Published : 27 Oct 2019 10:53 AM
Last Updated : 27 Oct 2019 10:53 AM

நட்சத்திர நிழல்கள் 29 - நிர்மலா : ஆறுதல் தேடிய நெஞ்சினள்

செல்லப்பா

இன்றைய நாளைப் போல் அன்றும் தீபாவளிதான். ஆண்டு 1986. அன்று வெளியானது ‘அறுவடை நாள்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தை அறிந்திராதவராக நீங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் செவிகளுக்குக் கேட்கும் திறன் இல்லாதுபோனால் ஒழிய, ‘தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே’ என்று தொடங்கும், கங்கை அமரன் வரிகளில் இளையராஜாவின் இசை யில் சித்ராவின் குரலில் ஒலித்த பாடலைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். கைகளில் ஏந்திய தண்ணீரைச் சொட்டுச் சொட்டாக ஒழுகவிடுவதைப் போல் இழந்த காதலால் ஜீவனைச் சிறிது சிறிதாக நழுவ விடும் இளம்பெண் ஒருவரின் துயரக் குரல் அது.

அந்தப் பாடல் வழியே நிர்மலா என்னும் இளம்பெண்ணின் துயரத்தை அறிகிறோம். நிர்மலா இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து மறைந்தவள். மலம் என்றால் மாசு; நிர்மலம் எனில் மாசற்றது. ஆகவே, நிர்மலா மாசற்றவள் எனும் பொருள் கொண்ட பெயரை உடையவள். பெயரில் மாசு கலக்காத இறைவன், அவள் வாழ்வில் போதும் போதும் என்னும் அளவுக்கு மாசைக் கலந்துவிட்டான்.

கன்னியாஸ்திரீயின் காதல்

ஆதரவற்ற அவள் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றில் வளர்கிறாள்; மருத்துவம் பயில்கிறாள். ஆதரவற்ற கிறிஸ்தவப் பெண்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை எது தரும்? கன்னியாக இருந்தாலும் ஸ்திரியாக இருந்தாலும் எப்படியும் பிரச்சினை வரும் என்பதாலோ என்னவோ அவள் கன்னியாஸ்திரியாக வாழ முடிவுசெய்துவிட்டாள். கன்னியாஸ்திரியாக மாறினாலும் அவளுடைய வாழ்வு மன நிம்மதியுடன் அமையக் கூடாது எனக் கருதியதுபோல் தெய்வம் அதை அலைக்கழித்தது. இல்லையெனில், அந்த இளம்பெண்ணின் மனத்தில் காதல் உணர்வை ஏற்படுத்தியிருக்குமா அது? தெய்வம் செய்த தவறுக்கு நிர்மலா என்ன செய்வாள்?
கன்னியாஸ்திரியாவதற்கு முன்பு உலக அனுபவம் பெறும் பொருட்டு, மருத்துவ சேவையில் ஈடுபட பொன்முடி என்னும் கிராமத்தின் சுகாதார நிலையத்துக்கு மருத்துவராக வருகிறாள். அங்கே அவளுக்கான சிலுவை காத்துக்கொண்டிருப்பது அவள் அறியாதது. பசுமையான வயல்வெளிகளால் சூழப்பட்ட கிராமம் அது என்பதைப் பார்த்தவுடன் விளங்கிக்கொள்ளலாம். ஆனால், அது சாதி சூழ்ந்த கிராமம் என்பதை விளங்கிக்கொள்ள நமக்கு நிர்மலாவின் கதை தேவைப்படும். இன்றுவரை சாதிக்கிருமிகள்சூழ் கிராமங்கள் அவற்றின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவில்லை.

