Published : 06 Nov 2019 12:34 PM
Last Updated : 06 Nov 2019 12:34 PM

கதை: உயிர்களைக் காப்பாற்றிய நண்பர்கள்

கொ.மா. கோதண்டம்

மேற்குமலை ஐயனார் அருவி அருகே இருக்கும் வனத்தில் ஆதிவாசிகளின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. ஓரடி உயர மண் சுவர் மீது புல் வேய்ந்த குடிசைகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். அங்கிருந்து வந்துகொண்டிருந்தான் நீலன். அவன் தோளில் ஜம்மென்று அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு குரங்கு.

குரங்கு என்றால் நீலனுக்குக் கோபம் வந்துவிடும். சின்னு என்றுதான் அழைக்கச் சொல்வான். அவனுக்கு வலது பக்கத்தில் வரையாடு ஒன்றும் இடது பக்கத்தில் நாய் ஒன்றும் வந்துகொண்டிருந்தன. இவை இரண்டும் நீலனின் புதிய நண்பர்கள். இவை நீலனுக்கு நண்பர்களான கதை தெரியுமா?

ஒரு நாள் வனத்தில் கிழங்கு தோண்டுவதற்காகக் கூர்மையாக்கப்பட்ட கம்பு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு, ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டிருந்தான் நீலன். எங்கிருந்தோ ஒரு தீனமான விலங்கின் குரல் கேட்டது. உடனே சத்தம் வந்த இடம் நோக்கிப் போனான்.

கீழிருந்தே இரண்டு கிளைகளாகப் பிரிந்த தானாங்காய்ச்சி மரம் நின்றுகொண்டிருந்தது. அந்தக் கிளைகளுக்கு நடுவே குரங்கு ஒன்று சிக்கிக்கொண்டிருந்தது. உடனே நீலன் கிளைகளைப் பலமாகப் பிரித்தான். மெதுவாக வெளியே வந்தது குரங்கு. எவ்வளவு நேரம் மாட்டிக்கொண்டிருந்ததோ தெரியவில்லை. மிகவும் பசியோடு காணப்பட்டது.
குரங்கைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்தான் நீலன். ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி கிழங்கை எடுத்தான். ஓடை நீரில் கழுவிய பிறகு, குரங்குக்குக் கொடுத்தான். வேகமாக வாங்கிச் சாப்பிட்டது. அதை அங்கேயே விட்டுவிட்டு நடந்தான். ஆனால், குரங்கு அவனை விடுவதாக இல்லை. பின்தொடர்ந்து வந்தது. அன்று முதல் நீலனின் செல்லச் சின்னுவாக மாறிவிட்டது.

அருவியில் குளிக்க வந்தவர்களுடன் ஊர் நாய் ஒன்றும் வந்தது. ஆதிவாசிகளின் குடிசைப் பக்கம் சென்றது. ஒரு சட்டிக்குள் எதையோ சாப்பிடுவதற்குத் தலையைவிட்டது. சட்டிக்குள் தலை மாட்டிக்கொண்டது. தலையையும் எடுக்க முடியாமல், பாதையும் தெரியாமல் நாய் அப்படியே படுத்துவிட்டது.
நாயைத் தேடிவந்தவர்கள், கிடைக்கவில்லை என்று கிளம்பிப் போய்விட்டனர். நாய் இருந்த இடத்துக்கு வந்த ஒரு பாட்டி, நீலனை அழைத்தார். அவன் ஓடிவந்து, சட்டியை எடுத்து நாயை விடுவித்தான். அன்று முதல் நாய் அவனைவிட்டு நகரவில்லை.

ஒருநாள் வனத்தில் நடந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு வரையாடு மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தான் நீலன். அது பெரும்பாலும் மனிதர்களுக்கு அருகே வராது. பாறை இடுக்குகளில்தான் தங்கியிருக்கும். மனிதர்களாலும் மற்ற விலங்குகளாலும் நடக்க முடியாத சரிவான பாறைகளில்தான் நடந்து செல்லும். அதன் கால் குளம்புகள் சரிவான பாறைகளிலும் பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன.

மேய்ந்துகொண்டிருந்த ஆட்டைக் கண்டதும் அதனுடன் சிறிது நேரம் விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தான் நீலன். நீண்ட புற்களைப் பறித்தான். அவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு, ஒரு புதர் அருகே அமர்ந்துகொண்டான். புல்லைப் பார்த்த ஆடு, நீலனிடம் வந்தது. ஆர்வமாகப் புல்லை மேய்ந்தது. சட்டென்று ஆட்டைக் கட்டிப்பிடித்தான் நீலன். ஆடு திமிறியது. ஆட்டின் உடலைக் கைகளால் நீவிவிட்டதும் எதிர்ப்பைக் கைவிட்டது வரையாடு. அப்படியே அவனோடு ஒட்டிக்கொண்டது. அன்று முதல் வரையாடு நீலனுடனே தங்கிவிட்டது.

ஒருநாள் இரவு நல்ல மழை. வரையாடும் நாயும் அங்கும் இங்கும் ஓடின. நீலனின் குடிசை வாசலில் நின்று குரல் கொடுத்தன. நீலனுக்கு ஏதோ ஆபத்து என்று புரிந்தது. சட்டென்று குடிசைகளில் இருப்பவர்களை எல்லாம் கோயில் மண்டபத்துக்குச் செல்லச் சொன்னான்.

மழை வலுத்தது. குடிசைகளுக்கு அருகில் இருந்த உயரமான மண்மேடு சரிந்து, குடிசைகளை மூடிவிட்டது. மழை நின்றதும் திரும்பி வந்த ஆதிவாசி மக்கள், வரையாட்டையும் நாயையும் நன்றியோடு வணங்கினார்கள். நீலனின் நண்பர்கள் மக்களைக் காத்த தேவர்களாக மாறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x