Published : 09 Nov 2019 07:57 AM
Last Updated : 09 Nov 2019 07:57 AM

வியர்வையும் மணக்கும்

நிஷா

நாகரிக உலகில், வியர்வை நாற்றம் அவமானகர மானதாகக் கருதப்படுகிறது. இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல வியர்வை நாற்றம். அது மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒன்று. பணக்காரரோ ஏழையோ, ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் வியர்வை நாற்றத்திலிருந்து தப்பிக்க இயலாது. நறுமணம் மிக்க சோப்புகள், வித விதமான வாசனைத் திரவியங்கள் இன்று நுகர்வோர் சந்தையில் மலிந்து இருந்தாலும், வியர்வை நாற்றம் ஒரு தீராத தலைவலியாகவே இன்றும் தொடர்கிறது.

உடலிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து வெளிப்படுவதே வியர்வை நாற்றம். நம்முடைய சருமத்தில் எக்ரைன், அபோக்ரைன் என்று இரண்டு விதமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் எக்ரைன் சுரப்பி சுரக்கிறது. அக்குள், மார்பு, பிறப்புறுப்பு பகுதியில் அபோக்ரைன் சுரப்பி சுரக்கிறது. ஆண், பெண் என இரு பாலருக்கும் அபோக்ரைன் சுரப்பி பருவ வயதுக்குப் பிறகே உருவாகிறது. குழந்தைகள்மீது துர்நாற்றம் இல்லாததன் காரணம் இதுவே.

நாற்றத்தின் காரணம்

கொழுப்பு, புரதங்களுடன் கெட்ட பாக்டீரியாக்கள் இணைவதால், வியர்வையில் நாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகளில் வியர்வை, மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும்.

நாற்றத்தைத் தவிர்க்க முடியுமா?

முடியும். வீட்டில் இருக்கும் எளிய பொருள்களைக் கொண்டு உடலிலிருந்து ஏற்படும் நாற்றத்தை மட்டுமல்லாமல்; வியர்வையையும் தவிர்க்க முடியும். நாற்றத்தைப் போக்கும் வழிமுறைகளின் தொகுப்பு இங்கே:

சுத்தமாக இருங்கள்

தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. வாசனை சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, கிருமிகளை நீக்கும் சோப்புகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். குளித்த பிறகு ஈரம் போகும்படி அக்குளை நன்கு துடைப்பது அவசியம். மாதம் இரு முறையோ ஒரு முறையோ அக்குளில் இருக்கும் முடிகளை நீக்க வேண்டும். முடிகளை ட்ரிம் செய்வதைவிட, முற்றிலும் நீக்குவதே சிறந்த வழிமுறை. தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

தயிர்

கெட்டித்தயிருடன் பன்னீர் கலந்து நன்றாகக் குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிப்பது நல்ல பலன் தரும். அக்குளில் சோப்புக்குப் பதிலாக, பாசிப்பருப்பு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.

வேப்பிலை

வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை வேப்பிலை விரட்டி அடிக்கும். நறுமண சோப்புக்குப் பதிலாக, வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து அக்குளில் தடவிக் குளிப்பது நல்ல பலன் தரும். இதனால் நறுமணமோ துர்நாற்றமோ ஏற்படாது.

புதினா

புதினா இலையைத் தயிருடன் சேர்த்து அரைத்து அக்குளில் பூசி, பின் காயவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவினால், வியர்வை நாற்றம் நம்மை அண்டவே அண்டாது. இதை அக்குளுக்கு மட்டுமல்லாமல் கழுத்துப் பகுதியைச் சுற்றியும் பூசிக்கொள்ளலாம்.

மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. குளித்த பின், மஞ்சளைக் குழைத்து அக்குளில் பூசிக்கொள்ளலாம். இது, வியர்வைச் சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். வியர்வை நாற்றத்தை வெகுவாகக் குறைக்கும்.

நறுமணப்பொடி

சந்தனப் பொடி, வெட்டிவேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, பன்னீர் உள்ளிட்ட அனைத்தையும் குழைத்து அக்குளில் தடவி நன்றாகக் காய்ந்த பிறகு குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தை விரட்டி அடிக்கலாம்.

எலுமிச்சை

குளிக்கும் தண்ணீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றைக் கலந்து, கால்மணி நேரம் கழித்துக் குளிப்பது வியர்வை நாற்றத்தை வெகுவாகக் குறைக்கும். எலுமிச்சை, கிருமிகளை அழிப்பதுடன் மட்டுமல்லாமல்; உடலுக்கு நறுமணத்தையும் அளிக்கும்.

சந்தனம்

இரவில் தூங்கும் போது, சந்தனத்தை நீர் விட்டுக் குழைத்து அக்குளில் தினமும் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து சந்தன மணம் கமழும். தரமான சந்தனத்தைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால், சந்தனப் பொடியை பன்னீரில் குழைத்து அக்குளில் பூசிக்கொள்ளலாம்.

நிரந்தரத் தீர்வு

வியர்வை நாற்றம் அனைவருக்கும் பொதுவானது, அதைத் தவிர்க்க முடியாது என்பது போன்ற கற்பிதங்களை, நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள இந்த எளிய பொருட்கள் போக்குவதோடு மட்டுமல்லாமல்; நறுமண சோப்புகள், வாசனைத் திரவியங்கள், டியோடரன்ட் போன்றவற்றின் தேவையையும் அவை நீர்த்துப் போகச் செய்கின்றன. மேலே உள்ள எளிய குறிப்புகளைக் கடைப்பிடித்தால், வியர்வை நாற்றத்தால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பலருக்கு அதுவே நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x