அந்தக் கிராமத்தின் தலைமைக் குடிமகன் ரத்னவேலு. அவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பொருளாதார வலுக்கொண்ட ஆண். பணமும் செல்வாக்கும் ஒன்றிணைந்தால் அதிகாரத்துக்குக் கேட்கவா வேண்டும்? ஆதிக்கமிகு ஆட்சியைத் தன் குடும்பத்திலும் அந்தக் கிராமத்திலும் நடத்திவருகிறார் அவர். அவருடைய மகன் முத்துவேல். எங்கோ பிறந்த நிர்மலா வாழ்வில் முத்துவேல் குறுக்கிடுவதைத் தெய்வம் திட்டமிட்டிருக்கிறது. இவர்கள் வாழ்வில் குறுக்கிட்ட தெய்வம் அதில் ஒளியேற்ற ஒரு குத்துவிளக்கை ஏற்றிவைத்திருக்கலாம். அதற்கு ஆற்றல் இல்லாத கடவுளாக இருந்தால் குறைந்தபட்சம் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு அவர்களுடைய காதலைக் கண்டுகொள்ளாமலாவது இருந்திருக்கலாம். ஆனால், மனிதருடன் விளையாடியே பழக்கப்பட்டுவிட்ட தெய்வத் தால் அப்படி வாளாவிருக்க முடியவில்லை.

தாலி எனும் தந்திரம்

முத்துவேலுக்கும் நிர்மலாவுக்கும் சாதி, மதம் எல்லாம் பார்க்காமல் காதல் பிறந்துவிடுகிறது. ஆனால், சாதி, மத வேற்றுமை பாராட்டாத கிராமம் இதுவரை பிறக்கவில்லையே. பொன்முடி மட்டும் அதற்கு விதிவிலக்கா? காதல் சாதியையும் மதத்தையும் இல்லாமல்போகச் செய்துவிடும் என்பதால், அதைக் கருவிலேயே அழித்தொழிக்க முயலும் ஆணவக்காரர்களின் பிரதிநிதியான ரத்னவேலு, இந்தக் காதலைத் தந்திரமாகப் பிரிக்க முடிவுசெய்கிறார். உறவுகளை அழைத்துவரும்படி நிர்மலாவிடம் கோரும் கோணல்புத்திக்காரரான அவர் நிர்மலா சென்ற வேளையில் முத்துவேலுக்குத் திருமண ஏற்பாடு செய்துவிடுகிறார்.
பருவமடையாத சின்னஞ்சிறு பெண்ணை முத்துவேல் தலையில் வைத்துக் கட்டிவிடுகிறார். பூமாலைக்குள் தாலியை மறைத்துவைத்து, அது கழுத்தில் விழுந்தவுடன் கல்யாணம் நடந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார். அவரது எந்த அழிம்பையும் தட்டிக் கேட்க முடியாமல் அனைத்தையும் அமைதியாக அனுமதிக்கிறார் அவருடைய மனைவி வடிவு. தன் தரப்பு நியாயத்துக்கு காந்தியின் கல்யாணத்தை எல்லாம் இழுக்கிறார் ரத்னவேலு. அவரது இந்த அநியாயத்தை அந்த ஊரில் வாழும் பாதிரியார் சூசை மட்டும் எதிர்த்துக் கேள்வி கேட்கிறார். ஆனால், ஏழை சொல் எவர் காதில் விழும்? மதத்தைவிட மனிதம் முதன்மையானது என்று செயல்படும் இவரை திருச்சபையினரே தள்ளிவைத்துவிடுகிறார்கள். காதலைப் பிரிக்க மதம் வருகிறது; சாதி வருகிறது. ஆனால், அதைச் சேர்த்துவைக்க கடவுள்கூட வரமுடியாத அளவுக்குக் கடவுளின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ காதல்?

விரும்பிய காதலியை இழந்து விரும்பாத திருமண உறவில் மாட்டிக்கொண்டான் முத்துவேல். அவனை மணந்துகொள்ளும் ஆசையுடன் தன் தோழமைகளான கன்னியாஸ்திரிகள் புடைசூழ முத்துவேல் வீட்டுக்கு வரும் நிர்மலாவை நிர்மூலமாக்கும் செய்திகளை வரிசையாக அடுக்குகிறார் ரத்னவேலு. நிலைகுலைந்துபோன நிர்மலா, முத்துவேலுவுடைய மனைவியாகிவிட்ட ராஜலட்சுமியை ஆசிர்வதித்துவிட்டு திரும்புகிறாள்.

