Published : 19 Oct 2019 10:01 am

Updated : 19 Oct 2019 10:01 am

 

Published : 19 Oct 2019 10:01 AM
Last Updated : 19 Oct 2019 10:01 AM

மருத்துவம் தெளிவோம் 05: குடல் நுண்ணுயிரி நல்லதா, கெட்டதா?

let-s-clarify-the-medicine

டாக்டர் கு. கணேசன்

குடலுக்குள் ஒரு நுண்ணுயிர் உலகம் இருக்கிறதாமே? உண்மையா? உண்மைதான். 10க்குப் பிறகு 14 சைபர்கள் போட்டுக்கொள்ளுங்கள். அதுதான் தோராயமாக நம் உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை. இவற்றில் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளே அதிகம். அதையடுத்து, தோல், பல், உமிழ்நீரில் இருக்கின்றன. நம் உடல் எடையில் இது சுமார் 3 சதவீதம்.

நுண்ணுயிரிகளில் இரண்டு வகை உண்டு. நன்மை செய்பவை; தீமை செய்பவை. இயற்கையாகவே நம் குடலில் வாழும் பாக்டீரியாக்கள் நன்மை செய்பவையே. இவை இல்லாவிட்டால் நம்மால் உயிர் வாழ முடியாது. எடுத்துக்காட்டுக்குச் சில….

பாக்டீரியாக்களின் உதவி

‘பைபிடோபாக்டீரியா’ (Bifidobacteria) என்று ஒரு பாக்டீரியா. இதுதான் நம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைக் குடலில் உடைத்துக் கொடுத்துச் செரிமானம் அடையச் செய்கிறது. ஓர் உணவுச் சத்து செல்களில் ஆற்றலாக மாற வேண்டுமானால் இந்த பாக்டீரியா குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், செரிமானம் சரியாக நிகழாது; சத்து உடலில் சேராது.

‘லேக்டோபேஸில்லஸ்’ என்னும் பாக்டீரியா இனம் இரைப்பையில் புண் ஏற்படக் காரணமாக இருக்கும் ‘ஹேலிக்கோபாக்டர் பைலோரி’ என்னும் தீமை செய்யும் பாக்டீரியாவை அழிக்கிறது. சில வகை பாக்டீரியாக்கள் நம் உடலில் வைட்டமின்களைத் தயாரித்துக் கொடுக்கின்றன. குடலில் அமிலத் தன்மையைச் சமச்சீராக வைத்துக்கொள்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக அமைய வேண்டுமென்றாலும் பல பாக்டீரியாக்களின் உதவி தேவைப்படுகிறது. குடல் செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும் இவற்றுக்குப் பங்கு உண்டு. ஆகவே, நாமும் இந்த நுண்ணுயிரிகளும் இணைந்து வாழும்போதுதான் நமக்கு ஆரோக்கியம் நிலைக்கும். இந்த நுண்ணுயிரிகளை நாம் அழித்தோமானால், நம் ஆரோக்கியம் சீர்கெட்டுப் போகும்.

எந்த மாதிரி சீர்கெட்டுப் போகும் என்பதைச் சொல்ல முடியுமா?

இது அவரவர் உடலைப் பொறுத்து அமையும். பொதுவாகச் சொன்னால், உணவுச் செரிமானம் குறையும். இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும். குடல் புண் அடிக்கடி தொல்லை கொடுக்கும். வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாற்றி மாற்றி தொந்தரவு செய்யும். ஐபிஎஸ் (IBS) எனும் குடல் எரிச்சல் நோய் வரும். அதனால் பதற்றம், அச்சம், மனச்சோர்வு அதிகரிக்கும். முகத்தில் பரு வருவதற்கும் குடலில் பாக்டீரியாக்கள் குறைவதற்கும் தொடர்பு உண்டு. தன்தடுப்பாற்றல் நோய்களும் (Autoimmune diseases) இதனால் வருவதுண்டு.

இந்த நுண்ணுயிரிகளை நாம்தான் அழிக்கிறோமா? எப்போது, எப்படி?

இங்கே என் அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். அவர் 40 வயது வழக்கறிஞர். வெளியூர்வாசி. அடிக்கடி செரிமானக் கோளாறு ஏற்படுவதாகச் சிகிச்சைக்கு வந்துகொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் வயிற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களை விரிவாகவே விசாரித்தேன்.

அப்போதுதான் அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது. அதனால் அடிக்கடி சளி பிடிக்கிறது. சளி பிடிக்கும்போதெல்லாம் ஒரு நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரையைத் தன் விருப்பத்துக்குப் போட்டுக்கொள்கிறார். அந்த மாத்திரையை என்னிடம் காண்பித்து, மாதம் ஒருமுறையாவது அதைப் போட்டுக்கொள்வதாகச் சொன்னார்.

