Published : 10 Nov 2019 09:41 am

Updated : 10 Nov 2019 09:41 am

 

Published : 10 Nov 2019 09:41 AM
Last Updated : 10 Nov 2019 09:41 AM

நட்சத்திர நிழல்கள் 31: அன்னலட்சுமி ஒரு மாடவிளக்கு

virumandi-annalakshmi

செல்லப்பா

கமல்ஹாசன் ‘விருமாண்டி’ படம் தொடர்பாக அறிவித்த நேரத்தில் அந்தப் படத்தின் அன்னலட்சுமி கதாபாத்திரத்துக்கு நடிகை அபிராமியைத் தேர்ந்தெடுத்தபோது, பலருக்கு ஆச்சரியம். ஆனால், அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் அபிராமி அப்படியே உள்ளடங்கிப் போனார் என்பதைப் படம் உணர்த்தியது.


விருமாண்டிக்குள் கமல்ஹாசனால் அடங்கிக் கிடக்க முடியவில்லை; அவ்வப்போது வெளியே துள்ளி எழுந்து தான் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பார். அபிராமியோ, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதுபோல், கமல்ஹாசன் என்னும் இயக்குநர் அன்னலட்சுமி கதாபாத்திரத்துக்கு எதை எதிர்பார்த்தாரோ அதை மட்டும் அப்படியே நடித்துத் தந்திருப்பார். அவரது திரை வாழ்க்கையில் ‘விருமாண்டி’ ஒரு சாதனை. ‘ஒன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடலுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் அந்த அன்னலட்சுமி.

புராண காலம் தொட்டு கணினிக் காலம்வரை ஆண்களின் வேட்கைகளுக்குப் பலியான பெண்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. அது துரியோதனன் சபையில் பாஞ்சாலிக்கு கிருஷ்ணன் தந்த புடவையைவிட நீளமானது. அப்படியொரு துயரக் கதாபாத்திரம்தான் அன்னலட்சுமி. பெண்ணுக்குத் துணையாக வந்துசேர வேண்டிய ஆணினம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்ணுக்குத் துன்பத்தையே கொண்டுவந்து சேர்ப்பது ஏன் என்பது வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று. வீட்டில் நிம்மதியை நிலைநிறுத்த பெண்கள் தொடர்ந்து போராடுவார்கள்; ஆண்களோ அதை முட்டாள்தனமாகச் சூறையாடுவார்கள். இங்கே பெண்களின் நிலை சூறையில் மாட்டிய மாடவிளக்கு போன்றது. எல்லோருக்கும் ஒளிதந்து சிறு ஊதலில் சட்டென்று அணைந்துவிட்ட மாடவிளக்கு அன்னலட்சுமி. முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் குடிகொண்ட குடும்பத்து ஆண்களால் அவதிப்படும் பெண்ணினத்தில் ஒருத்தி அவள்.

காளை போன்ற பெண்

மகிழ்ச்சியாகத் தொடங்கிய அன்னலட்சுமியின் மணவாழ்க்கை மறு நாளே மங்கிக் கரிபிடித்து பொலிவிழந்துபோனது. அதற்கு அவள் காரணமல்ல. அவள் யாரையெல்லாம் நேசித்து போஷித்து வளர்த்தாளோ அவர்களாலேயே அவள் மூச்சடங்கியது. சிறிது சிறிதாக அவர்களுக்காக விட்டுக்கொண்டிருந்த மூச்சை மொத்தமாக அவள் நிறுத்திவிட்டாள். இப்படி எத்தனையோ அன்னலட்சுமிகளைக் குடும்பங்கள் தின்று செரித்திருக்கின்றன. அந்தச் சோகத்தை எல்லாம் கிளறிவிடுபவளாக அன்னலட்சுமி இருக்கிறாள். அவள் அல்லல்பட்டதற்குக் காரணம் விதி என்று கூறி ஆண்கள் தப்பித்துக்கொள்ள இயலாது. ஏனெனில், அன்னலட்சுமியைக் காப்பாற்றக் குரல்கொடுத்த வீட்டுப் பெண்களின் சத்தம் மண்ணாசை குடியேறிக் கிடந்த ஆண் மனங்களைச் சென்றுசேரவே இல்லை.

