Published : 07 Nov 2019 12:15 PM
Last Updated : 07 Nov 2019 12:15 PM

தெய்வத்தின் குரல்: முமுட்சு யார்

மாயையிலிருந்து விடுபட்டு பிரம்மமாவதிலேயே பூரா மனசையும் செலுத்தி அதே ஈடுபாடாக இருப்பதுதான் முமுக்ஷுதை. அப்படி இருப்பவன் முமுட்சு. ஆசார்யாள் விவேக சூடாமணியில் கொடுத்திருக்கும் வரையறை இதுதான்.

அஞ்ஞானம் என்பதே மாயை. மாயையால்தான் பரமாத்மாவுக்கு வேறேயாக தனியாக ‘நான்’ என்று ஒன்று இருப்பது போன்ற அகங்காரம் கற்பிக்கப்படுகிறது. அனர்த்த பரம்பரைக்கு இந்த அகங்காரம்தான் ஆரம்பம். சூட்சுமமாக எண்ண ரூபத்திலே இருக்கும் அந்த அகங்காரத்தில் ஆரம்பித்து ஸ்தூலமாக ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கும் தேகத்தில் போய் அந்தப் பரம்பரை முடிகிறது.

தேகத்தையே ‘தான்’ என்று நினைக்கப் பண்ணுவது அஞ்ஞானத்தின், அதாவது மாயையின், முடிவான காரியம். பரம சூட்சுமமான அகங்காரத்திலிருந்து நன்றாகத் தெரிகிற ஸ்தூல தேகம் ஈறாக அஞ்ஞானமானது பந்தங்களைக் கல்பித்து ஜீவனைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இதைத்தான் ‘அஹங்காராதி தேஹாந்தான் பந்தான் அஜ்ஞான கல்பிதான்’ என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து, இந்தக் கட்டிலிருந்து, விடுபடுகிற ஆசையே – ‘மோக்தும் இச்சா’: விடுபட வேண்டுமென்ற இச்சையே – ‘முமுக்ஷுதா’: முமுக்ஷுதை எனப்படுவது. அஞ்ஞான பந்தத்திலிருந்து விடுபடத் தாபத்தோடு ஆசைப்படுவதைத்தான் அவர் முமுக்ஷுதை என்பார்; அப்படி ஆசைப் படுபவனைத் தான் முமுக்ஷு என்பார்.

அழியாத அடிப்படை

‘எது உண்மையோ அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சமாசாரம் நல்லதோ கெட்டதோ, துக்கமோ சந்தோஷமோ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு ப்ரவாஹம் நிலைகொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறதென்றால், இதற்கு ஆதாரமாக நிலையாயுள்ள ஏதோ ஒன்றின் மேலேதானே இது நடக்க வேண்டும்? ஜீவன் என்றிருக்கிற நம் விஷயத்திலும் அதுபோலவே, அழிந்துபோகிற நமக்கு உயிரை, அறிவை, சக்தியைக் கொடுக்கிற ஒரு அழியாத அடிப்படை இருக்கத்தானே வேண்டும்? அது என்ன என்று கண்டுபிடிக்கணும்’ என்று, ‘ஒரு மஹா சத்தியத்தை நாம் பிடிக்க வேண்டும்.

அப்படிப் பிடிக்க முடியும்’ என்ற உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் கம்பீரமாக, தீரமாக தேடிக்கொண்டு புறப்பட்டவர்கள், நம்முடைய மூல புருஷர்கள். சத்யத்திற்காகவே சத்யம் என்று புறப்பட்டவர்கள். ‘துக்கம் இருக்கே: த்ருஷ்ணை [வேட்கை] இருக்கே; இதுகள் கஷ்டப் படுத்துகிறதே!’ என்று அழுதுகொண்டு, அந்த அழுகையிலிருந்து விடுதலை காண வேண்டுமென்று, அந்த விடுபட்ட நிலை எப்படியானாலும் சரியென்று புறப்பட்டவர்களில்லை.

சித்த விருத்திகள் போட்டுப் பிடுங்குகிறதே என்று நொந்து கொண்டு அதிலிருந்து விடுபட்டு, எப்படியாவது விடுபட்டு, அப்புறம் எங்கே போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டவர்களில்லை. பொய்யான மாயை மறைத்துக் கொண்டிருக்கிற சத்யமான ஆத்ம ஜ்யோதிஸைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றே புறப்பட்டவர்கள்; மற்றவர்களையும் அப்படிப் புறப்படச் சொன்னவர்கள்…

அழுது கொண்டு புறப்பட்டவர் என்று நான் சொன்னவர் புத்தர்தான். ‘போத’த்திற்காக, அதாவது பாஸிடிவான ஞானத்திற்காகத் தான் அவர் புறப்பட்டுப் போனது, அப்புறம் ‘போதி’ மரத்தின் கீழேயே ஞானம் பெற்றார், அதனாலேயே ‘புத்தர்’ என்று பெயர் பெற்றார் என்றுதான் சொல்கிறார்கள். அந்த மரத்துக்குக் கீழே உட்கார்வதற்கு முன்னால் அவரே சொன்ன வசனமாக அப்படி ஒரு சுலோகம் சொல்லியிருக்கிறார்கள் – தீவிர முமுக்ஷுதைக்கு இதைவிட உதாரணமுண்டா என்று நாமும் கொண்டாடும்படியாக:

இஹாஸநே சுஷ்யது மே சரீரம்
த்வகஸ்தி மாம்ஸாநி லயம் ப்ரயாந்து |
அப்ராப்ய போதம் பஹூகல்ப துர்லபம்
நைவாஸநாத் காயமிதம் சலிஷ்யதி || 2

“இந்த ஆஸனத்திலேயே இந்த உடம்பு வற்றிச்சுக்காகப் போகட்டும். (‘சுஷ்கம்’என்பதிலிருந்து தான் ‘சுக்கு’ வந்தது. இஞ்சி வற்றி வற்றிச் சுஷ்கமாவதால் அப்படிப் பேர்.) தோலும், எலும்பும், மாம்ஸமும் நசித்தே போகட்டும். ‘போதம்’ பெறாமல் – எத்தனையோ கல்ப காலத்திற்கு அப்புறமே அதைப் பெற முடியுமென்றாலும் சரி, அப்படிப் பெறாமல் – இந்த இடத்தைவிட்டு இந்த உடம்பு நகராதாக்கும்!” என்று மஹா த்ருட சங்கல்பத்துடன் சொன்னாராம். அந்த விஷயம் எப்படியானாலும் நம்முடைய உபநிஷத் ரிஷிகள் தீரர்களாகப் பரம சத்யத்தைக் கண்டு கொள்ளவே சகலத்தையும் விட்டுப் புறப்பட்டவர்கள்.

தூக்கம் என்பது தானாக எங்கேயோ ஓடிப்போய்விட்டு அப்புறமா விழிப்பு உண்டாகிறது? டக்கென்று விழிப்பு உண்டாகிறது? டக்கென்று விழித்துக் கொண்டு விடுகிறோம். அதனாலேயே தூக்கம் போய்விட்டது என்று தெரிந்து கொள்கிறோம். அப்படித்தான் இதுவும்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x