Published : 06 Oct 2019 02:51 PM
Last Updated : 06 Oct 2019 02:51 PM

நட்சத்திர நிழல்கள் 26: காற்றில் கரையும் கண்ணம்மா

செல்லப்பா

பெண்களைத் தெய்வமாக வணங்குகிறோம் என்பார்கள். தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதையைத் துருவிப் பார்த்தால் அவர்களுக்கு மிகப் பெரிய அநீதியை இழைத்திருப்பார்கள். அதை நேர்செய்யும் முயற்சியாக அநீதியை இழைத்தவர்களின் குற்றவுணர்வுக்கு வடிகாலாக வந்ததே தெய்வமாக்கும் போக்கு. பெண்ணுக்கு எது அநீதி என்பதே புரியாதவகையில் அத்தகைய பெண்களைத் தியாகத் திருவுருக்களாக முன்னிறுத்திவிடுகிறார்கள்.

பெண்களைத் துன்புறுத்திக் கொன்ற கதை சுவரில் படிந்த சித்திரம்போல் மங்கிவிடுகிறது. கண்ணுக்கு முன்னே ஜெகஜோதியாக நிற்பது பெண்கள் தெய்வங்கள் எனும் மினுமினுப்பு மட்டுமே. யோசித்துப் பார்த்தால் இது பெரிய பித்தலாட்டமே. ஆனால், அப்படித் தோன்றாதவகையில் பெண்களைக் கையாளுவதே சமூகத்தின் சாமர்த்தியம். இந்த சாமர்த்தியத்தை அறியாதவள் கண்ணம்மா.

வீரமிகு தமிழ்த் திருமகன்

கண்ணம்மா ஒருவனைக் காதலித்தாள். அவன் சுப்பையா. ஜல்லிக்கட்டில் வீரத்தை நிலைநாட்டிய தமிழ்த் திருமகன். அவன் மாடுபிடிக்கும் அழகிலும் வீரத்திலும் தன்னைக் கொடுத்துவிட்டாள் கண்ணம்மா. அவனுக்கு உறவென்று ஒருவரும் இல்லை; தனிக்கட்டை. அவனிடம் தன் மனத்தைப் புரியவைத்து அவனை வீட்டில் வந்து பெண் கேட்கவைத்தாள்.

தன் நண்பன் சீனுவின் அம்மாவையும் பாட்டியையும் கூட்டி வந்து பெண் கேட்டான் சுப்பையா. ஆனால், கண்ணம்மாவின் தந்தை சொந்த பந்தமற்ற அவனுக்குப் பெண்ணைக் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று திட்டமாகக் கூறிவிட்டார். வேறு இடத்தில் கண்ணம்மாவுக்கு மாப்பிள்ளையும் பார்த்து நாள் குறித்துவிட்டார்.
செய்தியறிந்தும் எதுவும் செய்ய மாட்டாமல் இருந்தான் சுப்பையா. ஆனால், அவனது கையாள் முருகப்பனும் நண்பன் சீனுவும் உசுப்பேற்றி அவனைக் கண்ணம்மாவைத் தூக்கிவரச் செய்தார்கள்.

எப்படியோ சுப்பையாவையே திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்த கண்ணம்மாவின் எண்ணம் பலித்தது. மணமான பிறகு, கணவனும் மனைவியுமாக வாழ்க்கையைத் தொடங்கும் பொழுதில் ஒரு சிக்கல் முளைத்தது. முதல் இரவில் மேலெழுந்தவாரியாகச் செயல்படும் அவன், மூழ்கி முக்குளிக்க முடியாமல் திணறுகிறான். அவனது செயலற்ற தன்மைக்காக இரங்கும் கண்ணம்மா கடவுளிடம் வேண்டி, திருநீறு பூசி அவனை உறங்கச் செய்கிறாள். ஆனால், உடலியல் கோளாறை அவள் வணங்கும் கடவுளால் ஒன்றும் செய்ய இயலாது என்னும் உண்மை அவளது பக்த மனம் அறியாதது.