அன்னலட்சுமி இயற்கை அழகுகூடிய கிராமத்து நாற்றுபோல் செழித்து வளர்ந்துநின்ற இளமங்கை. சொரிமுத்து என்ற ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்துப் பராமரித்தவள். இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் காளைபோல் வளைய வந்தவள். குடும்பத்தில் அவளுடைய பேச்சுக்குத் தனி மரியாதை. வீட்டின் ஆண்களை எல்லாம் அதட்டி உருட்டி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள். அப்படி எல்லாம் அவளைக் கொண்டாடியவர்களே அவளைச் சீரழித்தார்கள். அவளது பேச்சு ஏன் எடுபடாமல் போச்சு? குடும்பத்தின் சூதுவாதை அவள் கண்டறிந்துகொண்டாள்; தன் சித்தப்பா கொத்தாளத் தேவரின் வஞ்சகத்தை அவள் மோப்பம் பிடித்துவிட்டாள். இவை போதாதா? குடும்பத்துக்கு எதிரான முடிவுகளைப் பெண்கள் எடுக்கத் துணிந்தால், ஆண்கள் தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

“நான் பெரிய இடத்தில் வாக்கப்பட்டு மகாராணி கணக்கா வாழப் போறவ, உன்ன மாதிரி சண்டியனுக்கா வாக்கப்படுவேன்” என்று கேட்ட அன்னலட்சுமி கடைசியில் அந்தச் சண்டியருக்குத்தான் வாக்கப்பட்டாள். அந்தச் சண்டியர் விருமாண்டி. அவனது 12 வயதில் ஆத்தா செத்துப் போனதால், அய்யா அவனை சிங்கப்பூர் கூட்டிச் சென்றார். அவர் இறந்தவுடன் அங்கே ஏற்பட்ட சிக்கலால் ஊருக்குத் திரும்பியவனை அப்பத்தா சுப்புத்தாய் கவனித்துக்கொண்டார். அவனிடம் இருந்த நிலத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும் கிணறு ஒன்று இருந்தது. அவனும் அப்பத்தாவும் மட்டும்தான் இருந்தார்கள். அந்த நிலத்தின் மீது அன்னலட்சுமியின் சித்தப்பா கொத்தாளத் தேவருக்கு ஒரு கண். அதே நிலத்தைப் பக்கத்து ஊரான நல்லம நாயக்கனூரைச் சேர்ந்த நல்லம நாயக்கரும் வாங்க விரும்பினார். இந்த மண்ணாசைதான் அந்த இரண்டு ஊர்களுக்குமான பகையாகிப்போனது. இதில் எந்தப் பாவமும் அறியாத அன்னலட்சுமி மண்ணுக்குள் புதைந்தும்போனாள். சிறையில் டாக்டர் ஏஞ்சலாவிடம் விருமாண்டி, “என்னப் பெத்த அவ இருந்திருந்தா நான் இங்க வந்திருக்க மாட்டேன். அவ நின்டு சாட்சி சொல்லியிருந்தா எந்தப் பொய்யும் ஜெயிச்சிருக்காது” என்று சொன்னது சத்தியமான வாசகம்.

