காற்றோடு காற்றாகக் கொண்டுபோனதுபோல், கோபாலின் அலைக்கழிந்த மனதையும் அது சாந்தப்படுத்தியது. அமைதியடைந்த கோபால் அந்த அமைதி எப்போதைக்கும் தேவை என்று உணர்ந்தார். அடிக்கடி சித்ராவைச் சந்தித்தார்.

அவரைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்பினார். தொழிலதிபர் எடுத்த முதல் தவறான முடிவு இது. உல்லாசமாகத் தன் விருப்பத்துக்கு ஆடிப் பாடிக்கொண்டிருந்த சித்ராவின் இசைவுடன் இருவரும் மணந்துகொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் சித்ராவின் போக்கில் மாறுதலில்லை. சுதந்திரப் பறவையாக வாழ்ந்துகொண்டிருந்த அவரால் வீட்டுக்குள் அடங்கியிருக்க முடியவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் ஓய்வை விரும்புமோ? ‘வாழ்க்கையில் ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்கதான் வாழ்க்கையை பூரணமா அனுபவிக்க முடியும்’ என்று லதாவிடம் கூறும் கோபால், இப்படி வாழ்க்கையை ரசித்த காரணத்துக்காகத்தான் சித்ராவைக் கொன்றார் என்பது நகைமுரண்.

ஆதரவு தேடும் ஆண் மனம்

கோபால் மனைவியைக் கொன்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவரே ஒப்புக்கொண்டால்தான் உண்டு. அவரே எப்படி ஒப்புக்கொள்வார்? காவல்துறைக்குச் சவாலான வழக்கு இது. கோபாலை லதாவின் காதல் வலையில் வீழ்த்தி அதன் வழியே அவரது வாக்குமூலத்தைப் பெற்றுவிடலாம் என்பதுதான் காவல் துறையின் திட்டம். இந்த எண்ணத்தில்தான் லதா, கோபாலுடன் பழகுகிறார். இது கோபாலுக்குத் தெரியாது. கோபாலுடையது ஆண் மனம்தானே? அம்மா இறந்தபோது சித்ராவை நாடியது; சித்ராவை இழந்தபோது லதா தேவைப்படுகிறார். கோபாலின் காதலைச் சுவீகரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் லதாவின் திட்டமாக இருப்பதால், அதை நோக்கி அவர் மெல்ல மெல்ல நடைபோடுகிறார். இதை அறியாத கோபாலும் காதல் மலரத் தொடங்கிவிட்டதாக நினைத்து முன்னேறுகிறார்.

தனிமையில் சந்திக்கும் லதாவிடம் மனம்விட்டுப் பேசுகிறார் கோபால். ஆனாலும், தான் செய்த கொலையை அவர் சொல்லிவிடவில்லை. ரயிலைப் பார்க்கும்போது அவர் பதற்றமடைகிறார் என்பதைப் பற்றி லதா கேட்கும்போதுகூட கோபால் தனது திறமையான நடிப்பால் அதைச் சமாளித்துவிடுகிறார். தன் மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் முதலில் லதாவிடம் கோபால் கூறுகிறார். கோபால்தான் மனைவியைக் கொன்றார் என்பது லதாவுக்குத் தெரியும். ஆனால், தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் அவர் நடிக்கிறார். சிறிது சிறிதாக கோபாலை நெருங்கி, நிச்சயதார்த்தம்வரை வந்துவிடுகிறார் லதா. அப்போதுகூட கோபால் லதாவிடம் உண்மையைச் சொல்லவில்லை. நிச்சயதார்த்தத்துக்கு இறந்துபோன மனைவி சித்ராவைப் போன்ற பெண் வந்தபோதுகூட அது சித்ரா இல்லை என்பதை மறுக்கிறாரே தவிர, சித்ராவைத் தான் கொன்றதை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை.

