Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

முகங்கள்: இயற்கைக்கு உகந்த துணி நாப்கின்கள்

த.சத்தியசீலன்

மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று சொல்லும்போது பெருமிதமாகத்தான் இருக்கிறது. ஆனால், இயற்கையாக நடக்கிற உடலியல் நிகழ்வால் பெண்கள் மாதம்தோறும் அனுபவிக்கும் அவஸ்தையையும் அசௌகரியத்தையும் நினைக்கும்போது இதற்குத்தானா மாதவம் என்று தோன்றுகிறது.
பெண்கள் பருவம் அடைந்தது முதல் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலம்வரை மாதம்தோறும் மாதவிடாயை எதிர்கொள்கிறார்கள். குறைந்தது ஐந்து நாட்களுக்காவது அதை அனுபவித்தாக வேண்டும்.

ஆனால், நம் சமூகத்திலோ மாதவிடாய் குறித்து இயல்பாகப் பேசுவதே பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் நாட்களின் அவஸ்தை குறித்து எழுதினாலோ பேசினாலோ அது மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட உணர்வு எனக் கூறி எளிதாக ஆண்களாலும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட பெண்களாலும் புறந்தள்ளப்படுகிறது. அதனால்தான் பெண்கள் பலர் மாதவிடாய் குறித்து எதையும் வெளியே சொல்வதில்லை; ஆண்களுக்கும் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து எந்த அக்கறையும் இருப்பதில்லை.

சுகாதாரம் அவசியம்

மாதவிடாய் நாட்களில் தங்கள் வீட்டுப் பெண்கள் சுகாதாரத்துடன் இருக்க முடிகிறதா, உடலுக்கும் சூழலுக்கும் கேடு இல்லாத நாப்கின்களையும் துணிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்களா என்பது பற்றியெல்லாம் பலரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதற்கான விலையாகத் தங்களது ஆரோக்கியத்தைத்தான் பெண்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. அப்படியென்றால் மற்றப் பெண்கள் மாதவிடாய் நாட்களைச் சுகாதாரமற்ற முறையில்தான் கடக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிற நாப்கின்களில் நிறத்துக்காகவும் உறிஞ்சும் தன்மைக்காகவும் அதிக அளவு வேதிப்பொருள் கலக்கப்படுவதால் அது பெண்களையும் சூழலையும் பாதிக்கிறது.

சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதால் குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுவதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அதிகமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது உடலுக்கும் சூழலுக்கும் கேடு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். சரி, இதற்கு மாற்று என்ன? துணிகளைப் பயன்படுத்தி பழமைக்குத் திரும்ப வேண்டியதுதானா? இந்தக் கேள்விகள்தான் 18 வயது இஷானாவைத் தொழில்முனைவோர் ஆக்கியிருக்கின்றன.

கோவை மாநகரம் கணபதியில் பெற்றோர் இஸ்மாயில்-சபீனா ஆகியோருடன் வசித்துவருகிறார் இஷானா. பெற்றோருக்குப் பூர்விகம் கேரளம் என்றாலும், இஷானா பிறந்து, வளர்ந்து எல்லாம் கோவையில்தான். பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் டெக்னாலஜி டிப்ளமோ படித்தார். படிப்புக்கேற்ற வகையில் ஆடை, அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தைத் தொடங்கினார்.

வியாபாரம் சரிவர நடைபெறாததால், தையல் கடை வைத்து புதுப் புது டிசைன்களில் துணிகளைத் தைத்தார். அதற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பருத்தித் துணியில் நாப்கின் தைக்கும் நுட்பத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பு கற்றுக்கொண்டு, உடனடியாகத் தயாரிப்பிலும் ஈடுபட்டார். ‘அனா கிளாத் பேட்’ எனப் பெயரிட்டதுடன் துணி நாப்கின்களை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்லும் முயற்சியில் இருக்கிறார்.

புதிய பாதையில் பயணம்

பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் ஜெல், மெல்லிய காகிதம், பசை ஆகியவற்றுடன் வேதிப்பொருள் கலக்கப்படுவது குறித்து இஷானாவுக்கு ஏற்பட்ட வருத்தமே மாற்று வழியை நோக்கி அவரை நகர்த்தியது. குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காகப் பெருநிறுவனங்கள் தரமற்ற வகையில் நாப்கின்கள் தயாரிப்பதைக் கவலையுடன் குறிப்பிடுகிறார்.

