Published : 04 Nov 2019 12:59 PM
Last Updated : 04 Nov 2019 12:59 PM

குழந்தைகளுக்கும் சேமிக்க கற்றுத் தாருங்கள்!

ஆர். வெங்கடேசன்

பெரும்பாலான பெற்றோர்களின் கவலையே தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றித்தான். அவர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பது, நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தருவதோடு அதை அவர்கள் பின்பற்ற வேண்டும் என குழந்தைகள் பற்றிய கவலை பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்கிறது. இவைஅனைத்துக்கும் மேலாக குழந்தைகள் பணத்தை சிறப்பாக கையாள்வார்களா என்ற கவலை பெரும்பாலான பெற்றோர்களை வாட்டி வதைக்கிறது.

ஆனால், குழந்தைகளுக்கு நிதியைக் கையாள கற்றுத் தருவது என்பது ராக்கெட் தொழில் நுட்பம் போன்று மிகவும் கடினமான விஷயம் அல்ல. சிறு வயதிலிருந்தே பணத்தைப் பற்றியும் அதை கையாளும் விதம் பற்றியும் சிறுகச் சிறுககற்றுத் தருவதன் மூலம் வளர்ந்து பெரியவர்களாகும் போது நிதியைக் கையாள்வார்களா என்ற கவலை உருவாவதைத் தவிர்க்கலாம். அத்தகைய நிலையை எட்டுவதற்குரிய சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

கதை சொல்லுங்கள்

குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விஷயங்களைக் கற்றுத் தருவதை அவர்களது 5 வயதிலிருந்தே தொடங்கிவிடுங்கள். சிறு குழந்தைகளுக்கு கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். எறும்பும் வெட்டுக்கிளியும், மூன்று பன்றி குட்டிகளும் தாகத்தில் தவித்த காகம் உள்ளிட்ட கதைகளை குழந்தைகளுக்குக் கூறுங்கள். இந்தக் கதைகளின் நீதியை அவர்களுக்கு தெளிவாக விவரியுங்கள். குறிப்பாக எறும்பும் வெட்டுக்கிளியும் கதையில் நாளைய வெற்றிக்கு சிறிதளவு சேமிப்பு அவசியம் என்பதை புரிய வையுங்கள். அதாவது நாளைய தேவைக்கு இன்றே வேலை செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்துங்கள்.

நீண்ட காலம் குறித்து திட்டமிடாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்விதம் தோல்வியைத் தழுவினர் என்பதை புரிய வையுங்கள். கதை சொல்வதில் இப்போதைய தலை முறையினருக்கு தடுமாற்றம் இருக்கலாம், அல்லது குழந்தைகளுக்கு நிதி தேவையை உணர்த்தும் கதைகளுக்கு எங்கே செல்வது என்ற தயக்கமும் இருக்கலாம். இதைப்போக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நிதிக்கல்வி என்ற முயற்சியில் பல்வேறு வயதுப்பிரிவினருக்குமான கதைகளை அதாவது பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளுக்
கேற்ற கதைகளை உருவாக்கியுள்ளது. இத்தகைய கதைகள் ரிசர்வ் வங்கியின் இணைய பக்கத்தில் உள்ளன.

அதில் ராஜுவும் பணம் காய்ச்சி மரமும், மணி குமாரும் நிதிக் கொள்கையும், ராஜுவும் நிலவு ஏணியும், ராஜுவும் மந்திர ஆடும், மணி குமார் உங்கள் நிதி பாதுகாவலன், ராஜுவும் நண்பன் ஏடிஎம்-மும், ராஜுவும் கடன் அட்டையும் என்ற தலைப்பில் கதைகளை வெளியிட்டுள்ளது. கதைகள் அனைத்தும் நிதி மேலாண்மையின் தத்து
வத்தை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வகையில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

உண்டியல்

குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை முதலில் கற்றுத் தர உதவுவது உண்டியல் முறைதான். வங்கிகளே இப்போது பன்றிக் குட்டி உண்டியலை அளிக்கின்றன. இந்த உண்டியலில் பெற்றோர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட காசைப் போட்டு சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம். நண்பர்கள், உறவினர்கள் தரும் தொகையை இதில் சேமிக்கும்படி அறிவுறுத்தலாம். குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் சேமித்த தொகையை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு விருப்பமானதை வாங்கித் தரலாம்.

