Published : 14 Oct 2019 12:48 PM
Last Updated : 14 Oct 2019 12:48 PM

எண்ணித் துணிக: மெல்லிய சிந்தனை, புஷ்டியான லாபம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தொடங்குவது லேசுபட்ட காரியமல்ல. இஷ்டப்பட்டு தொடங்கி கஷ்டப்பட்டு உழைத்தாலும் பெரும் பாலானவை நஷ்டப்பட்டு நலியவே செய்கின்றன. தொன்னூறு சதவீத ஸ்டார்ட் அப்ஸ் பூட்ட கேஸ் என்கிறது ஒரு புள்ளி விவரம். நல்ல பிசினஸ் ஐடியா இருந்தும் பல ஸ்டார்ட் அப்ஸ் தோற்கின்றன என்பதுதான் இதில் வேதனையான விஷயம். இத்தனை தோல்விகளுக்கு காரணம்தான் என்ன?

அஷ்டமத்து சனி. ஸ்டார்ட் அப் தொடங்குபவருக்கு அல்ல; தொழிலை சரிவர அறியாத குறையால் வந்த வினை. ஐடியாவை தொழிலாக்கும் திட்டத்தில் உள்ள குழப்பம். பிசினஸை கரெக்ட்டாக வடிவமைக்காத தவறால் ஏற்படும் விபரீதம். இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் மந்திரம் ஒன்று உண்டு. அதற்குப் பெயர் ‘லீன் ஸ்டார்ட் அப் மெதடாலஜி’.

ஸ்டார்ட் அப்பை எளிதாக்கும் முறை. இதை மந்திரம் என்று சொல்வதை விட செயல்முறை என்று கூறலாம். இந்த செயல்முறை கொண்டு ஸ்டார்ட் அப் தொடங்கினால் செல்வம் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்லவில்லை. உங்கள் கூரை பிய்ந்து போகாமல் செல்வம் சம்பாதிக்கும் சாத்தியக்கூறு அதிகரிக்கும் என்று வேண்டுமானால் கூறலாம்.

திட்டமிட செலவழிக்கும் நேரத்தை மார்க்கெட்டுக்கு சென்று பரிசோதனை செய்வதில் செலவழியுங்கள் என்கிறது லீன் ஸ்டார்ட் அப். ரூம் போட்டு ஐடியாவை யோசிக்காமல் மக்களை நேரில் சென்று பேசிப் பழகி புரிந்துகொள்ள முயலுங்கள் என்கிறது இந்த சித்தாந்தம். எதையும் பெரிதாய் வடிவமைத்து முடித்துவிட்டு கடைசியில் அதை சோதித்துப் பார்க்காமல் மக்களிடம் பேசிப் பார்த்து புரிந்துகொண்டு, அதற்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாய் ஐடரேடிவாய் பொருளை வடிவமையுங்கள் என்கிறது.

ஒரு பொருளுக்கு ஐடியா கிடைத்த மாத்திரம் அதை ஸ்டார்ட் அப் ஆக்கித் தயாரித்து விற்கத்தான் பலரும் முயல்கின்றனர். அந்த ஐடியா சரியானதா, தயாரிக்க நினைக்கும் பொருள் வாடிக்கையாளருக்கு தேவைப்படுமா, அவர் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுமா, அதைவிட பெட்டரான பொருள் ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை.

அதனாலேயே தங்கள் ஐடியாவை பொருளாக்குவதிலேயே, அந்த பொருளைப் பார்த்து பார்த்து செதுக்குவதிலேயே காலத்தை கடத்துகின்றனர். ஐடியாவை வாடிக்கை யாளர்களிடம் பேசிப் பார்த்து சோதிப்பதும் இல்லை. தயாரிக்க நினைக்கும் பொருளை உத்தேசமாய் செய்து அதை வாடிக்கையாளரிடம் தந்து உபயோகிக்கச் சொல்லி அவர்கள் கருத்தை பெறுவதும் இல்லை. ஐடியா சாஸ்வதம், தயாரிக்க நினைக்கும் பொருள் சவுகரியம், ஆரம்பிக்கப் போகும் பிசினஸ் சக்சஸ் என்று காரியத்தில் இறங்குகின்றனர். வாடிக்கையாளர் ‘நோ தேங்க்ஸ்’ என்று நிராகரிக்கும் போது தொழிலுக்கு காரியம் செய்கின்றனர்!

