Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 30: கடலைக்கொடியில் தொலைந்த மஞ்சள்கொடி

பாரததேவி

காட்டில் பகல் முழுக்க வேலை செய்யவும் எஞ்சிய நேரத்தில் வீட்டுக்கு வந்து அண்டியும் சவலையுமாய்த் தன்னைச் சுற்றிலும் தன் அணைப்புக்காகக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் அழும் பிள்ளைகளைத் தூக்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்து, சிரிப்பூட்டிச் சற்று நேரம் கொஞ்சவும் அவர்களின் பசியைத் தணிப்பதற்காகத் தானியங்களை உரலிலிட்டுக் குத்தவும் பொடைக்கவுமாக இருந்தாள் துளசி.

இந்த வேலைகளுக்கு நடுவே இங்கே யாருக்குத் தாலியைப் பற்றி நினைக்க நேரமிருக்கிறது. எல்லோருடைய கழுத்திலும் அழுக்காகக் கசமடைந்து போன கயிறு ஒன்று கிடக்கும். அந்தக் கயிற்றில் தாலி இருக்குமா என யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. அரக்கை மட்டும் உள்ளே வைத்து தங்கத்தால் பூசி மெழுகி தாலி செய்வதால் சிலருக்குத் தங்கத் தகடு உரிந்துபோக வெறும் அரக்கு மட்டுமே கயிற்றில் இருக்கும். சிலர் அவசரச் செலவாகத் தாலியைக் கொண்டுபோய் ரகசியமாக அடகு வைத்திருப்பார்கள். வெளியே தெரிந்தால் தாலிய அடவு வச்ச குடும்பமென்று அசிங்கமாகப் பேசுவார்கள் என்பதற்காகத்தான் இந்த ரகசிய அடகு.

நாலு மணிநேர தூக்கம்

துளசி தான் தாலி போட்டிருப்பதையே மறந்துபோனாள். பகலெல்லாம் காட்டில் வேலை செய்தாள் என்றால் இரவில் பிள்ளைகள் உறங்கிய பிறகு தானியங்களைக் குத்தவும் புடைக்கவும் மறுநாளைக்காகச் சோறாக்குவதுமாக இருந்தாள். அவளுக்கு நான்கு மணி நேரம்தான் இரவு தலைசாய்க்க நேரம் கிடைத்தது. இதில் கழுத்தில் கிடக்கும் தாலியையோ தாலிக்கயிற்றைப் பற்றியோ நினைக்க நேரம் கிடையாது. அது இத்தனை நாளும் நஞ்சி பிஞ்சி வெறும் நாராகக் கிடந்ததில் குனிந்து கடலைக்கொடி பிடுங்கியதிலும் அள்ளிக்கொண்டு சுமந்ததிலுமாக இத்துப்போன அந்தக் கயிறு எங்கேயோ எப்போதோ பொசுக்கென்று அறுந்து விழுந்துவிட்டது.

எங்கே போனது தாலி?

பூவம்மாதான் முதலில் அதைப் பார்த்தாள். கடலையை ஆய்ந்துகொண்டே துளசியை நிமிர்ந்துப் பார்த்தவள், “என்னத்தா உன் கழுத்தில் கிடக்க தாலியக் காணோம்” என்று ஒரு சத்தந்தான் கொடுத்தாள். இதற்காகவே காத்திருந்துபோல் அனைவரும் கூடிவிட்டார்கள். ராமாயி பூவம்மாவை அதட்டினாள். “ஏண்டி சொல்லிக்கிட்டுப் பேசாம நிக்கே.

அவ சீல முந்தியில ஒரு முடிச்சிப் போட்டு அவளக் கூட்டிபோய் மரத்து நினல்ல உக்கார வய்யி. சீக்கிரம் போ. தாலிய தொலச்சவ நிற வெள்ளாமைக்குள்ள இருக்கக் கூடாது” என்று கடுப்பாய்ச் சொல்லவும் பூவம்மாள் துளசியைக் கூட்டிப்போனாள். நிலக்கடலையை உரித்துக் கொண்டும் தின்றுகொண்டும் இருந்த பிள்ளைகள் எதுவும் புரியாமல் மிரண்டு அழுதவாறு தங்கள் அம்மாவை நோக்கி ஓடின. எல்லோரும் அவர்களைப் பிடித்து நிறுத்திவிட்டு, தொலைந்துபோன தாலியை தேடத் தொடங்கினார்கள்.

