Published : 14 Oct 2019 12:33 PM
Last Updated : 14 Oct 2019 12:33 PM

பாரத் புகை விதி 6 அமலுக்கு வருகிறது இனி இந்த கார்கள் கிடைக்காது!

கார்கள் அந்தஸ்தின் அடையாளம் என்ற நிலை மாறி, போக்குவரத்துக்கு பிரதான தேவையாக மாறிவிட்டன. பொது போக்குவரத்து சிக்கலானதாக மாறிவிட்ட சூழலில் தனிநபர்கள் தங்கள் வசதிக்காக கார்களை வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. வங்கிகளின் சுலப தவணை திட்டம் அனைவருக்கும் கார் வாங்குவதை சாத்தியமாக்கியது என்றே சொல்லலாம்.

இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக மாடல் மீது ஆசை, விருப்பம் இருக்கத்தான் செய்யும். சில கார்களின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதி வாங்க நினைப்பவர்களும், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்போரும் உண்டு. அவ்விதம் கார்கள் வாங்க திட்டமிடுபவர்கள் பின்வரும் கார்களில் ஏதேனும் ஒன்றை வாங்க நினைத்திருந்தால் அதை இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கி தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு டஜனுக்கும் அதிகமான கார் மாடல்கள் இனி தயாராகப் போவதில்லை.

ஆம், பாரத் புகை விதி-6 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரப் போகிறது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் சில மாடல் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே உள்ள மாடல்களில் மாற்றங்கள் செய்வதற்கு ஆகும் செலவை விட புதிய மாடல்களைத் தயாரிப்பதே சிறந்தது என்று நிறுவனங்கள் கருதியதும் இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் சில மாடல்கள் அதிக விலையாக இருப்பதால் விற்பனை குறைந்து போயுள்ளது. அத்தகைய மாடல்களையும் நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டுக்குப் பிறகு சந்தையில் கிடைக்காமல் போகக்கூடிய கார்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ரெனால்ட் டஸ்டர் ஏடபிள்யூடி

ரெனால்ட் நிறுவனத் தயாரிப்புகளில் டஸ்டர் மாடல் விற்பனையின் பங்கு வெறும் 5 சதவீதமாகும். 1.5 லிட்டர் இஞ்ஜினைக் கொண்ட இந்த மாடலை பாரத்-6 புகை விதி சோதனைக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு அதிகம் செலவாகும். இதற்குப் பதில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் டஸ்டர் ஏடபிள்யூடி மாடலானது சாலைப் பயணத்துக்கும் சாகசப் பயணத்துக்கும் ஏற்றதாகத் திகழ்கிறது. பொதுவாக இந்த மாடல் காரை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இதன் செயல்பாடுகளில் மிகவும் திருப்தியாகவே உள்ளனர். இதனால் இந்த மாடல் மீது ஆர்வம் இருந்தால் இதை வாங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.

ஃபோர்டு எகோஸ்போர்ட் எஸ்

மிகச் சிறந்த இன்ஜினுக்கான விருதினைப் பெற்ற எகோபூஸ்ட் இதில் உள்ளது. இருந்தாலும் எகோஸ்போர்ட் மாடல் விற்பனை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. மேலும், இது எரிபொருள் சிக்கனமானது அல்ல என்பதாலும் இதை பெரும்பாலானவர்கள் தவிர்த்தனர். இதில் உள்ள இஞ்ஜின் இறக்குமதி செய்யப்பட்டதாகும். இது விலை அதிகமானதும்கூட.

ஆனால், பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதில் மாற்றங்கள் செய்வது அதிக செலவு பிடிக்கும் விஷயமாகும். இருந்தாலும் இது ஓட்டுவதற்கு மிகவும் சவுகர்யமான கார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை நீங்கள் இந்தக் காரை வாங்கினாலும், விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் கிடைப்பதை ஃபோர்டு நிறுவனம் உறுதி செய்கிறது. இதனால் இந்த மாடலை விரும்பினால் வாங்குவதில் தவறில்லை.

மாருதி எர்டிகா 1.5 டீசல்

பலப்பல மாடல்களை அடிக்கடி அறிமுகம் செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எர்டிகா டீசல் மாடல். இந்த மாடலை மேம்படுத்துவது செலவு பிடிக்கும் என்பதாலேயே இதைக் கைவிட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த மாடல் இந்த ஆண்டுதான் அறிமுகமானது. விற்பனைக்குப் பிந்தைய சேவை எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் நிறுவனம் அளிக்கும் உத்தரவாத காலம் வரை, இதற்கு எவ்விதப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பலாம்.

டாடா ஹெக்ஸா ஆட்டோமேடிக்

மாதாந்திர விற்பனை 150 என்ற அளவுக்கு இந்த மாடலின் விற்பனை சரிந்துவிட்டது. 2.2 லிட்டர் இஞ்ஜினைக் கொண்ட இந்த மாடலை மேம்படுத்துவது செலவுபிடிக்கும் விஷயமாகும். இதனால் இந்த மாடல் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்குப் பதிலாக ஹாரியர் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட நிறுவனம் முடிவு செய்துள்ளது. லேண்ட் ரோவர் அடிப்படையிலான ஹாரியரில் இல்லாத சில அம்சங்கள் ஹெக்சாவில் உள்ளன. ஐரோப்பிய சொகுசு கார்களின் இருக்கை போன்று இதில் உள்ளது. மேலும், கேபின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். ஹாரியரில் இதுவரை ஆட்டோமேடிக் கியர் வசதி கிடையாது. ஆனால், இந்த மாடலில் அத்தகைய வசதியும் உண்டு. இதில் ரூ.20 லட்சம் விலையிலான எம்பிவி மாடலை வாங்குவது சிறப்பானதாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் அமெயோ டிடிஐ ஏஐ

டீசல்கேட் முறைகேட்டில் சிக்கிய பிறகு, டீசல் வாகனங்களை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி, 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜினைக் கொண்ட அமெயோ மாடல் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த மாடல் காரில் மட்டும்தான் 7 கியர் வசதி உள்ளது. மேலும், 110 ஹெச்பி திறன் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்ட காராகவே இது விளங்குகிறது. இதில் ட்வின் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இருப்பதும் சிறப்பு. இதனால் இந்த மாடல் காரை வாங்குவது தவறான முடிவாக நிச்சயம் இருக்காது. நான்கு மீட்டருக்கும் குறைவான சப்-செடான் வாகனமாக இது விளங்குகிறது. இப்போது இந்தக் காருக்கு அளிக்கப்படும் தள்ளுபடி சலுகையில் இந்தக் காரை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ்

டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த தலைமுறை கொரோல்லா மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே உள்ள மாடல் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டீசல் மாடல் காரில் சற்று சப்தம் அதிகம் வரும். ஆனால் பெட்ரோல் மாடலை வாங்குவது சிறப்பானதாயிருக்கும்.

நிசான் சன்னி

உலகம் முழுவதுமே கடந்த ஓராண்டில் மொத்தமே 619 சன்னி கார்கள்தான் விற்பனையாகியுள்ளன. இவ்வளவு குறைந்த விற்பனை கொண்ட மாடலில் மேம்பாட்டுக்கென செலவிடுவது தவறான முடிவாக இருக்கும் என்று நிறுவனம் கருதுகிறது. இதனாலேயே ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகையையும் இந்நிறுவனம் அளித்துள்ளது. ரூ.8.8 லட்சம் விலையில் நடுத்தர ரக செடான் காரில் சிறப்பானதாக இது உள்ளது. வாங்க விரும்பினால் இதை தேர்வு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x