Published : 13 Nov 2019 12:30 PM
Last Updated : 13 Nov 2019 12:30 PM

இந்த பாடம் இனிக்கும் 19:  எழில்மிகு தமிழ் ஓவியம்

ஆதி

சுவர் ஓவியங்களே தமிழகத்தில் பழமையானவை. மரப்பலகை, கிழி எனப்பட்ட துணிச்சீலைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. துணியில் ஓவியம் வரைவதே படம் எனப்பட்டது. திரைச்சீலையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் இதை ‘ஓவிய எழினி' என்கிறது.

பண்டைக் காலத்தில் அரண்மனை, செல்வந்தர்களின் மாளிகை, கோயில் மண்டபங்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. அரண்மனைகளில் சித்திரமாடம் என்ற தனிக் கட்டிடம் இருந்தது. பாண்டியன் நன்மாறன் எனும் அரசன் சித்திரமாடத்திலே இருந்தபோதுதான் உயிர்நீத்தார். அவரைச் ‘சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்' என்று புறநானூறு கூறுகிறது.

சிலப்பதிகார கதாபாத்திரம் மாதவி நாடக நடிகை, பல கலைகளைக் கற்றவர். ஓவியக் கலையையும் அவர் கற்றிருக்கிறார். ஓவியத்தைக் கற்பதற்குத் தனி நூல் இருந்தது இதன் மூலம் தெரியவருகிறது. மாதவியின் நடன அரங்கேற்றம் நிகழ்ந்த அரங்கின் மேற்கூரையில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. அதற்கு ‘ஓவிய விதானம்' எனப் பெயர்.

அதேபோல அரசன், அரசி கட்டில்களின் மேற்கூரையிலும், ஆடைகளிலும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். அந்த வகையில் சுவர், மண்டபக் கூரை, திரைச்சீலை, ஆடை, கேடயம் எனப் பயன்பாட்டுப் பொருட்கள் மீது அந்தக் காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்திருக்கின்றன.

ஓவியர், கண்ணுள் வினைஞர் என அழைக்கப்பட்டார். ஓவியத்தை வரையும் தூரிகைக்கு (Brush) துகில், வட்டிகை என்ற பெயர்களும் இருந்துள்ளன. வட்டிகைப் பலகை என்பது வண்ணங்களைக் குழைக்கும் பலகை (Palette). சித்தன்னவாசல் குகை, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனை மலை கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகியவை தென்னிந்திய ஓவிய மரபில் தோன்றியவையாகப் போற்றப்படுகின்றன.

சித்தன்னவாசல்

மகேந்திரவர்மன் (பொ.ஆ. 600-630) என்ற பல்லவ அரசர் சிறந்த ஓவியர். இந்த அரசரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று சித்திரகாரப் புலி (கணக்கில் புலி மாதிரி). 'தட்சிண சித்திரம்' என்ற ஓவிய நூலுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள பழமையான ஓவியம் சித்தன்னவாசல் குகை ஓவியமே. இந்தச் சமணக் கோயிலை அமைத்தவர் மகேந்திரவர்மன். பாண்டிய மன்னர்களும் இந்தக் குகை ஓவியத்துக்குப் பங்களித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1919-ல் கோபிநாதன் என்பவர் இதைக் கண்டறிந்து, ழூவோ தூப்ராய் என்பவருக்குத் தெரிவித்தார். பல்லவர் வரலாறு, கலையில் ஆர்வம் கொண்ட தூப்ராய், இந்த ஓவியங்களின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்தார்.

இந்தக் குகையில் பெருமளவு ஓவியங்கள் அழிந்துவிட்டன. அரசனும் அரசியும், இரண்டு நடன மாதர்கள், காதிகா பூமி எனும் தாமரைக்குளத்தின் ஓவியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பாறையின் மீது சுதையைப் பூசி இந்த ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இதிலிருந்தே ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்ற பழமொழி தோன்றியது.

பல்லவர் ஓவியம்

ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. 700-7729) காலத்தில் கட்டப்பட்ட கைலாச நாதர் கோயிலில் சுவர் ஓவியங்கள் வடிக்கப்பட்டன. இந்த ஓவியங்களையும் ழூவோ தூப்ராய் 1931-ல் கண்டறிந்து தெரிவித்தார். இந்தக் கோயிலில் முழுமையான ஓவியங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் அருகேயுள்ள பனைமலை கோயிலும் ராஜசிம்மன் கட்டியதே. மகுடம் அணிந்த ஒரு பெண்ணின் உருவம் மட்டுமே இங்குள்ள ஓவியத்தில் எஞ்சியிருக்கிறது. அந்த மகுடத்துக்கு மேல் அழகான குடை இருக்கிறது. இது பார்வதிதேவியின் உருவம் என்றும் ராணியின் உருவம் என்றும் கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பல்லவர் சிற்பங்களுக்கும் வண்ணம் பூசப்பட்டிருந்தது. காலப்போக்கில் அவை அழிந்துவிட்டன.

சோழர் ஓவியம்

ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலின் கருவறை உள்சுற்றுவழியில், சோழர் கால ஓவியங்கள் உண்டு. இந்த ஓவியங்களின் மேல் 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் சாந்து பூசி, புதிய ஓவியங்களை வடித்துவிட்டார்கள். இதனால் சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றை விளக்கும் சோழர் ஓவியங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கே. கோவிந்தசாமி, இந்த ஓவியங்களைக் கண்டறிந்தார். நல்வாய்ப்பாக இந்த ஓவியங்கள் அழியவில்லை, வண்ணம் மட்டும் மங்கியுள்ளன. பெரிய கோயிலைப் போலவே, இந்த ஓவியங்களும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் தோன்றுகின்றன. இந்த ஓவியங்களில் ராஜராஜ சோழன், அவருடைய குரு கருவூரார் தோன்றும் ஓவியம் புகழ்பெற்றது.

நாயக்கர் ஓவியம்

மதுரையை நாயக்கர் மன்னர்கள் ஆண்ட காலத்தில் பல கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. மதுரை மீனாட்சி கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு எதிரிலுள்ள சுவர்களில் சிவனின் 64 திருவிளையாடல்கள் தீட்டப்பட்டுள்ளன. குற்றாலத்திலுள்ள ‘சித்திர சபை' ஓவியங்கள், சிதம்பரம் கோயிலில் அம்மன் கருவறை முன்புள்ள மண்டபக் கூரை ஓவியங்கள், அழகர் கோயில் ஓவியங்கள் உள்ளிட்டவை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை.
நாயக்கர் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் நாட்டுப்புற புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை. காமிக்ஸ் கதைகள் பாணியில் படச்சட்டங்களாக கதைகளை விவரிப்பதுபோல், இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.

இந்த வாரம்:

ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘கலை வண்ணம்’ என்ற இயலின்கீழ் ‘பேசும் ஓவியங்கள்’ உரைநடை உலகம் என்ற பகுதி.

நன்றி: தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (நூல்), மயிலை சீனி. வேங்கடசாமி, பாரி நிலையம்
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x