எங்கெங்கு தேடினாலும் கடலைச் செடியின் கொடியோடு கொடியாக பின்னிக்கொண்ட தாலிக்கொடியைக் காணவே இல்லை. “சரி தாலிக் கயித்தக் காணோம். யாராவது ஆசாரி ஊருக்குப் போயி ஒரு தாலிய செய்யச் சொல்லுங்க” என்று பூவம்மா சொல்ல, ராமாயி அவள் மீது எரிந்துவிழுந்தாள். “இவளுக்கு இப்ப தாலி செய்யச் சொன்னா யாரு ரூவா கொடுக்கிறது? இவ என்ன கைநிறய துட்டு வச்சாப் பொழைக்கா?” என்று ராமாயி சொல்லவும், “துளசி அப்புராணிபுள்ள.

ஆணுக்கு ஆணுமில்லாம ஆமணக்குக்கான தட்டயுமில்லாமா ஒன்னுக்குமத்த பயலுக்கு வாக்கப்பட்டு நாலு புள்ளைகளயும் பெத்து வச்சிக்கிட்டு எப்படி அதுகளக் காப்பாத்தப் போறோமின்னு மய்யம்பறக்கா மருவிதவிக்கா. அவளுக்கின்னு ஒரு நல்ல நாளு உண்டுமா தீய நாளு உண்டுமா சொல்லு. அவ தாலிச் செலவ ஊருதேன் ஏக்கணும். அதப் பத்தி ராத்திரிக்கு நாட்டாமைய வச்சிப் பேசுவோம்” என்ற பூவம்மா கடலைக்கொடியைக் காயப்போட்டுக்கொண்டிருந்த தன் மகன் துரைப்பாண்டியைக் கூப்பிட்டாள்.

சாப்பாட்டுக் கவலை

என்னத்தா என்று வந்தவனிடம், “ஏலேய் கொடிய நாளைக்குக் காயப்போட்டுக் கிடுவோம். நீ இப்பவே ஆசாரி வீட்டுக்குப் போயி அவர கையோடு கூட்டிட்டு வா” என்று அனுப்பிவைத்தாள். அவனும் வேகவேகமாக நடந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த துளசி எதுவுமே பேசவில்லை. மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவள் நினைவெல்லாம் பிள்ளைக மத்தியான கஞ்சிக்கு நிலக்கல்லயத் தின்னு வவுத்துப் பசிய ஆத்திக்கிடுவாக; ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வாக என்றுதான் ஓடியது. மந்தையில் கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்த செல்லச்சாமிக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் அய்யய்யோ ராத்திரி சாப்பாட்டுக்கு நானு என்ன செய்வேன் என்று வருகிறவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினான்.

ஆசாரி வரவில்லை

பொழுது மேற்குத் திக்கம் போய்விட்டது. அப்போதுதான் புழுதி பறந்த காலோடு துரைபாண்டி திரும்பிவந்தான். நகை செய்யும் ஆசாரி ஊரிலேயே இல்லையாம். “அவரோட மதினி புருசன் சாவுக்குப் போனவன் இன்னும் அஞ்சாறு நாக் கழிச்சிதேன் வருவானாம்” என்றான்.
மகன் சொன்னதைக் கேட்ட பூவாத்தாவுக்கு முகம் பொக்கென்று போய்விட்டது. அப்படியே ஆசாரி வந்தாலும் முப்பது நாளு கழிக்காம இந்தத் தொழில்ல கைவைக்க மாட்டார் என்று நினைத்தவளுக்கு யோசனையாயிருந்தது.

இந்தக் காலம்போல் அப்போது எங்கும் நகைக் கடை கிடையாது. பக்கத்து ஊர்களில் ஒரு ஆசாரிதான் குடியிருப்பார். ஊருக்குள் கல்யாணம், சடங்குக்காகப் பெண் பிள்ளைகளுக்கு நகை செய்ய வேண்டுமென்றால் மட்டும் மடியில் பணத்தோடு ஆண்கள் மட்டும் அவரைத் தேடிப்போவார்கள். இப்போது அந்த ஆசாரியும் இல்லை. அப்படியே இருந்தாலும் சாவுக்குப் பிறகு முப்பது நாளைக்கு நகைத் தொழிலைக் கையில் எடுக்க மாட்டார். குடிச்ச பாலு குவட்டுக்குள்ள (தொண்டைக்குள்) இருக்க புள்ளைகள வச்சிக்கிட்டு இந்த துளசிய எத்தன நாளைக்கு ஒத்தையா போட முடியும் என்று யோசித்தவள் விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

பருத்தியும் மஞ்சளும்

வாசலில் வேப்ப மரத்தடியில் கட்டிலில் உட்கார்ந்தவாறு தன் துடையில் பஞ்சை வைத்து கயிறு திரித்துக்கொண்டிருந்த சங்கு தாத்தாவை நோக்கிக் கையில் கொஞ்சம் பருத்தியோடு நடந்தாள். தூரத்திலேயே அவளைப் பார்துவிட்டவர், “என்ன தாயீ இம்புட்டு வெரசா கையில பருத்தியோட வாரே” என்று கேட்க பூவம்மாவுக்குத் தொண்டைக்குள் விம்மல் எழுந்தது.

