Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 28: ஆழம் பார்த்துப் பேசிய பெண்கள்

பாரததேவி

எவ்வளவுதான் தீவனம் போட்டாலும் சுறுசுறுப்பாக வேலை செய்யாத காளைகள், தனக்குரியவர்கள் தொட்டுத் தடவிக்கொடுத்தால் போதும். வளர்ப்பவர்களின் கையணைவுக்கு மகிழ்ச்சியோடு அலைபாயும். அவற்றின் கண்களில் நன்றி தெறிக்கும். அதோடு சுறுசுறுப்பாக வேலைசெய்து எட்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஆறு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடும்.

கால்நடைகள் எல்லாமே மனிதர்களின் அன்புக்காக ஏங்குபவை. பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தால் எத்தனையோ பிள்ளைகள் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தையே பாழாக்கிக்கொண்டு அலைவார்கள்.

ஆனால், கால்நடைகள் அப்படியல்ல. தங்களை வளர்ப் பவர்களுக்காக அவை அதிகமாக உழைக்கும். பொதுவாக, விவசாயிகள் நஷ்டப்பட்டுவிட்டால் சோர்ந்துபோய் அப்படியே விழுந்து கிடக்க மாட்டார்கள். அடுத்த வெள்ளாமையில் அந்த நஷ்டத்தை இரட்டிப்பு லாபமாக எடுத்துவிடலாம் என்று கூடுதலாக உழைப்பார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு காளைகளும் அமைய வேண்டும்.

ஆழமாக உழுதால் போதும்; நாம் விதைக்கும் விதைகள் பூமித்தாயைக் கப்பென்று பிடித்துக்கொண்டு வேர்விடத் தொடங்கிவிடும். பிறகு பழைய சோத்துக்குப் பச்சை மிளகாய் வெஞ்சனம்போல் கொஞ்சம் உரம் போட்டால்போதும். விதைகள் பச்சைப் பிடித்து குப்பென்று மேலெழும்பத் தொடங்கிவிடும்.

கன்னு, காலு, பிள்ளை

அப்படித்தான் முருகனுக்கு உழவு மட்டுமே நம்பிக்கையாக இருந்தது. ஆழமாக உழுதான். காளைகளுக்குப் பின்னால் பொய்யாகச் சாட்டையை வீசினான். அன்போடு அதட்டினான். சிவக்காட்டு மண்தரை நெகிழ்ந்து கொடுத்து நிலங்களில் ஆழம்பாய்ச்சியது.

முருகன் தான் உழுததை ரசித்துக்கொண்டு உழவில் கவனமாக இருந்தபோது அவன் பிஞ்சை வரப்பு வழியாக மூன்று பெண்கள் எங்கேயோ போவதற்காக வந்தனர். இந்த உழவைப் பார்த்து வாயூறினார்கள். வர்களில் முன்னால் பச்சைப் புடவை உடுத்தி வந்தவள், “அடடா இந்த உழவப் பாருடி, என்னம்மா உழுதுக்கிட்டுருக்கான். ஒரு ஆளு போயி படுத்துக்கிட்டாக்கூட தெரியாது பொலுக்கோ.

இந்த உழவுக்குக் ‘கன்னு’ வச்சோமின்னு வையி ஆயிரக்கணக்குல துட்டா அள்ளலாம்” என்றாள். நடுவே மஞ்சள் சேலை கட்டி வந்தவள், “போடியோ. இதில் ‘காலு’ நட்டிட்டா கையில் பணமாவில்ல வந்து குவியும்” என்றாள். கடைசியாக வந்த சிவப்புப் புடவைக்காரியோ, “ரெண்டு பேரு ரோசனையும் சரியில்ல. கன்னும் வராது காலும் வராது. பிள்ளையத்தேன் வைக்கணும். அத மட்டும் வச்சிட்டான்னு வையி அவுக தலைமுறையே உக்காந்து சாப்பிடலாம்” என்று பேசியவாறு உழுதுகொண்டிருந்த முருகனைக் கடந்தபடி நடந்துபோனார்கள்.

முருகனின் குழப்பம்

முருகனுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. என்னடா இது நம்ம தோட்டம் போடுவோம், இல்லைன்னா நெல்ல நட்டுவைப்போமின்னு உழுதுகிட்டு இருக்கோம். இந்தா போற பொம்பளைக ‘கன்னு’ வைக்கலாம் ‘கால்’ வைக்கலாம் ‘பிள்ளைய’ வைக்கலாமின்னு ஒரே உசுருகொண்ட பொருளாவில்ல பேசிக்கிட்டுப் போறாக. ஒண்ணும் புரியலயே என்று நினைத்தவனுக்கு அதற்குமேல் வேலை ஓடவில்லை. பக்கத்தில் வரப்புகளை வெட்டிக்கொண்டிருந்த சோலைமலையை நோக்கி நடந்தான். ஊமை வெயிலாக அடித்ததில் வெக்கை அனலாக உடலை வாட்டியது.

போய் அவர் எதிரில் நின்றான். வரப்பு வெட்டும் மும்மரத்தில் இருந்தவர், “என்னடா முருகா, உழவையும் விட்டுப்போட்டு இங்க எதுக்கு வந்து நிக்கவன்? என் வேலயவும் கெடுக்கதுக்கா?” என்றார் வரப்பை வெட்டிக்கொண்டே.

