Published : 04 Nov 2019 12:29 PM
Last Updated : 04 Nov 2019 12:29 PM

எண்ணித் துணிக: நிதி தேடி நெடிய பயணம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஐடியா ரெடி. பிசினஸ் பிளான் ரெடி. பிசினஸ் மாடல் கேன்வாஸ் ரெடி. கவுண்டமணி ஸ்டைலில் ஸ்டார்ட் அப்புக்கு ஸ்டார்ட் மியூசிக் சொல்லி ஸ்டார்ட் செய்துவிடலாம்தான். அதற்கு தேவையான முதலீடு ரெடியாய் கைவசம் இருந்தால். இல்லாதவர்கள் பணத்திற்கு எங்கு போவது? தமிழா எழுந்து வா, நிதி தேடி நீண்ட பயணம் செல்வோம்!

உங்கள் சமர்த்துக்கும் சாமர்த்தியத்துக்கும் ஏற்றவாறு ஸ்டார்ட் அப்புக்கு மூன்று வகையில் பணம் திரட்ட முடியும். முதல் வழி, ஈக்விட்டி. தொடங்க நினைக்கும் தொழில், அதன் ஐடியா போன்றவற்றை மதிப்பிட்டு உங்கள் தொழிலின் பங்குகளை உங்கள் தேவைக்கேற்ப முதலீட்டாளர்களுக்கு விற்பது. தொடங்காத தொழிலை எங்கிருந்து மதிப்பிடுவது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உங்கள் பிசினஸ் ஐடியா வித்தியாசமாக இருந்து அது வருங்காலத்தில் வளர வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுக்கிர திசை.

உங்கள் தொழிலுக்கு குரு பெயர்ச்சி. முதலீட்டாளர்கள் காசை கொண்டு வந்து கொட்டுவார்கள். இதை சமயோசிதமாக செலவழித்து சப்ஜாடாய் தொழில் செய்தால் உங்களுக்கும் நல்லது. உங்கள் தொழிலுக்கும் நல்லது. உங்கள் தொழில் வளர்ந்து அதனால் உங்கள் பங்குகளின் மதிப்பு வளரும் போது முதலீட்டாளர்களும் லம்பாக லாபம் பார்ப்பார்கள்.

ஈக்விட்டி பெறுவதில் ஒரு சின்ன முடிச்சு இருக்கிறது. முதலீட்டை மற்ற வரிடமிருந்து வாங்குவதால் நீங்கள் மட்டுமே உங்கள் தொழிலின் முதலாளி அல்ல. என் தொழில், நான் வைத்தது தான் சட்டம் என்று தனிக்காட்டு ராஜாவாக இருக்க முடியாது. முதலீடு செய்தவர்கள் உங்களுடன் அமர்ந்து சகட்டு மேனிக்கு கேள்வி கேட்டு குடாய்வார்கள். திருப்பித் தர தேவையில்லாத பணத்தை தந்துவிட்டு கேள்வி கேட்காதே என்று கூறினால், ஆபீஸ் ரூமில் அடித்து மீட்டிங் ரூமில் வைத்து மிதிப்பார்கள்! கை காசை போட்டு உங்கள் தொழிலை தொடங்கி அதை பெரியதாக வளர்க்கும் திட்டம் இருப்பவர்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து ஈக்விட்டி பெறுவதுதான் சமயங்களில் ஒரே வழியாகக்கூட இருக்கும்.