அதன் பின்னர், ஒவ்வோர் இரவிலும் இன்பமாகத் தொடங்கும் தாம்பத்திய சங்கீதம் முகாரியாக முடிகிறது; பொழுது துன்பமாய் விடிகிறது. மாட்டை அநாயாசமாக அடக்கிய சுப்பையா தன் மீது ஆசை கொண்ட மாதுவிடம் மிரண்டான். இனியும் பொறுக்க முடியாதென்று தோன்றியபோது கண்ணம்மாவுடன் பட்டணத்துக்குச் சென்று படித்த டாக்டரைப் பார்க்கிறான். அவனால் ஒருபோதும் கணவனாக இருக்க இயலாது என்னும் உண்மையைச் சொல்கிறார் மருத்துவர். கண்ணம்மாவுக்குப் பெரிய அதிர்ச்சிதான். சுப்பையாவுமே அதிர்ந்து போகிறான்.

தன்னை ஆசையுடன் மணந்து கொண்ட கண்ணம்மாவின் நிலையை உணர்ந்து கவலைகொள்கிறான். அவளை வேறு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறான். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் வழிவந்த பெண்ணான கண்ணம்மா அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. ஆசையுடன் கணவனுக்குப் பணிவிடைபுரியும் சுகமே தனக்குப் போதும் என்று சொல்லிவிடுகிறாள். தியாகத் திருவுருக்களுக்குக் கிடைக்கும் மகிமையே இப்படியான முடிவுகளை எடுக்கவைக்கும்போல.

பூனையாய் ஒரு நண்பன்

பொன்வைக்கும் இடத்தில் பூவைத்த படி அவர்களது வாழ்க்கை தொடர்ந்துகொண்டி ருக்கும் வேளையில் ஊருக்கு வருகிறான் பட்டணத்தில் படித்துவந்த சீனு. சுப்பையாவின் உயிர் நண்பனான சீனு வந்த பிறகு கண்ணம்மாவுக்குப் புதுப் பிரச்சினை ஒன்று வருகிறது. சுப்பையா வேண்டுகோளுக்கிணங்கி சீனுவுக்காக கண்ணம்மா சமைக்கும் ஒரு பொழுதில் அவளது சேலையில் நெருப்புப் பற்றிக்கொள்கிறது. நெருப்பை அணைக்கும் முயற்சியில் சீனுவும் கண்ணம்மாவும் நெருங்க நேர்கிறது. அவனது அணைப்பில் தன்னை மறந்து கிறங்கும் உடம்பை இழுத்துப் பிடித்து நிறுத்த மறந்துவிடுகிறது கண்ணம்மாவின் பொல்லா மனம். எனினும், சில நொடிகளில் சுதாரித்துவிடுகிறாள். ஆனால், அதற்குள் அவளது புனித மனம் பொசுங்கிப்போய்விடுகிறது. புனிதமென்று எதுவுமில்லை; எல்லாம் கற்பிதம் என்பதைக் கற்றறியா பேதையாக நிற்கும் கண்ணம்மா, மனத்தால் கெட்டுவிட்டதாக மறுகுகிறாள்.

இதுவரை சீனு அறியாத புது உலகின் கதவைச் சற்றுத் திறந்த கண்ணம்மா சட்டென அடைத்துவிட்டாள். ஆனால், கண நேர சபலத்தில் தென்பட்ட உலகின் ஜுவாலை அவனைச் சுட்டெரிக்க, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் கண்ணம்மா மூடிய கதவைப் பலமாகத் தட்டிப் பார்க்கிறான் சீனு. தவிக்கவைக்கும் கணவனைப் பெற்ற நிலையிலும் பண்பாட்டு வேலியைத் தாண்டத் துடிக்கும் சீனுவைத் தவிர்க்கவே துடிக்கிறாள் கண்ணம்மா. ஒரு புறம் சுப்பையா, மறுபுறம் சீனு என்று இருவரிடையே மாட்டிக்கொண்டு கண்ணம்மாதான் நொம்பலப்படுகிறாள்.