அதுதான் சளிக்கு நல்ல நிவாரணம் தருகிறது என்றார். சளிக்குத் தரப்படும் மாத்திரைகளிலேயே வீரியம் மிகுந்த மாத்திரை அது! சிறு கத்தி தேவைப்படும் இடங்களில் எல்லாம் கோடாரி பயன்படுத்திய மாதிரி, சாதாரண சளி பிடிக்கும்போதும் அந்த வீரியமுள்ள மாத்திரையைப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் வந்த வினைதான் அவருடைய செரிமானப் பிரச்சினை என்பது எனக்குப் புரிந்தது! இனி, அவருக்கு சிகிச்சை அளிப்பது எளிது. ‘அந்த மாத்திரையைத் தலையைச் சுற்றி வீசிவிடுங்கள்’ என்று கூறிவிட்டு, அவருடைய குடல் வலுவடைய சில மருந்துகள் கொடுத்தேன். இரண்டு மாதங்கள் கழித்து, அவருடைய பிரச்சினை சரியாகிவிட்டது என்றார்.

நோய்த்தொற்று ஏற்படும்போது நாம் எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், நோய் பரப்பும் பாக்டீரியாவை மட்டும் அழிப்பதில்லை; குடலில் குடியிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இந்த மருந்துகளை அளவோடு எடுத்துக் கொள்ளும்போது நான்கு வாரங்களுக்குள் மறுபடியும் பாக்டீரியாக்கள் வளர்ந்துவிடும். மருந்தின் அளவு அதிகமானாலோ, அந்த மருந்தை அடிக்கடி சாப்பிட்டாலோ குடல் தளம் பாதிக்கப்படும்; பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழல் மாறிவிடும். பாக்டீரியாக்கள் வளர்வதற்குச் சிரமப்படும்.

அடுத்து, செயற்கை உணவு வகைகளிலும் துரித உணவு வகைகளிலும் உள்ள பல வேதிப் பொருட்களுக்கு இந்த பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை உண்டு. செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட தானிய உணவு வகைகளையும், காய்கறி, பழங்களையும் சாப்பிடும்போது இதே தீமை உண்டாகிறது. புகையும் மதுவும் அடுத்த தாக்குதல்கள். தற்போது குடல் தொடர்பான நோய்கள் நம்மிடம் அதிகரித்து வருவதற்கு இந்தக் காரணங்கள் முக்கியமானவை.

அப்படியானால் குடல் நோய்களுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் தொடர்பு இல்லையா?

தொடர்பு உண்டு. டைபாய்டு, காலரா, காசநோய், ரோட்டா வைரஸ், எண்டமீபா போன்ற கெடுதல் செய்யும் நுண்ணுயிரிகள் குடலுக்குள் புகுந்தால் அந்தந்த நோய்களை ஏற்படுத்தும். கேம்பிலோபேக்டர் என்னும் நுண்ணுயிரி உணவை நச்சாக்கிவிடும். அதேநேரம் ஒருவருக்குக் குடல் வலுவாக இருந்து தேவையான அளவுக்கு எதிர்ப்பு ஆற்றலும் இருந்தால், அடுத்தவருக்கு நோயை ஏற்படுத்தும் அதே நுண்ணுயிரி இவருக்கு எவ்விதக் கெடுதலும் செய்வதில்லை.

இந்தக் கெடுதல்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

சுகாதாரமான சூழலில் வசிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட சுத்தமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது, சுத்தமான குடிநீரைக் குடிப்பது, மூடிப் பாதுகாக்கப்படாத, அசுத்தமான உணவைத் தவிர்ப்பது போன்ற சரியான வாழ்க்கைமுறை மூலம் கெட்ட நுண்ணுயிரிகள் குடலுக்குள் புகுவதைத் தடுக்கலாம்; அதன் மூலம் பலதரப்பட்ட குடல் நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

குடலில் நுண்ணுயிரிகள் அழிக்கப் படுவதை எப்படித் தவிர்ப்பது?

முதலில் தேவையில்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சுய மருத்துவம் கூடாது. மருத்துவர் சொல்லாமல் எந்தவொரு நுண்ணுயிர்க்கொல்லி மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. முடிந்தவரை செயற்கை உணவு வகைகள், செயற்கைப் பானங்கள், துரித உணவு வகைகள் ஆகியவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு, நம் மரபு இயற்கை உணவுக்கு முன்னுரிமை கொடுப்பது பலனளிக்கும். முழுத்தானிய உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், நாட்டுக் காய்கள், பழங்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, வாழைப்பழம், தயிர் உள்ளிட்ட ‘பிரீபயாட்டிக் உணவு’ போன்றவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குடலில் வளர்வதற்குப் பெரிதும் உதவும். அசைவ உணவைவிட நார்ச்சத்து மிகுந்த சைவ உணவு குடலுக்கு நல்லது செய்யும்.

பிறந்த குழந்தைகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் தாய்ப்பால் தரவேண்டியதும் முக்கியம். அப்படிக் கொடுக்கும்போது ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குக் குடல் தளம் வலுவாகிவிடும். தேவையான உடற்பயிற்சி, மதுவும் மன அழுத்தமும் இல்லாத வாழ்க்கை, சரியான உறக்கம் குடல் நுண்ணுயிரிகளைக் காக்கும்.

எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile) ஆகிய மூன்று திரவங்கள் செரிமானத்துக்கு முக்கியமானவை. இந்தத் திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.இஞ்சி, ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது. இது, வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்க விடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com


மருத்துவம் தெளிவோம்குடல் நுண்ணுயிரிகுடல்உணவுச் செரிமானம்குடல் எரிச்சல்நோய் எதிர்ப்புநுண்ணுயிரிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author