Published : 23 Sep 2019 10:56 AM
Last Updated : 23 Sep 2019 10:56 AM

யூ டர்ன் 38: சரிகம - சோதனை மேல் சோதனை...

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

அந்தக் கரடி - சூப்பர் கேசட்ஸ் இண்டஸ்ட்ரீஸ். தொடங்கியவர் குல்ஷன் குமார். அப்பா தில்லியில் தெருவோர ஜூஸ் வியாபாரி. குல்ஷன் தனது சிறு வயதில் அப்பாவுக்கு உதவியாளராக இருந்தார். அப்பா ஒரு கேசட் கடை வாங்கினார். நிர்வகிக்கும் பொறுப்பு மகனிடம். குல்ஷன் கோடு போடச் சொன்னால், விமான ரன்வே போடும் அதி சாமர்த்தியசாலி. பல குறுக்கு வழிகளில் முன்னேறினார் என்று பட்சிகள் சொல்கின்றன.

பொழிந்தது பொன்மழை. ``டி சீரிஸ்”(T Series) என்னும் லேபளில், சாமி பாடல்களை ஒரிஜினலாக வெளியிட்டார். ரஜினி நடித்த ``அடுத்த வாரிசு” 1983-ல் வெளியானது. இந்தப் படத்தில், இளையராஜா இசையமைத்த, மலேசியா வாசுதேவனின் இந்தக் கணீர்க்குரல் பாடல் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

``ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா.....
போதும் போதுமென.... போதை தீரும் வரை வா....
தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்...
மனம் போல்... வா... கொண்டாடலாம்...”.

2003. ”குறும்பு” படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, மலேசியா வாசுதேவன் குரலோடு, தேவன் குரலையும் இணைத்து, “ஆசை நூறு வகை” பாடலைப் பயன்படுத்தினார். இளையராஜா தன் காப்புரிமைக்காக யுவன் மேல் ஏன் வழக்குப் போடவில்லை? யுவன் மகன் என்பதாலா? இல்லை. இந்தியக் காப்புரிமைச் சட்டமே இதை ``வெர்ஷன் ரெக்கார்டிங்” (Version Recording) என்ற பெயரில் அனுமதிக்கிறது.

சட்டத்தின் பிரிவு 52 (1) j சொல்கிறது - ஏதேனும் இலக்கிய அல்லது இசைப் படைப்பு ஏற்கெனவே ஒலிமயமாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிந்திருந்தால், அதைப் புதியவர்கள், காப்புரிமை வைத்திருப்பவரின் அனுமதி பெறாமலே ஒலிப்பதிவு செய்யலாம். சில நிபந்தனைகள் - காப்புரிமை வைத்திருப்பவருக்கு, தான் ரீ-மிக்ஸ் செய்யப்போவதைத் தெரிவித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஒரு அடையாளத் தொகை தர வேண்டும். உரிமை வைத்திருப்பவர் புதியவரைத் தடுக்க முடியாது.

குல்ஷன், 52 (1) j - ஐ முழுக்க முழுக்கப் பால் கறந்துவிட்டார். கிராம்கோவின் காப்புரிமையில் இருந்த பிரபல சினிமாப் பாடல்களில், இசை அமைப்பாளர், பாடகி போன்ற சிறு சிறு மாற்றங்கள் செய்து சல்லிசான விலையில் கேசட்களாகக் கொண்டுவந்தார். அமோக வியாபாரம். குல்ஷனின் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள் ஆகியோருக்கு ஊதியம் குறைவு. ஆகவே, ஏகப்பட்ட லாபம். பணம் வரவர, குல்ஷனின் ஆசை வளர்ந்தது.
1984. இந்தி சினிமாக்களின் இசை உலகம் கிராம்கோவின் ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியமாக இருந்தது. குல்ஷன் இந்த இரும்புக்கோட்டைக்குள் நுழைய விரும்பினார். ஆண்டாண்டு காலமாகக் கிராம்கோவுக்கு இசைத்தட்டு உரிமை கொடுத்துக்கொண்டிருந்த பிரபல தயாரிப்பாளர்கள் யாரும் புதுமுகம் குல்ஷனோடு கை கோர்க்கத் தயாராக இல்லை.

குல்ஷனின் தெய்வீகப் பாடல்களுக்கு ரவீந்திர ஜெயின் என்பவர் இசை அமைத்துக் கொண்டிருந்தார். இவருக்கு, ``லல்லு ராம்” என்னும் சின்ன பட்ஜெட் படத்துக்கு இசை கோர்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ரவீந்திர ஜெயின் சிபாரிசில் இந்தப் படத்தின் இசை உரிமையைக் குல்ஷன் வாங்கினார். படம் சுமார். ஆகவே, சூப்பர் கேசட்களுக்கு வாய்ப்புக் கதவுகள் எதுவும் திறக்கவில்லை. குல்ஷன் விடாமுயற்சியின் அவதாரம். தொடர்ந்து, பெரிய தயாரிப்பாளர்களின் கதவு
களைத் தட்டிக்கொண்டேயிருந்தார். நாஸிர் ஹூஸேன், இந்தி சினிமாவின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர். சக்கைப்போடு போட்ட “யாதோன் கி பாராத்” (தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே”) இவர் இயக்கித் தயாரித்த படம். 1988-ல் ``கியாமத் ஸே கியாமத் தக்” (Quamat Se Quamat Thak) தயாரிக்கத் தொடங்கினார்.