வெறும் கணம் ஒவ்வொன்றும் பெருங்கனத்துடன் கழிகிறது அவளுக்கு. இது எதையுமே அறியாத சுப்பையா மீண்டும் மீண்டும் சீனுவை அழைத்து வந்துகொண்டே இருக்கிறான். ஒரே வீட்டில் கிளியையும் பூனையையும் ஒன்றாக நிறுத்தும் விபரீதத்தை நிறுத்தாமல் தொடர்கிறான். தன்னை அதிகமாகப் பலவந்தப்படுத்தும் சீனுவிடம் நிலைதடுமாறிய ஒரு பொழுதில் நினைவு தடுமாறி சுப்பையாவின் நிலையை உளறிவிடுகிறாள் கண்ணம்மா. அது தெரிந்த பின்னர் அதையும் வைத்து மிரட்டத் தொடங்குகிறான் சீனு. எப்போதும் சுப்பையா வீட்டையே சுற்றிச் சுற்றி வரும் சீனுவை மோப்பம் பிடித்து அவனுடைய தந்தை அவனுக்குத் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். ஆனால், கண்ணாம்மாவின் நினைவால் ஏங்கிக் கிடக்கும் அவனால் பிறிதொரு பெண்ணை ஏற்க முடியவில்லை.

ஒரு புதிய தியாகி

கோயிலில் தீச்சட்டியை ஏந்தும்போது கண்ணம்மாவின் கையை நெருப்பு சுட்டுவிடுகிறது. தவறு செய்தவர்களையே நெருப்பு சுடும் என்பது அவர்களது நம்பிக்கை என்பதால் கண்ணம்மா பதறுகிறாள். சுப்பையாவோ, தன்னிடம் குறையை வைத்துக்கொண்டு குழந்தை வேண்டி கோயில் ஒன்றில் தொட்டில் கட்டியதால் தெய்வத்தின் சக்தியை சந்தேகத்துக்கு உள்ளாக்கக்கூடிய வகையில் தவறிழைத்துவிட்டேனே, அதற்கான தண்டனையாக இது இருக்கும் எனத் தன்னையே நொந்துகொள்கிறான். சக்தியுள்ள கடவுள் என்றால் என்ன குறை இருந்தாலும் குழந்தையைத் தர வேண்டுமே, இல்லையெனில் அது எப்படி சக்தியுள்ள கடவுளாக இருக்கும் என சுப்பையாவுக்குத் தோன்றவில்லை. அவனது நம்பிக்கை அவனைக் காக்கவில்லை; அவனது கடவுளைக் காக்கிறது.

இறுதியாக சீனு, கண்ணம்மாவைத் தன்னுடன் வந்துவிடும்படி மிரட்ட அதற்கு அவள் அடிபணிய நேர்கிறது. அவனுடன் இரவில் கிளம்பிச் செல்கிறாள். செல்லும் வழியில் ஓர் அம்மன் சிலையைப் பார்த்ததும் அவளுக்கு சந்நதம் வந்ததுபோல் ஆகிவிடுகிறது. ஆக்ரோஷத்துடன் சீனுவின் தலைமுடியைப் பிடித்தாட்டி அவனை அருகிலிருந்த கிணற்றுக்குள் தள்ளிக் கொல்கிறாள்.

தானும் குதிக்கப்போகும்போது சுப்பையா வந்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். கண்ணம்மாவும் ஒரு புதிய தியாகி ஆகிவிட்டாள். அவள் மனத்தால் கெட்டுப்போய்விட்டாளே தவிர உடம்பால் அப்படியே இருக்கிறாள். அவள் கெட்டுப் போயிருந்தாலும்கூட அவளை அப்படியே ஏற்றிருப்பேன் என சுப்பையா பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறான். ‘கன்னிப் பருவத்திலே’ (1979) திரைப்படம் என்பதால் சீனுவைக் கொன்று கண்ணம்மாவைக் காவியத் தலைவி ஆக்கிவிட்டார் இயக்குநர் B.V. பாலகுரு.

இப்படியான முடிவுகளை உணர்வுவயப் பட்டு எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? ருசி மிகு பழத்தை விருப்பத்துடன் வாங்கிவந்துவிட்டு அதை உண்ண இயலாமல் பார்த்துக்கொண்டே பசியாறுதல் இயலுமா? ஒருவேளை இது நிஜமெனில் கண்ணம்மா சீனுவைக் கொல்வாளா, கொள்வாளா? கொன்றுவிட்டுக் கோயில் கட்டும் பண்பாடு செல்லுமா, இயற்கையாகத் தோன்றும் உணர்வு வெல்லுமா? இவற்றையெல்லாம் யாரிடம் கேட்பது? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அலீசா ஹீலி, சிட்னியில் நடந்த டி20 போட்டியில் 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், பெண்கள் டி20 போட்டியில் அதிக ரன்கள், இரண்டாவது வேகமான சதம் ஆகிய இரட்டைச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x