“இல்லப்பச்சி. எம்பாட்டுக்குத் தோட்டம் போடுவோமின்னு நெனச்சி உழுதுகிட்டு இருக்கேன். இப்ப செத்த முந்தி நம்ம வரப்பு வழியா மூணு பொம்பளைக போனாகள்ல?”
“ஆமாடா. நானுந்தேன் பார்த்தேன். அதுக்கொன்ன இப்ப?”
“அவுக பேசாம போனா, நானு எதுக்கு இப்ப உம்மகிட்ட வரப்போறேன்? நானுண்டு என் வேலையுண்டுன்னுல்ல இருப்பேன்”
“சரி இப்ப என்ன அதுக்கு?”
“அவுக என் வரப்பு வழிபோவும்போதே உழவு நல்லா இருக்கு இந்த உழவுக்குக் ‘கன்னு’ வைக்கலாம், ‘கால்’ வைக்கலாம், ‘புள்ள’ வைக்கலாமின்னு பேசிக்கிட்டுப் போறாகப்பச்சி. வெள்ளாம வச்சிதேன் நம்ம பாத்திருக்கோம். கன்னையும் காலையும் வச்சா நாம பாத்திருக்குகோம்? இதென்னப்பச்சி கொல பழியாவில்ல இருக்கு” என்றான் ஆதங்கத்தோடு.
அப்பச்சியின் விளக்கம்
பெரியவரான சோலைமலைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஏலேய் கிறுக்குப் பயலே. இப்படி உக்காரு. ரெண்டு வெத்தலயப் போட்டுக்கிட்டு பேசுவோம்” என்றவர் மடியிலிருந்த வெற்றிலையை எடுத்துக்கொண்டே கொட்டைப் பாக்கை அவனிடம் கொடுத்தவர், “அவங்களும் வெள்ளாம வைக்கதப் பத்தித்தேன்டா பேசிக்கிட்டுப் போறாக” என்று சொல்லவும் முருகன் குழம்பிப்போனான்.
“என்னப்பச்சி செல்லுதீரு?”

“ஆமாடா. கன்னு வைக்கலாமின்னு சொன்னது வாழைக் கன்னை. காலு வைக்கலாமின்னு சொன்னது கொடிக்காலை அதாவது வெத்தலைய நடலாமின்னு சொல்லியிருக்காக” “அப்ப புள்ள வைக்கலாமின்னு சொன்னது அப்பச்சி?”
“தென்னம்பிள்ளயத்தேன்டா அவுகப் புள்ளன்னு சொல்லியிருக்காக. உன் உழவு அம்புட்டுக்கு ஆழமாயிருக்கு. ஆனாலும், அதையெல்லாம் வைக்காதே கையில துட்டு வந்து சேர ரெண்டு வருசமாயிரும். நீ அரகுறுக்கம் தோட்டம்போடு அரைக்குறுக்கம் நெல்ல விதச்சி வையி. துட்டுக்குத் தோட்டத்து மிளகா வந்துரும், சாப்பாட்டுக்கு நெல்லு வந்துரும்” என்று சொன்னதும்தான் முருகனுக்குக் குழப்பம் தீர்ந்தது.

அடேயப்பா, வாழையும் தென்னையும் போடுதாப்பிலயா நாம உழுதுருக்கோம் என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டான். பிறகு கஞ்சி கொண்டுவந்த செந்தியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல இருவருக்கும் பேசி மாளவில்லை. அவள் அவனைப் புகழ்ந்து தள்ள, அவனோ நீ வந்த நேரம் என்று இவளைப் புகழ மப்பும் மந்தாரமுமாய் இருந்த வானத்தில் இவர்களின் பார்வையில் நிறைய நிலாக்கள் தெரிந்தன.

நிற்க நேரமில்லாத வேலை

இருட்டு ஆரம்பித்தபின் முரட்டு மழையாக ஒரு மழை பெய்து நின்றுவிட்டால் போதும். நிலக்கடலை, வெங்காயம், சீனிக்கிழங்கு என்று பூமிக்குள் வெள்ளாமை வைத்தவர்கள் அவற்றை எடுக்க ஆட்களைக் கூப்பிடத் தொடங்கிவிடுவார்கள். இப்படிப் பெய்கிற மழையில் இரண்டு நாள் போகட்டும் என்று விட்டால் அவ்வளவுதான். எல்லாமே சிறு முளையாக முளைத்துவிடும். பூமிக்கு மேலேயும் சரி; பூமிக்கு அடியிலும் சரி விளைந்துவிட்டது என்று தெரிந்தால்போதும். விவசாயிகளுக்கு நிற்க நேரமிருக்காது.

ரத்னகிளியின் பிஞ்சையில் இரண்டு ஏக்கருக்கு நிலக்கடலை போட்டு, கடலை நெருவாக முத்திவிட்டது. இதற்கு ஆள் கூப்பிட வேண்டுமென்றே இல்லை. அவர்களாகவே ஆளுக்கு ஆள் கேள்விப்பட்டு வந்துவிடுவார்கள். என்ன ஒன்று என்றால், இந்த வேலைக்குத் தவசமாகக் கூலி கிடைக்காது. ஆய்வதற்குத் தக்கன நான்கைந்து படி கடலையைத்தான் கொடுப்பார்கள். ஆனால், கடலை ஆய்கிறேன் என்ற பெயரில் பிள்ளைக்குட்டிகளைக் கூட்டிவந்து செழிப்பாகக் கடலையைத் தின்றுகொள்ளலாம்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x