ஹீரோ, இவர் அண்ணன் மகன் ஆமிர் கான். ஹீரோவாக இரண்டாவது படம். பின்னாளில் ஹீரோயினாகப் புகழ் குவித்த ஜூஹி சாவ்லாவுக்கு அறிமுகப் படம். வழக்கம்போல், நாஸிர் ஹூஸேன் கிராம்கோவோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென நுழைந்தார் குல்ஷன். யாருமே எதிர்பார்க்காத ரூ.4 லட்சம் தந்தார். பைத்தியக்காரத்தனம் என்று எல்லோரும் நினைத்தார்கள். தயாரிப்பாளர் கிராம்கோவைக் கைவிட்டார். குல்ஷனுக்கு இசை உரிமையை வழங்கினார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட். 50 வாரங்கள் ஓடியது. ஆனந்த் - மிலிந்த் என்னும் இரட்டையர்களின் இசை மக்கள் உள்ளங்களைக் கொள்ளையடித்தது. இது மட்டுமா? அந்த வருடத்திய ஃபிலிம்பேர் விருதுகளில் ஒன்பதைத் தட்டிச் சென்றது - சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த இசை இயக்குநர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த காமிராமேன், சிறந்த அறிமுக நடிகர், சிறந்த அறிமுக நடிகை. தேசிய அளவில், சிறந்த பொழுதுபோக்குப் படம், சிறந்த நடிகராக ஆமிர் கான். ``பப்பா கஹ்தே ஹைன்” என்னும் பாடல் தேசிய கீதமானது. இன்றும் பள்ளி, கல்லூரி விழாக்களில் எதிரொலிக்கிறது. 80 லட்சம் கேசட்கள் விற்பனை. குல்ஷன் கணக்கு கரெக்ட்.

தொடர் வெற்றிகள் குல்ஷனை இன்னும் உந்தின. 1989. சினிமாத் தயாரிப்பில். இறங்கினார். முதல் படம் “ஆஷிக்கி”, பிரபல இயக்குநர் மகேஷ் பட் கை வண்ணத்தில். படமும், இசையும் அமோக வெற்றி. 2 கோடி கேசட்கள் விற்பனை. சினிமா ஒரு சென்டிமென்ட் உலகம், குல்ஷன் ராசியான ராஜாவாகக் கருதப்பட்டார். தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். டீ சீரிஸ் காட்டில் மழை. விற்பனை எகிறியது. இந்தி சினிமா இசைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தமிழ் சினிமா இசைக்கு இங்கே கடும் போட்டி. புயலாக வந்த இளையராஜா, எக்கோ ரெக்கார்டிங் என்னும் புதியவர்களுக்கு ஒலிப்பதிவு உரிமையை வழங்கத் தொடங்கினார். கிராம்கோ கைகளிலிருந்து தமிழ் சினிமா இசையும் நழுவியது.

டீ சீரிஸ், எக்கோ வரவு முழுக்க, முழுக்கக் கிராம்கோவின் இழப்பு. “நான் நிலவுபோலத் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்ததாலே” என்று சோக கீதம் பாடும் நிலை. கம்பெனி நஷ்டத்தில். சொத்துகளை விடக் கடன்கள் அதிகம். அதாவது, திவால் நிலைமை. பெரும்பாலான பங்குகள் வைத்திருந்த இங்கிலாந்தின் இ.எம்.ஐ கம்பெனி கிராம்கோ சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. பல தொழிலதிபர்களைத் தொடர்பு கொண்டார்கள்.

விருப்பம் தெரிவித்தார், ஆர்.பி.கோயங்கா - ஸ்பென்சர் கடைகள், சீயட் (Ceat) டயர் ஆகிய கம்பெனிகள் நடத்தும் ஆர்.பி.ஜி. (RPG) குழுமத் தலைவர். மூன்று காரணங்கள் - திவாலாகும் நிலையிலுள்ள நிறுனங்களை வாங்கினால், வருமான வரியில் பல சலுகைகள் கிடைக்கும்; ஆர்.பி. கோயங்காவுக்கு இசையில் இருந்த ஈடுபாடு; கம்பெனியைக் கரையேற்றிவிடலாம் என்னும் நம்பிக்கை. 1985. கிராம்கோவின் பெரும்பாலான பங்குகளை வாங்கினார். கிராம்கோ ஆர்.பி.ஜி. கைகளில். தன் 39 வயது மகன் சஞ்சீவ் கோயங்காவை சி.இ.ஓ. ஆக்கினார். இள ரத்தம் கம்பெனியைக் கரை சேர்க்கும் வெறியோடு புறப்பட்டார்.

முதலில் நிதி நிலையைச் சீராக்க வேண்டும். 1987-ல், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, ``போர்டு ஃபார் இன்டஸ்ட்ரியல் அன்ட் பைனான்ஷியல் ரீ கன்ஸ்ட்ரக்ஷன்” (Board for Industrial and Financial Reconstruction - சுருக்கமாக BIFR) என்னும் அமைப்பு தொடங்கியது. நோயுற்ற கம்பெனிகளுக்குச் சிகிச்சை தரும் நிறுவனம். நோயாளிகள் இவர்களை அணுக வேண்டும். மேனேஜ்மென்ட் நிபுணர்கள் ஆழ்ந்த பரிசோதனைகள் செய்வார்கள். நோய் தீரும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு நிதி உதவியும், ஆலோசனைகளும் தருவார்கள். இவர்கள் கணிப்பில் தேறாதவர்களுக்கு நோ உதவி. அவர்கள் கடையை மூட வேண்டியதுதான். சஞ்சீவ் கிராம்கோவை BIFR-க்கு எடுத்துப் போனார். சிகிச்சை செய்ய சம்மதித்தார்கள். இருட்டில் ஒரு வெளிச்சம்!

(புதிய பாதை போடுவோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x