வஞ்சகத்தால் வீழ்ந்த காதல்

ஜல்லிக்கட்டில் தனது மாட்டை அடக்கிய விருமாண்டி, அன்னலட்சுமியிடம் வந்து சேர்ந்தபோது அவனது முதுகில் கொத்தாளத் தேவரின் அரிவாள் சொருகியிருந்தது. அவனது உயிரைக் காப்பாற்றியவள் அவள்தான். அந்த நன்றியால் அன்னலட்சுமியைச் சந்திக்க வந்த விருமாண்டியுடனான தொடர் சந்திப்பு காதலாகத் தொடர்ந்து திருமணத்தில் முடிந்து அன்னலட்சுமியின் மரணத்தில் முற்றுப்புள்ளியானது. விருமாண்டியின் வாழ்வோ மரண தண்டனைக் கயிற்றில் ஊசலாடியது. சுபாஷ் சந்திரபோஸ் பற்றியெல்லாம் தெரிந்துவைத்திருந்த விருமாண்டியால் கொத்தாளத் தேவரின் நயவஞ்சகத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. விருமாண்டியின் நிலத்தை நல்லம நாயக்கர் வாங்கிவிடக் கூடாது என்பதற்கான சதிவேலையில் ஈடுபட்டார் கொத்தாளத் தேவர். இது தொடர்பான பஞ்சாயத்துக் கூட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. நடந்ததை அறிந்த அன்னலட்சுமி, விருமாண்டியிடம், “இந்த மாட்டுக்கும் ஒனக்கும் என்ன வித்தியாசம். இது வாடிவாசலைத் தெறந்தா போய் முட்டிபுறும். அதான நீயி” என்றதுடன் பஞ்சாயத்துக் கூட்டத்தில் தன் சித்தப்பனைப் பற்றிக் கொஞ்சம் நிசம் பேசிவிட்டார்கள் என்பதையும் கூறுகிறாள். அத்துடன் நல்லம நாயக்கர் மீது விருமாண்டி போட்ட வழக்கைத் திரும்பப் பெறச் சொல்கிறாள்; மன்னிப்பும் கேட்கக் கோருகிறாள்.

அன்னலட்சுமி சொன்னதற்காக மன்னிப்பு கேட்க கோட்டைராசு தோட்டத்துக்குச் செல்கிறான் விருமாண்டி. அப்போதும் உள்ளே புகுந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறான் கொத்தாளன். பெரும் கொலைச் சம்பவம் அரங்கேறிவிடுகிறது. 24 பேரை கொத்தாளன் கொன்றபோதும் பழியை விருமாண்டி மீது போடுகிறான். தான் மன்னிப்பு கேட்க கோட்டைராசு தோட்டத்துக்கு வந்த உண்மையைக் நீதிமன்றத்தில் வீருமாண்டி கூறியிருந்தால் கொத்தாளன் மாட்டிக்கொண்டிருப்பான். ஆனால், கொத்தாளனின் மனைவி விருமாண்டியின் காலில் விழுந்து கதறியதால், நீதிமன்றத்தில் பொய் சொல்லிவிடுகிறான் விருமாண்டி. நீதிமன்றம் அவர்களை விடுவித்துவிடுகிறது. ஆனால், விருமாண்டியை மனசாட்சி கேள்வி கேட்கிறது. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து எங்கேயாவது செல்ல விரும்பும் விருமாண்டியுடன் செல்கிறாள் அன்னலட்சுமி. வழியில் கோயிலில் மணமுடித்துவைக்கிறார் பூசாரி.

தன் மனைவியுடன் கூடிக்குலவிய விருமாண்டி அவளைப் பலவந்தமாகக் கடத்தி வந்து வல்லுறவில் ஈடுபட்டதாக வழக்கை ஜோடித்துவிடுகிறார்கள். அன்னலட்சுமியைத் தூக்கிவந்து அவளது தாலியை அறுத்தெறியும் கொத்தாளன் அவள் கழுத்தில் கோட்டைச்சாமியைத் தாலி கட்டச் செய்கிறான். இந்தக் கொடுமை பொறுக்காத அன்னலட்சுமி ஆவியை விட்டுவிடுகிறாள். எந்த விருமாண்டியைப் பாதுகாக்க விரும்பினாளோ அந்த விருமாண்டிக்குத் தூக்கு தண்டனை கிடைக்கிறது. மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய திரைப்படம் ‘விருமாண்டி’. அது சட்டத்தால் தண்டிக்கப்பட்ட விருமாண்டியின் தூக்கு தண்டனைக்கு எதிராகத்தான் பேசியது. ஆனால், ஒரு குற்றமும் செய்யாமல் தூக்குக் கயிற்றில் தன்னைத் தொங்கவிட்டுக்கொண்ட அன்னலட்சுமி போன்றோரும் அமைதியாக வாழ்வது எப்போது?

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

விருமாண்டிநட்சத்திர நிழல்கள்கமல்அபிராமிகாளை போன்ற பெண்வஞ்சகத்தால் வீழ்ந்த காதல்

You May Like

More From This Category

More From this Author