“அண்ணே துளசியோட தாலிக் கயிறு நிலக்கடலைக் காட்டுக்குள்ள அறுந்து விழுந்திருச்சி நாங்களும் எம்புட்டோ தேடித் தேடிப் பாத்தோம் கிடைக்கல” என்றாள். “ஆமா தாயி. ஒரு களவெட்டு, பருத்தி எடுக்கிற வேலைன்னா தாலிக்கயிறு விழுந்தது தெரியும். இது நிலக்கடல ஆய்ற வேலங்கிறதால கொடியோட கொடியாகவில்ல பின்னிக் கிடக்கும். நம்ம மக்க மனுச கண்ணுக்கு அது தெரியாதே” என்றார்.

“அதேண்ணே என் செலவுலயாச்சிலும் ஒரு தாலிய செஞ்சி போட்டுரலாமின்னு ஆசாரி வீட்டுக்கு எம்மவன அனுப்பிவச்சேன். அவரு ஊருலேயே இல்லையாம். அதுவுமில்லாம அவரு வீட்டுல ஒரு துட்டியாம். துட்டிய வச்சிக்கிட்டு அவரு முப்பது நாளைக்கு எப்படித் தங்கத்துல கைவைப்பாரு?”

“அதுவும் சரிதான். நீ இப்ப என்ன செய்யப்போறே?”

“அண்ணே கடலைக்குள்ள விழுந்த தாலிக்கயிறு அம்புட்டுத்தேன். இனி கிடைக்கப்போறதில்ல. தாலி கிடைக்குமின்னு நெனச்சி அவள ஒத்தையா விட முடியாது. அவ எத்தனை நாளைக்காச்சிலும் பட்டினியா கெடந்திருவா. ஆனா, கண்ணும் கயிந்தலையும் கண்கூடா பாலகனாகவும் புள்ளைகள வச்சிருக்கா. அதுக எத்தன நாளைக்குப் பட்டினியா கிடக்குங்க? அதுகளுக்கு அப்பன் இருக்கான்னுதேன் பேரு. உதிர மரம் பெருத்தா ஒண்ணுக்கும் ஆவாதுங்கிற கதையா அவன் இருந்தாலும் ஒண்ணுதேன் இல்லாட்டாலும் ஒண்ணுதேன்”

“அது தெரிஞ்ச கததானே பூவம்மா. நீ பருத்தியோட வந்திருக்கயே அந்த விவரத்தச் சொல்லு” “நீரு இந்தப் பருத்தியில பஞ்சை எடுத்து நல்ல திடமான கயிறா திரிச்சிக்கிட்டு இரும். நானு போயி ஒரு செறட்ட மஞ்சள அரைச்சிக்கிட்டு வாரேன். அதோட முனை முறியாத நீளமான மஞ்சக் கெழங்க எடுத்துட்டு வாரேன். நீரு திரிக்கித கவுத்தில இந்த மஞ்சளக் கட்டி தாலிக்குப் பதிலா அவ கழுத்தில நானே கட்டிருதேன்.

பெறவு அவள ஊருக்குள்ள ஆளோட ஆளா சேத்துக்கிடுவோம் வேற வழியில்ல. இப்ப நீரும் என்கூட வாரீரு. எதுக்கு உம்ம கூப்பிடுதேன்னா நானு செஞ்சது தப்புன்னு ராத்திரிக்கு ஊருக்குள்ள கூட்டம் கீட்டம் போட்டாகன்னா துளசியோட நெலமய எடுத்துச் சொல்லி எனக்குத் துணையா நிக்கணும். ஏன்னா இப்படியொரு காரியம் எந்தக் காலமும் நம்ம ஊரு, தேசத்தில நடக்கல. அதேன் உம்மயும் கூப்பிடுதேன்” என்று சொன்ன பூவம்மா ஒரு செறட்டை மஞ்சளையும் அரைத்துக்கொண்டு வந்தாள்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x