Published : 13 Oct 2019 03:29 PM
Last Updated : 13 Oct 2019 03:29 PM

வாசிப்பை நேசிப்போம்: வரலாற்றுக்குள் செல்லும் பயணம்

அம்மா மளிகைப் பொருட்கள் வாங்கிவரும் பொட்டலத்தாள்களில் உள்ள செய்திகளைப் படிப்பதில் தொடங்கியது என்னுடைய வாசிப்பு. அதுதான் புத்தகங்களை நோக்கி என்னை நகரச்செய்தது.

எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ என்ற நூல், நாம் அடிக்கடி என்ன நினைக்கிறோமோ என்ன பேசுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என எண்ணங்களின் வலிமையை எடுத்துச்சொன்னது. அவரது ‘தன்னை அறியும் அறிவு’ என்ற புத்தகம், வாழ்க்கையில் இருப்பதை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும் என்பதை உணர்த்தியது. சங்க கால இலக்கியங்களான ஆற்றுப்படை நூல்கள், பட்டினப்பாலை ஆகியவை தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறையை எடுத்துரைத்தன. இந்தப் புத்தகங்களைப் படித்த காரணத்தால்தான் தற்போது கீழடியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் அதை மற்றவர்களிடம் சொல்லவும் முடிகிறது.

சாண்டில்யனின் ‘கடல் புறா’, ‘யவன ராணி’ போன்ற வரலாற்றுப் புதினங்கள் அக்கால வாழ்க்கை முறையைக் கற்பனை செய்து பார்க்க உதவின. சிவசங்கரியின் ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?’ புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துகள் எனக்கு வாழ்க்கையில் பல முறை உதவின. விட்டுக்கொடுப்பதையும் வருவதை ஏற்கும் மனப்பக்குவத்தையும் புத்தகங்களே தந்தன. திருமந்திரத்தில் கூறும், ‘தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை’ என்ற வாக்கியம் நம்மிடம் உள்ள மாபெரும் சக்தியை ஆராய்ந்து பார்க்கவும் மனம் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் உணர்த்துகிறது. அந்த வகையில் தெளிவாகச் சிந்திக்க புத்தகங்களே உதவுகின்றன.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை.

அறுபதிலும் அலுக்காத வாசிப்பு

டலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்கு வாசிப்புதான் பயிற்சி என்று சிக்மண்ட் பிராய்டு சொன்னதைச் சொல்லிச் சொல்லியே புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வாசிப்பின் அருமையையும் அவசியத்தையும் எங்கள் அப்பா உணர்த்தினார்.

மார்க்சியக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்த அவர் பல நாளிதழ்களையும் லெனின் முதலான தலைவர் பற்றிய புத்தகங்களையும் படிப்பார். நானும் என் தம்பியும் ஒன்றும் புரியாவிட்டாலும் அவற்றைப் புரட்டிப் பார்ப்போம் ஒரு முறை எங்கள் ஊரில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவுக்குத் தலைமை தாங்க வந்த, எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மாலை போட்டு வரவேற்கும் வாய்ப்பு சிறுமியாக இருந்த எனக்குக் கிடைத்தது. அந்தப் பெருமிதத்தாலோ என்னவோ, அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் வளர்ந்த பிறகு படிக்க ஆரம்பித்தேன். சமூக அக்கறையுடன் அவர் எழுதியவை என்னைத் தாக்கின.

ஆறாவது படித்தபோது வார இதழ்களை வாசிக்கத் தொடங்கினேன். முதலில் ஜோக்ஸ் மட்டும்தான் படிப்பேன். பிறகுதான் சிறுகதைகள், கட்டுரை என வாசிக்க ஆரம்பித்தேன். பள்ளியிலும் தமிழாசிரியை தமிழைச் சிறப்பாகக் கற்பித்து மொழிமேல் ஆர்வம் கொள்ளச் செய்தார். கல்லூரி நாட்களில் ‘பொன்னியின் செல்வ’னைப் படித்து கல்கியின் எழுத்துக்கு அடிமையானேன். கல்கியின் எழுத்துகள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. அதன் விளைவாகக் கவிதை எழுத முயன்றேன்.