காதல் என்பது கருவி

வந்திருப்பது சித்ரா அல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கவே கோபால் முயல்கிறார். லதாவோ தன் வாழ்வு பறிபோகிறது என்ற கவலையை வெளிப்படுத்தினாலும், அவரது உண்மையான கவலை கோபால் உண்மையைச் சொல்ல வேண்டுமே என்பதுதான். லதாவின் காதல் உள்நோக்கம் கொண்டது. அந்தக் காதல் ஒரு கருவி. அதைக் கொண்டுதான் அவர் ஒரு குற்றவாளியின் குற்றப் பூட்டைத் திறக்க வேண்டும். திருமணமாகாத இளம்பெண்ணான லதா காதலைப் பந்தயமாக்கி விளையாடுகிறார்.

அதில் அவர் வெற்றிபெற வேண்டும். இங்கே வெற்றி என்பது கோபாலைக் காதலிப்பதல்ல; அவரிடம் வாக்குமூலத்தைப் பெறுவது. காதல் புனிதமானது என்ற கற்பிதத்தை உடைத்தாக வேண்டிய தேவை லதாவுக்கு இருக்கிறது. காதலை ஆயுதமாகப் பயன்படுத்தும் தன்மையால் லதாவை நாம் கவனிக்க நேர்கிறது. இறப்புச் சான்றிதழ், கைரேகை, முதுகின் தழும்பு எல்லாமும் கோபாலைக் கைவிட்டுவிடுகின்றன. வேறு வழியற்ற சூழலில் லதாவைக் கைப்பிடிக்கும் நோக்கில் உண்மையைச் சொல்கிறார் கோபால்.

எது நடிப்பு?

அடுத்த கணம் லதா, “இன்ஸ்பெக்டர் கோபாலுடைய வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுகிட்டீங்க இல்ல. அவரை அரெஸ்ட் பண்ணுங்க” என்கிறார். “லதா நீயா என்ன அரெஸ்ட் பண்ணச் சொல்ற?” என்று அதிர்கிறார் கோபால். “ஆசை மரத்துல கல்லைக் கட்டியது, என்கூட ஆடிப்பாடியது அத்தனையும் நடிப்பா?” என்று கேட்கும் கோபாலிடம் லதா, “நடிக்கத்தான் வந்தேன். ஆனால், தூய்மையான உங்க அன்புக்கு முன்னால என் நடிப்பு தோத்துப்போச்சு கோபால். என் உள்ளத்துல உங்களத் தவிர வேறு யாருக்குமே இடம் கிடையாது.

உங்களுக்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருப்பேன்” என்று சொல்லித் தரையில் விழுந்துவிடுகிறார். ஆம், அதுவரை நிமிர்ந்து நின்ற அந்தக் கதாபாத்திரம் தரையில் விழுந்துவிடுகிறது. உண்மையிலேயே ஒரு கொலைகாரனான கோபாலைக் காதலித்தாரா லதா? கோபாலைக் காதலித்தது நடிப்பா இல்லை கோபாலுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னது நடிப்பா?

இப்படத்தை இயக்கிய இயக்குநர் தாதா மிராஸி இப்படத்தில் சிவாஜியின் தந்தையாக நடித்திருந்தார். ஆங்கிலத்தில் வெளியான ‘சேஸ் எ குரூக்டு ஷேடோ’ என்னும் படத்தின் தழுவலில் உருவான வங்கப் படம் ‘சேஷ் அங்கா’. இதைத் தழுவியே ‘புதிய பறவை’ உருவாக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. ஆரூர்தாஸின் வசனங்கள் பெரிதாகக் கவனிக்கப்பட்டன. படத்துக்கான உடைகள் சிங்கப்பூரிலும் இங்கிலாந்திலும் தைத்துக் கொண்டு வரப்பட்டன.

(நிழல்கள் வளரும்)
- செல்லப்பா, கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

நட்சத்திர நிழல்கள்புதிய பறவை கதாபாத்திரம்சினிமா பெண்கள்புதிய பறவை லதாசரோஜா தேவி கதாபாத்திரம்தாதா மிராஸி படம்

You May Like

More From This Category

More From this Author