சின்னதாக தொடங்கி சில்மிஷமாக வளர்ந்து சிறப்பாக செயல்படும் பல ஸ்டார்ட் அப்புகள் இதைத்தான் செய்தன, செய்கின்றன. ஈக்விட்டி முதலீடு செய்தவர்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கவும் செய்வார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் முதலீட்டை கண்டமேனிக்கு கரைத்து கம்பெனிக்கு காரியம் செய்யாமல் கண்ணும் கருத்துமாய் செலவழித்து தொழிலை வளர்த்து அதோடு தங்கள் முதலீட்டையும் நீங்கள் வளர்க்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஏனெனில் உங்கள் தொழில் வளரும்போது அதன் பங்குகளும் வளரும். அந்த பங்குகளின் மதிப்பு வளரும் போது அதை அதிக விலையில் பிறருக்கு விற்று லாபம் ஈட்ட முடியும் முதலீட்டாளர்களால். ஒருகுறிப்பிட்ட காலத்துக்குள் தங்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத்தான் முதலீட்டாளர்கள் ஆசைப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்க. இதனால் தான் தங்கள் முதலீட்டை பாதுகாக்கும் விதமாகவும் தங்கள் லாபத்தை பெருக்கும் நோக்கத்துடனும் நீங்கள் தொழிலில் எடுக்கும் முக்கிய முடிவுகளை அலசி ஆழமாக ஆராய்ந்து ‘ஏண்டா இவர்களிடம் முதலீடு பெற்றோம்’ என்று சமயத்தில் நீங்கள் அழும் அளவுக்கு கிராஸ் கேள்வி கேட்டு கடுப்பேற்றுவார்கள்.

உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு டப்பு சேர்க்க இரண்டாவது வழி உண்டு. முக்காலும் உணர்ந்த முனிவர்கள் முதல் நம் மூதாதையர்கள் வரை முழுநேர பணியாக காலம்காலமாக முனகாமல் செய்து வருவது. வேறு என்ன, கடன் வாங்குவதுதான். ஈக்விட்டியை நீங்கள் திருப்பித் தர வேண்டாம். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும். சாமர்த்தியம் இருப்பவர்கள் கடன் கொடுத்தவர்களுக்கு கம்பி நீட்டி கடல் கலந்து லண்டன் சென்று செட்டிலாக முடியும் என்றாலும் அனைவருக்கும் அந்த பாக்கியம் வாய்ப்பதில்லை. கடன் வாங்கி தொழில் செய்யும் போது நீங்கள்மட்டும்தான் முதலீட்டாளர். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாய் கொடுத்
தாலும் சரி, கொடுக்க சிரமப்பட்டாலும் சரி, நீங்கள்தான் முதலீட்டாளர்.

கடன் வாங்கி தொழில் செய்வதில் இது ஒரு சவுகரியம். மூன்றாவது வழி தொழில் தொடங்க அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறுவது. சமீப காலமாக மெதுவாக வளர்ந்து வந்தாலும் அதிகம் பிரபலத்துவம் பெறாதவழி இது. யார் செய்த புண்ணியமோ தன்னால் மட்டுமே அனைவருக்கும் வேலை வாய்ப்பு தர முடியாது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கின்றன. ஸ்டார்ட் அப்புக்கள் தொடங்க ஏதுவான பிசினஸ் சூழலோடு தொழிலுக்கு ஐடியாவை கனவாக சுமந்து பணமில்லாத காரணத்தால் அந்த கனவுகள் கரைந்து போனால் நாட்டுக்குத்தான் நஷ்டம் என்பதை நம் அரசாங்கங்கள் அறிய தொடங்கி
யிருக்கின்றன.

குறிப்பாக மத்திய அரசு சமீப காலமாக சுமார் ஐம்பதுக்கும் அதிகமான ஸ்டார்ட் அப் உதவித் திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தியிருக்கின்றன. ‘முத்ரா’ வங்கிகள் முதல் பல புதிய திட்டங்கள் வரை சிறிய தொழில் முனைவோர்களுக்கு மானிய உதவி அளிக்கின்றன. அத்திட்டங்களைத் தேடிப் பிடித்து திரவியம் தேடுவது ஸ்டார்ட் அப் தொடங்குபவர் கையில். ஸ்டார்ட் அப்புக்கு பணம் சேர்க்கும் விதங்களை அடுத்த வாரமும் தொடர்வோம். சில்லறை சேர்க்கும் மேட்டரை எதற்கு சீரியல் போல் இழுக்கிறாய் என்பவர்களுக்கு, நிதி தேடி நீண்ட பயணம் செல்வோம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதை நினைவுபடுத்துகிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x