விடுமுறை நாட்களில் நாவல்கள் வாங்கிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்களின் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோரின் கதைகளை வாசித்து அவற்றுள் கரைந்து போனதுண்டு. தமிழ்வாணனின் துப்பறியும் சங்கர்லால் மர்மக் கதைகளை நானும் என் சகோதரர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்து, விவாதிப்போம். திருமணத்துக்குப் பிறகு கணவரும் என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அசத்தினார்.

பாலகுமாரன் கதைகள் (குறிப்பாக இரும்புக் குதிரைகள்) யதார்த்தத்தைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களை மறந்து நகைச்சுவை மிளிர அனுராதா ரமணன் எழுதியவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து எனது வலிகளை மறந்ததுண்டு. என் குழந்தைகளுக்கும் வாசிப்பை நேசிக்கக் கற்றுக்கொடுத்து அருகில் உள்ள நூல் நிலையத்தில் உறுப்பினராகச் செய்துள்ளேன். எங்கள் வீட்டில் எங்கே திரும்பினாலும் புத்தகங்களைக் காணலாம். எங்கே சென்றாலும் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருப்பேன். எனது தனிமையை விரட்டி, வெறுமையை நிரப்பி, பொறுமையைக் கற்றுக்கொடுத்து, மனத்தில் வலிமையை ஊட்டி, செயலில் எளிமையை ஏற்றி, அகவை அறுபதைத் தொட்டபோதும் உவகையுடன் வலம்வரப் புத்தகங்களே காரணம்.இந்நாளில் இணையதளத்தில் படிக்கும் வசதி இருந்தாலும் கையில் புத்தகம் ஏந்தி, கணப்பொழுதும் கீழே வைக்காமல் வாசிக்கும் இன்பத்துக்கு ஈடாகாது. அதனால்தான் யாருக்காவது பரிசு தர நேர்ந்தாலும் புத்தகங்களையே வாங்கித் தருகிறேன்.

- ஜெயா வெங்கட், கோவை.

குழந்தைகளுக்கு ஒரு நூலகம்

ம்புலிமாமா, பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று தொடங்கியது என் வாசிப்புப் பயணம். அதன் தாக்கம்தான் என்னைச் சிறுகதைகளை எழுதத் தூண்டியது. மஹாராஷ்டிரத்தில் உள்ள நாசிக்கில் என் கணவர் வேலை பார்த்ததால் திருமணம் முடிந்ததும் அங்கே சென்றேன். அங்கே தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காது என்பதால் என்னிடம் இருந்த கதைப் புத்தகங்களை எடுத்துச் சென்றேன். அவற்றில் உள்ள கதைகளை என் மகளுக்குச் சொல்வேன்.

பிறகு என் கணவருக்கு பெங்களூருக்கு மாற்றலாகிவிட்டதால் அங்கு குடிபெயர்ந்தோம். அங்கும் புத்தகங்களே எனக்கு உற்றதோழியாக இருந்தன. அங்கே நிறைய தமிழ்க் குழந்தைகள் இருந்ததால் என்னிடம் இருந்த சிறுவர்களுக்கான புத்தகங்களை வைத்து, சிறு நூலகம் ஒன்றைத் தொடங்கினேன். அதிலிருந்த புத்தகங்களைக் குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று என் பேத்தி, பேரன்களிடமும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. தொலைக்காட்சித் தொடர்கள் எதையும் நான் பார்ப்பதில்லை. காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணிவரை வானொலி. பிறகு புத்தகம் படிப்பது, எழுதுவது என்று என் நேரத்தைக் கழிக்கிறேன். இறுதிவரை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

- உஷா முத்துராமன், திருநகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x