“அதிகமாக வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்களுக்குச் சில நேரம் ஒவ்வாமை ஏற்படும். இருப்பினும், அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டிய நிலை. தொடர்ச்சியான ஒவ்வாமை அடுத்தடுத்து வேறு பல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும். சிலர் இதற்கு மாற்றாக, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களைப் பயன்படுத்தினாலும் முறையான சந்தைப்படுத்துதல் இல்லாததால் இவ்வகை நாப்கின்கள் பெண்களை முழுமையாகச் சென்றடைவதில்லை” எனத் தன் ஆதங்கத்தைப் பதிவுசெய்கிறார்.

அதற்காகத் தன் முயற்சியை இவர் கைவிடவில்லை. பருத்தி நாப்கின் தைப்பதற்காக 15 பெண் தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர்கள் இருக்கும் இடத்துக்கே மூலப்பொருட்களை வழங்கி, அவர்கள் தைத்து முடித்ததும் வாங்கிக்கொள்கிறார்.

“பருத்தித் துணியால் நாப்கின்களைப் பல வண்ணங்களில் தயாரிக்கிறோம். இது உள்ளாடைகளைப் போல் மென்மையானது. பாப்லின் ரக துணியை வெளிப்புறத்திலும் மென்மையான பருத்தித் துணிகளை உட்புறத்தில் பல அடுக்குகளாக வைத்துத் தைக்கிறோம். இந்த நாப்கினை உள்ளாடையைப் போல் துவைத்துப் பயன்டுத்தலாம்.
ஒரு நாப்கினை 12 முறை பயன்படுத்தலாம். நன்றாகப் பராமரித்தால் 14-15 முறைகூடப் பயன்படுத்தலாம்.

இது பருத்தித் துணியால் தயாரிக்கப்படுவதால் இதைப் பயன்படுத்தும் போது ஒவ்வாமை போன்ற எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. ஓராண்டுக்கு 6 முதல் 10 நாப்கின்கள் வரை ஒருவருக்குப் போதுமானதாக இருக்கும். மற்ற நாப்கின்கள் என்றால் ஆண்டுக்குச் சராசரியாக 60 நாப்கின்கள் தேவைப்படும். இதற்குச் செலவிடும் தொகையைவிடப் பருத்தி நாப்கினுக்குச் செலவிடும் தொகை குறைவு. இந்த நாப்கினைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்தால்கூட மண்ணில் எளிதாக மக்கிவிடும். சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது” என்கிறார் இஷானா.

சூழலுக்கு உகந்தது

நாப்கின்களின் பயன்பாடு பரவலாவதற்கு முன்பு, மாதவிடாய் நாட்களில் பருத்தித் துணிகளைத்தான் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்திவந்தனர். ஆனால், நகர வாழ்க்கையில் அவற்றைத் துவைத்துப் பராமரிப்பது சிரமமாக இருந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் நாள் முழுவதும் மாதவிடாய் துணியை மாற்ற முடியாமல் அவதிப்பட்டனர். அதனால்தான் சானிட்டரி நாப்கின்களின் வருகை அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. அதற்காக ஆரோக்கியத்துக்கும் சூழலுக்கும் சானிட்டரி நாப்கின்கள் ஏற்படுத்தும் சீர்கேட்டையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்கிறார் இஷானா.

இவர்கள் தினமும் 500 நாப்கின்கள் வரை தயாரிக்கிறார்கள். கோவை, சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு இவை விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவிகள் எனப் பல தரப்பினருக்கும் ஏற்ற வகையிலேயே துணி நாப்கின்கள் வடிவமைக்கப்படுவதாக இஷானா சொல்கிறார்.

பழமையான வழக்கத்தைப் பழசு என ஒதுக்கிவிடாமல் அதில் புதுமையைப் புகுத்தி சூழலுக்கு உகந்த வகையில் இளம் தொழில்முனைவோராக விளங்குகிறார் இஷானா. பொதுநலத்தை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு முயற்சியும் அதன் இலக்கை அடைந்தே தீரும் என்பதற்கு இஷானாவும் சாட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x