ஆணாதிக்கத்தின் வீழ்ச்சி

தன்னையும் நாடாமல் காதலையும் மறக்க முடியாமல் தவிக்கும் மாமனின் வேதனையைப் புரிந்துகொண்ட ராஜலட்சுமி, நிர்மலாவிடமே மாமனைச் சேர்த்துவைக்க விரும்புகிறாள். சூசை உதவியுடன் பஞ்சாயத்தைக் கூட்டுகிறாள். தான் பருவமடையாதவள் என்றும் தனக்கு நடந்தது திருமணமே அல்ல என்றும் சொல்லி தன்னையும் மாமனையும் பிரித்துவிடும்படி கோருகிறாள். பருவமெய்தாப் பெண்ணை மணமுடித்துவைப்பதை ஊரின் குலதெய்வம் ஏற்காது என்பதால் திருமணம் செல்லாது என அறிவித்துவிடும் பஞ்சாயத்தினர், ராஜலட்சுமிக்கு 50 ஏக்கர் நிலத்தை இழப்பீடாக ரத்னவேலு தர வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்கள். முத்துவேலுக்கும் நிர்மலாவுக்கும் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்கிறார் சூசை.

சாதி உணர்வும் மத உணர்வும் ஆதிக்க உணர்வும் நிரம்பிவழியும் மனத்தைக் கொண்ட ரத்னவேலுவால் இவற்றைத் தாங்கிக்கொள்ள இயலுமா? சூசையைக் கொன்று அவரை கிறிஸ்து ஆக்கும்படியும், நிர்மலாவை எரித்து அவளை சீதை ஆக்கும்படியும் சொல்கிறார் ரத்னவேலு. ஆணாதிக்கத் திமிரில் ரத்னவேலு இப்படி நடந்துகொண்டால் வடிவோ தன் குடும்ப நிம்மதிக்காக மகனின் வாழ்விலிருந்து விலகிவிடும்படி நிர்மலாவிடம் மடிப்பிச்சை கேட்கிறார். நிர்மலா அதற்கும் சம்மதிக்கிறார், இவ்வளவு நல்ல பொண்ணு தன் சாதியில் பிறந்திருக்கக் கூடாதா, என வேறு அங்கலாய்க்கிறார் வடிவு. ஆனால், சாதி வெறிக்கு முன்பு சாமானியர்கள் தப்பிக்க இயலுமோ? சூசையைக் கொன்று சிலுவையில் ஏற்றிவிடுகிறார்கள். சுகாதார நிலையத்துக்குத் தீவைத்து விடுகிறார்கள். சிதையில் எரிந்து சீதையாகிறாள் நிர்மலா.

அன்று அறுவடை நாள். ரத்னவேலுவின் வயலில் இறங்கி அறுக்க மறுக்கிறார்கள் கிராமத்தினர். ரத்னவேலுவே வயலில் இறங்கி அறுக்க முயல்கிறார். அங்கு வரும் முத்துவேல் வயலில் இறங்குகிறான். கதிர் அரிவாளை அவனிடம் தரும் ரத்னவேலு, ‘எரிஞ்சுபோனவள நெனச்சு கரஞ்சு உருகாம கதிரை அறுத்து எறி’ என்கிறார். முத்துவேலும் அறுக்கிறான். கதிர் சாய்வதற்குப் பதில் கழுத்தில் அறுபட்ட ரத்னவேலு மண்ணில் விழுகிறார். ஆணாதிக்கத்தின் ஒரு கண்ணி தரையில் சரிகிறது. எஞ்சிய கண்ணிகள் இன்னும் ஆட்டம்போடுகின்றன. எல்லாக் கண்ணிகளும் ஓய்வுபெறும் நாளே நிர்மலாக்கள் நிம்மதி காணும் நாள். அந்த நாளே உண்மையில் உலகத்துக்கு அறுவடை நாள்.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x