Last Updated : 24 Jul, 2015 11:54 AM

 

Published : 24 Jul 2015 11:54 AM
Last Updated : 24 Jul 2015 11:54 AM

காற்றில் கலந்த இசை 14: தனித்துவம் கொண்ட குரல்களின் பாடல்

தமிழ்த் திரையிசையில் ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர்களைப் போல், மிகச் சில பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்கள் நினைவில் நிலைத்து விட்டவர்கள் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றில் புகழ்பெற்ற பாடல்களின் சதவீதம் அதிகம் கொண்டவர்கள் தனிரகம். பாடகர்களில் ஜெயச்சந்திரனும், பாடகிகளில் ஜென்ஸியும் இப்பட்டியலின் முதல்வர்கள். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் இவர்கள் பாடிய எல்லாப் பாடல்களும் ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவை.

ஜேசுதாஸ் குரலுடன் ஜெயச்சந்திரனைப் போட்டுக் குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. அதேபோல், (ஆரம்பகால) சுஜாதாவின் பாடல்களை ஜென்ஸி பாடியதாகச் சொல்பவர்களும் உண்டு. உண்மையில், இவர்கள் இருவரின் குரல்களும் ஒப்புமை இல்லாத் தனித்தன்மை கொண்டவை. மெல்லிய உணர்வை அதன் இயல்புடன் வெளிப்படுத்தத் தெரிந்த மிகச் சிறந்த கலைஞர்கள் இவர்கள்.

ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் உள்ளிட்டோருடன் பாடியிருக்கும் ஜென்ஸி, ஜெயச்சந்திரனுடன் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒன்று ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் ‘ஏ… மஸ்தானா’. ஜெயச்சந்திரன் ஜென்ஸி இணையின் மற்றொரு பாடல், ‘அன்பே சங்கீதா’ படத்தில் இடம்பெற்ற ‘கீதா… சங்கீதா’.

1979-ல் வெளியான ‘அன்பே சங்கீதா’ படத்தின் நடிகர்கள் தேர்வு பல ஆச்சரியங்களைக் கொண்டது. ராதிகாவுக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடித்திருப்பார். முக்கியப் பாத்திரத்தில் சுமித்ரா, தேங்காய் சீனிவாசன் என்று ’வித்தியாசமான’ படம். ‘அச்சாணி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய காரைக்குடி நாராயணனின் இந்தப் படம் தோல்வியடைந்தது. ஆனால், வெற்றி தோல்விகள் படங்களுக்குத்தான்; இளையராஜாவின் பாடல்கள் அந்த எல்லையைக் கடந்தவை.

பட்டியலில் அடங்கா இசை

‘லாலாலலலா… லாலாலலலா’ என்று புத்துணர்வுடன் தொடங்கும் ஜென்ஸியின் குரலைப் பின்தொடர்வது போல் புல்லாங்குழல் ஒலிக்கும். இனிமையான அந்தக் கலவையைத் தொடர்ந்து அழுத்தமான உணர்வுகளின் தொகுப்பாக வயலின் இசைக்கோவை காற்றில் படரும். காதல் பாடல்தான் என்றாலும், பாடல் முழுவதும் மெல்லிய சோகம் தொனித்துக்கொண்டே இருக்கும்.

பாந்தமான கம்பீரத்துடன் ‘கீதா… சங்கீதா’ என்று பல்லவியைத் தொடங்குவார் ஜெயச்சந்திரன். ‘ஜீவ அமுதம் உன் மோகனம்’ எனும் வரிகளைப் பாடும்போது ஆண் குரலுக்குள் இத்தனை மென்மை இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். ‘கண்ணா… என் கண்ணா’ என்று பதில் தரும் ஜென்ஸியின் குரலில் இருக்கும் மெல்லிய நடுக்கம், காதலில் தடுமாறும் இளம் இதயத்தின் நுட்பமான பதிவு.

இப்பாடலின் நிரவல் இசை முழுவதும் கடந்த காலத் தருணங்களை நினைவூட்டும் இசைக்கூறுகளைக் கொண்டது. நகரம் அல்லது சிறு நகரம் ஒன்றின் தெருக்களின் சித்திரத்தை இப்பாடல் மனதுக்குள் வரையும். மதிய வேளைக்கும் மாலை நேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் மனதுக்குள் பதிவான காட்சிகளை இப்பாடல் தொகுத்துத் தரும். காதல், சோகம் எனும் பட்டியல் உணர்வுகளைத் தாண்டி மிக நுட்பமான உணர்வுகளைத் தரும் பாடல்களை உருவாக்கியதில் இளையராஜாவின் பங்கு மகத்தானது. அவற்றில் ஒன்று இப்பாடல். எச்சரிக்கை: இப்பாடல் யூட்யூபில் காட்சி வடிவிலும் கிடைக்கிறது. அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, ஒலி வடிவில் மட்டும் இப்பாடலைக் கேட்பது நலம்.

நிழல் மேகத்தின் பாடல்

படத்தின் தலைப்பைக் கேட்டவுடன் பலரது நினைவில் வரும் பாடல், ‘சின்னப் புறா ஒன்று’. தனது இசையுலக வாழ்வின் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த எஸ்.பி.பி. உணர்வுபூர்வமாகப் பாடிய பாடல்களில் ஒன்று இது. இயலாமையின் வலியைப் பிரதிபலிக்கும் பியானோ இசையைத் தொடர்ந்து, சோக தேவதையின் அசரீரி போல் எஸ்.பி. ஷைலஜாவின் ஹம்மிங் ஒலிக்கும். இசைக் கருவிகளால் எட்ட முடியாத உயரத்தை, தர முடியாத உணர்வைப் பொழியும் குரலாக அவரது குரல் காற்றை ஊடுருவும்.

இழப்பின் வலியை உணர்த்தும் பாடலுக்கு, ஒரு இசையமைப்பாளர் எத்தனை நியாயம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் பாடல். பியானோ, வயலின், கித்தார் என்று இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் சோக வண்ணங்களைப் பூசியிருப்பார் இளையராஜா. ‘எந்தன் ராகங்கள் தூங்காது…’ எனும் வரியைத் தொடர்ந்து ஒலிக்கும் தாளத்தின் மாற்றத்தில் ஒரு சின்ன நுணுக்கத்தைக் காட்டியிருப்பார் இளையராஜா.

‘நூறாண்டுகள்… நீ வாழ்கவே’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் குரலின் தொடர்ச்சியாகத் எதிர்பாராத வெள்ளம் போன்ற அடர்த்தியுடன் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின், இறுகிய மனதைக் கூட உடைத்து அழச் செய்துவிடும். ‘மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை?’ எனும் வாலியின் வரிகள் அன்பின் இழப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும்.

ஜெயச்சந்திரன் பாடும் ‘பெத்தாலும் பெத்தேனடா’, இளையராஜா பாடும் ‘ரெண்டு பொண்டாட்டி’ ஆகிய பாடல்களும் இப்படத்தில் உண்டு.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x