லீன் ஸ்டார்ட் ஆப் செயல்முறையின் குறிக்கோள் ரொம்பவே சிம்பிள். ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பும் ஒரு சோதனை முயற்சி. ஒரு கேள்விக்கான பதிலின் தேடல். தொழில் தொடங்க மனதில் தோன்றும் ஐடியாவை பொருளாக்க முடியுமா என்பதல்ல கேள்வி. அந்த ஐடியாவை பொருளாக்க வேண்டுமா என்பதற்கான பதில். இந்தப் பொருளை தயாரித்து தொழில் துவங்கினால் அந்த தொழில் பிழைக்குமா, காலா காலத்துக்கும் தழைக்குமா என்பதற்கான விடை தேடும் விடா முயற்சி.

யாரிடம் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கும்? வேறு யார், சாட்சாத் உங்கள் வாடிக்கையாளர்கள்தான். விற்கப் போவது அவர்களிடம் எனும்போது, உங்கள் பொருளை வாங்கி உபயோகிக்கப்போவது அவர்கள்தான் எனும் போது அவர்களிடம் உங்கள் ஐடியாவை பொருளாக்கி செக் செய்வதுதானே நியாயம். அதுதானே முறை. அதற்காக லீன் ஸ்டார்ட் அப் என்பது என்னவோ வாடிக்கையாளர்களிடம் மருந்துக்கு பேசும் ஒரு தத்துவார்த்த சோதனை (Theoretical enquiry) என்று நினைத்துவிடாதீர்கள். அதையும் தாண்டி புனிதமானது!

உங்கள் ஐடியாவை ஒரு மாதிரி பொருளாக்கி அப்பொருளை நீங்கள் விற்க நினைக்கும் வாடிக்கையாளர்களிடம் தந்து பயன்படுத்தச் சொல்லி அவர்கள் கருத்தை, கஷ்டங்களை முடிந்தால் நேரிலேயே பார்த்து உணரும் பிராசஸ்தான் லீன் ஸ்டார்ட் அப் மெதடாலஜி. பொருளை மார்க்கெட்டில் மொத்தமாய் அறிமுகப்படுத்துவதற்கு முன் அப்பொருளை மேலும் நேர்படுத்தும் வழிகளை அறிந்துகொள்ளும் வழி இது. அது மட்டுமல்ல, உங்கள் பொருளை எப்படி விற்பது, என்ன சொல்லி விற்பது, விளம்பரம் செய்வதென்றால் எந்த வார்த்தைகளை பயன்படுத்துவது முதற்கொண்டு புரிந்துகொள்ளும் அணுகுமுறை.

இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்து பொருளை தயாரித்து மார்க்கெட்டில் விற்க நினைக்கும்போது வாங்க ரெடியாய் இருக்கும் வாடிக்கையாளர்களை தயார் செய்து வைக்க முடிகிறது. பொருள் புரிந்து வாடிக்கையாளரை அறிந்தபின் வேறென்ன வேண்டும். நடுநடுவே மானே, தேனே, பொன்மானே சேர்த்துக்கொண்டால் போயிற்று!
லீன் ஸ்டார்ட் அப் செயல்முறையை 2008-ம் ஆண்டில் படைத்தார் ‘எரிக் ரீஸ்’ என்னும் தொழிலதிபர். தான் தொழில் துவங்கிய அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களை செயல்முறையாக கூறினார்.

அப்பொழுது பிரபலமாக இருந்த ‘டொயோட்டா’ கம்பெனியின் தயாரிப்பு சிஸ்டத்தோடு, தான் தொழில் தொடங்கிய அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை பிரதிபலிக்கும் விதமாக தன் செயல்முறைக்கு ‘லீன் ஸ்டார்ட் அப் மெதடாலஜி’ என்று பெயரிட்டார். சுமார் பத்து பன்னிரண்டு வருடங்களாக உலகமெங்கும் பிரபலமாகி வரும் இந்த செயல்முறையை ஸ்டார்ட் அப்ஸ் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றன. இதன் முக்கிய அம்சங்களையும் செயல்படுத்தும் விதங்களையும் அடுத்த வாரம் அலசுவோம்.ஏன் கட்டுரையை இழுக்கிறாய் என்று கூறுபவர்களுக்கு... கான்செப்ட்தான் சார் லீன். கட்டுரை கொஞ்சம் ஹெவியாய் இருந்துவிட்டு போகட்டுமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x