Published : 23 Oct 2019 12:18 PM
Last Updated : 23 Oct 2019 12:18 PM

டிங்குவிடம் கேளுங்கள்: மழையில் நனைந்தால் காய்ச்சல் வருவது ஏன்?

பசுமைப் பட்டாசு என்றால் என்ன, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேது லெட்குமிபாய் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

பட்டாசுகளின் மூலம் காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்து வருவதால், பட்டாசுகளை வெடிப்பதற்குக் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இது பட்டாசு ஆர்வலர்களையும் பட்டாசு தயாரிப்பாளர்களையும் வருத்தப்பட வைத்தது. அதனால் சூழல் மாசைக் குறைக்கும் விதத்தில் பட்டாசுகளை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வழக்கமான பட்டாசுகளால் ஏற்படும் சூழல் மாசைவிட 20 முதல் 30% மாசு குறையும் விதத்தில் இந்தப் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான பட்டாசுகளில் கிடைக்கும் ஒளியும் ஒலியும் இந்தப் பசுமைப் பட்டாசுகளிலும் கிடைக்கும். விலையும் குறைவாக இருக்கும். இந்தப் பசுமைப் பட்டாசுகள் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை என்றாலும் கிடைக்கும் இடங்களில் வாங்கி, பட்டாசு ஆர்வலர்கள் அளவோடு பயன்படுத்திக் கொள்ளலாம், பிரியதர்ஷினி.

மழையில் நனைந்தால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. ஆனால், தினமும் நீரில் குளிக்கும்போது உடலுக்குப் பிரச்சினை வருவதில்லையே ஏன், டிங்கு?

– விஷ்வ பிரசாத், அக்‌ஷய அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, பழனி.

நல்ல கேள்வி. மழையில் நனைந்தால் உடல்நிலை பாதிக்கும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களிடம் குளிர்ச்சியான காலநிலை பாதிப்பை ஏற்படுத்தும். மழைநீர் நிலத்தில் விழும்போது பாக்டீரியாக்களும் வைரஸ்களும் வெளியேறும். இதுபோன்ற காரணங்களால் உடல்நிலை பாதிக்கப்படும் சாத்தியம் உருவாகிறது. மற்றபடி நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்பவர்களுக்கு மழையில் நனைவதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது, விஷ்வ பிரசாத்.

அப்துல் கலாம் என்றதும் உனக்கு நினைவுக்கு வருவது என்ன, டிங்கு?

– இ. அனுஷியா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

விஞ்ஞானி, குடியரசு தலைவர் போன்ற பெரும் பொறுப்பில் இருந்தாலும் ஆசிரியர் பொறுப்பை விரும்பிச் செய்தார். எதிர்கால இந்தியா மாணவர்களின் கைகளில் இருப்பதால், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இதைத் தம் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைப்பிடித்தார். அதனால் அப்துல் கலாம் என்றதும் அவரது ஆசிரியர் பணிதான் என் நினைவுக்கு வருகிறது, அனுஷியா.

பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறமாகவும் ஆம்புலன்ஸ் வெள்ளை நிறமாகவும் இருக்கக் காரணம் என்ன, டிங்கு?

- தர்ஷனா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

மற்ற வண்ணங்களைவிட மஞ்சள் வண்ணம் 1.24 மடங்கு அதிக ஈர்ப்பைக்கொண்டுள்ளது. இதனால் மஞ்சள் வண்ண வாகனம் வெகு தூரத்தில் வரும்போதே கண்களுக்குப் புலப்படும். மழை, பனி போன்ற சூழ்நிலைகளிலும் பார்க்க முடியும். குழந்தைகள் செல்லும் பள்ளி வாகனம் என்பதால் பிற வாகனங்கள் கவனமாக இருக்கவும் உதவும்.

இதனால் பெருமளவில் விபத்துகளைத் தடுக்கவும் முடியும் என்பதால் பள்ளி வாகனங்கள் மஞ்சள் வண்ணத்தில் இருக்கின்றன. மஞ்சளுக்கு அடுத்தபடி வெள்ளை நிறம் எளிதில் புலப்படும். குறைவான வெளிச்சத்தில்கூடத் தெரியும். மருத்துவத்தில் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே நோயாளிகளைக்கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது, தர்ஷனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x