Last Updated : 19 Jul, 2015 12:59 PM

 

Published : 19 Jul 2015 12:59 PM
Last Updated : 19 Jul 2015 12:59 PM

பெண் சக்தி: சிகரம் தொட்ட செரீனா!

டென்னிஸ் வரலாற்றின் தலைசிறந்த வீராங்கனையாகக் கருதப்படும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிப் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் சேகினாவில் ரிச்சர்ட் வில்லியம்ஸ் -ஒராசீன் பிரைஸ் தம்பதியின் இளைய மகளாகப் பிறந்த செரீனாவுக்கு மூன்று வயதிலேயே டென்னிஸ் மீது காதல். அப்போதே தொடங்கியது அவரது டென்னிஸ் பயணம். ஆரம்பத்தில் பெற்றோர் மூலமாக டென்னிஸ் கற்றுக்கொண்ட செரீனா, ஒன்பது வயதில் டென்னிஸ் அகாடமிக்குச் சென்று தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸுடன் முறையான பயிற்சியில் ஈடுபட்டார்.

தடைபோட்ட இன பாகுபாடு

ஒரே ஆண்டில் ஜூனியர் டென்னிஸில் வில்லியம்ஸ் சகோதரிகள் அசைக்க முடியாதவர்களாக உருவெடுத்ததை வெள்ளை யர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெள்ளை டென்னிஸ் வீரர்களின் பெற்றோர்கள், வில்லியம்ஸ் சகோதரிகளை இனப் பாகுபாட்டுடன் குறைத்துப் பேசியபோது அதைத் தாங்க முடியாமல் துடித்தார் அவர்களின் தந்தை ரிச்சர்ட்.

அதைத் தொடர்ந்து தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வீனஸ்-செரீனா சகோதரிகளை ரிச்சர்ட் அனுமதிக்கவில்லை. அந்தத் தருணத்தில் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் 49 ஆட்டங்களில் ஆடியிருந்த செரீனா 46-ல் வெற்றி கண்டிருந்தார். 10 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.

பின்னர் டென்னிஸ் அகாடமியிலிருந்தும் வெளியேறினர். ஆனால் டென்னிஸ் விளையாடுவதை மட்டும் நிறுத்தவில்லை. தொடர்ந்து தந்தையிடம் பயிற்சி பெற்ற செரீனா, 2000-ல் மீண்டும் ஜூனியர் போட்டியில் கலக்க ஆரம்பித்தார். இதன் பிறகு அவர் இனரீதியாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், டென்னிஸில் மட்டும் ஏறுமுகத்தையே பார்த்தார்.

வெற்றியின் ஏறுமுகம்

கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த செரீனா, முதல்முறையாக 2002-ல் முதலிடத்துக்கு முன்னேறினார். 2013-ல் 6-வது முறையாக முதலிடத்தைப் பிடித்தபோது, டென்னிஸ் வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்த மூத்த வீராங்கனை என்ற பெருமையும் அவர் வசமானது.

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், டபிள்யூ.டி.ஏ. டூர் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் ஆகியவற்றின் தற்போதைய நடப்பு சாம்பியனாக வலம் வந்துகொண்டிருக்கும் செரீனாவை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளும், அவர்களுடைய பயிற்சியாளர்களும்!

தற்போது விளையாடிவரும் ஆண், பெண் டென்னிஸ் நட்சத்திரங்களில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகியவற்றில் அதிகப் பட்டங்கள் வென்றவர் செரீனாதான். ஒற்றையர் பிரிவில் 21, இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 2 என மொத்தம் 36 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் இன்று செரீனாவின் வசமிருக்கின்றன.

சாதனைகளின் நாயகி

ஓபன் எராவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை (33 வயது 289 நாட்கள்) என்ற சாதனைக்குரியவரான செரீனா, தொடர்ச்சியாக 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் 2-வது முறையாக வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன், இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் வெற்றி கண்டிருக்கும் செரீனா, இதற்கு முன்னர் 2002-03 காலகட்டத்தில் இதேபோன்று தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் வென்றிருந்தார். இந்தச் சாதனையை செய்த 5-வது வீராங்கனை செரீனா.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் தற்போது 3-வது இடத்தில் உள்ளார் செரீனா. ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் (24) முதலிடத்திலும், ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் (22) 2-வது இடத்திலும் உள்ளனர். ஓபன் எராவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் ஸ்டெபி கிராஃபுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனில் வெல்லும் பட்சத்தில் 1988-க்குப் பிறகு (ஸ்டெபி கிராஃப்) காலண்டர் கிராண்ட் ஸ்லாம் (ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெல்வது) வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை செரீனா பெறுவார்.

4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3-ல் குறைந்தபட்சம் 6 பட்டங்களை வென்ற ஒரே நபர் செரீனாதான். இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இதுவரை தோற்றதே கிடையாது.

ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தையும், இரட்டையர் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இதன் மூலம் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் ‘கேரியர் கோல்டன் ஸ்லாம்’ வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். ‘கேரியர் கோல்டன் ஸ்லாம்’ என்பது 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் சாம்பியனாவதாகும். உலகின் 8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. டூர் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் இதுவரை 5 முறை சாம்பியனாகியிருக்கிறார்.

மறுக்கப்படும் அங்கீகாரம்

செரீனா இன்று மகளிர் டென்னிஸ் உலகின் மகத்தான வீராங்கனையாகத் திகழ்ந்தாலும், அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. செரீனா கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இன்றும் அவரது சாதனையை அங்கீகரிக்க மறுக்கிறது வெள்ளையர் ஆதிக்கம் மிகுந்த டென்னிஸ் உலகம். இனரீதியாக மட்டுமல்ல, பாலினரீதியாகக்கூட அவர் மீது விமர்சனக் கணைகள் வீசப்பட்டன.

செரீனாவின் வெற்றியைச் சகிக்க முடியாதவர்கள், அவர் ஆண் போல இருக்கிறார், பெண்ணே அல்ல என்று ஆரம்பித்து எத்தனையோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுபோன்ற மனரீதியான தாக்குதல்கள் செரீனாவை வீழ்த்திவிடும் என்று நினைத்தார்கள். அவர் பலமுறை ஊக்கமருந்து சோதனைக்கும், பாலினச் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.

மேற்கத்திய ஊடகங்கள்கூட இனரீதியான பாகுபாட்டோடு அவரை விமர்சிப்பது இன்றும் தொடர்கிறது. விம்பிள்டன் அரையிறுதியில்கூட மரியா ஷரபோவாவுடன் அவர் மோதியபோது, ‘செரீனா உடல் ரீதியாகப் பலம் வாய்ந்தவராக இருக்கலாம். ஆனால் வெள்ளை அழகியான மரியா ஷரபோவாவின் அழகுடன் போட்டியிட முடியாது’ என பிரிட்டிஷ் ஊடகம் கேலி செய்தது. அவரை வீழ்த்த எத்தனையோ சதிகள் ஏவிவிடப்பட்டபோதும் அவற்றையெல்லாம் வீழ்த்தி அசைக்க முடியாத வீராங்கனையாக இருக்கும் செரீனா, இன்று தனது கருப்பினத்துக்கே பெருமையாகத் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x