ஒருவேளை அவர்கள் ஆசைப்படும் பொருளின் விலையை விட அவர்களது சேமிப்பு குறைவாக இருந்தால், அந்தப் பொருளின் விலை அளவுக்கு சேமித்த பிறகு வாங்கலாம் என குழந்தைகளுக்கு சொல்லித் தரலாம். அப்போதுதான் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதில் உறுதித் தன்மை குழந்தைகளிடம் உருவாகும்.

குழந்தைகள் தாங்கள் விரும்பிய பொருளை தங்களது சேமிப்பிலிருந்து வாங்குவதற்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தங்கள் சேமிப்பிலிருந்து அவர்கள் உபயோகமற்ற பொருளை வாங்கினாலும் அதை அனுமதியுங்கள். அந்தப் பொருளை வாங்கிய பிறகு அதற்கு ஏன் ஆசைப்பட்டோம் என குழந்தையே உணரும்போது அடுத்ததாக அத்தகைய பொருளின் மீது நாட்டம் குறையும். இதன் மூலம் அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பதை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

செயலி மூலம் பயிற்சி

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஆன்லைனில் இப்போது ஏராளமான செயலிகள் (ஆப்) வந்துள்ளன. மை பிக்கி பேங்க் சேவிங்ஸ் டிராக்கர் (My Piggy Bank Savings Tracker) எனும் செயலியானது இதில் ஒன்று. குழந்தைகள் தங்கள் நிதி இலக்கை எந்த அளவுக்கு எட்டியுள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு குழந்தையின் இலக்கு அதாவது விரும்பும் பொருள், அதற்கு தேவைப்படும் நிதி, தற்போது எவ்வளவு தொகை சேமிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கை எப்போது எட்ட முடியும் என்பதை இந்த செயலி உணர்த்தும். குழந்தையின் சேமிப்பு அளவு அது எந்த அளவுக்கு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்பதோடு குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்பு அலெர்ட்களும் இந்த செயலியிலிருந்து வரும். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பட விளக்கங்களும் இந்த செயலியில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

குழந்தைகள் சேமிப்புக் கணக்கு

இப்போது பெரும்பாலான வங்கிகளில் குழந்தைகளுக்கும் சேமிப்புக் கணக்கு தொடங்கி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் உங்கள் குழந்தைகள் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு நீங்கள் உதவுங்கள். அதன் மூலம் அவர்கள் நிதியை எவ்விதம் கையாள்கின்றனர் என்பதை கவனியுங்கள். உதாரணத்துக்கு ஹெச்டிஎஃப்சி வங்கியில் குழந்தைகள் சேமிப்புக் கணக்குக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன. குறிப்பாக டெபிட் கார்டு, கல்வி காப்பீடு, மணி மேக்ஸிமைஸர் மற்றும் இலவச இணையதள வங்கி சேவை உள்ளிட்டவற்றை அளிக்கிறது.

இதில் ரூ.1 லட்சம் வரையிலான தொகை கல்வி காப்பீடாக அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ திடீரென உயிரிழந்தால் குழந்தைகளுக்குக் கிடைக்கும். மணி மேக்ஸிமைஸர் திட்டத்தில் குழந்தையின் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை ரூ.35,000-த்துக்கும் அதிகமானால் அதில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் உள்ள தொகை நிரந்தர வைப்புக் கணக்கில் ஓராண்டுக்கு வைக்கப்படும்.

இதேபோல கனரா வங்கியின் ஜூனியர் சேமிப்புக்கணக்கில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி சிறுவர், சிறுமியர்களிடம் சேமிக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தபால் துறையால் தொடங்கப்பட்டதுதான் சஞ்சாயிகா சிறு சேமிப்புத் திட்டமாகும்.
கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சஞ்சாயிகா சிறு சேமிப்புத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு சேமிப்பதால் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள் சேமிக்கும் தொகையை பெற்றோர்கள் எடுத்து செலவழிக்கக் கூடாது. அது அவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கும். தாங்கள் சேமிக்கும் தொகையை தாங்களே செலவழிக்கலாம் என்ற எண்ணம் வலுப்பெறும்போதுதான் சேமிக்கும் வழக்கமும் வேரூன்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x