செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 10:48 am

Updated : : 11 Sep 2019 10:48 am

 

திறந்திடு சீஸேம் 50: ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுடம்

thirandhidu-shesame

- முகில்

தர்பார் என்ற பாரசீகச் சொல்லுக்கு அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். விருந்தினர்கள் அரசரைச் சந்திப்பார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைப் பின்பற்ற நினைத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா ராணி அறிவிக்கப்பட்டார்.

1903-ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அரசராக ஏழாம் எட்வர்டும், அரசியாக அலெக்ஸாண்ட்ராவும் லண்டனில் பதவி ஏற்றிருந்தார்கள். அரசரையும் அரசியையும் டெல்லிக்கு வரவழைத்து, தர்பார் நடத்தி அவர்களை மகிழ்வித்தார் கர்ஸன். 1911-ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலைவந்தது. புதிய அரசராக ஐந்தாம் ஜார்ஜும், அரசியாக மேரியும் பதவி ஏற்க இருந்தார்கள்.

அப்போது அரசரின் இந்தியப் பிரதிநிதியாகப் பொறுப்பில் இருந்த வைஸ்ராய் ஹார்டிங், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து, தனது ‘ராஜ விசுவாசத்தை’க் காட்ட நினைத்தார். 1911, டிசம்பர் 12-ல் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தன.

டெல்லியின் வடக்குப் பகுதியில் 17,920 ஏக்கர் பரப்பில் மாபெரும் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வரைபடமும் தயாரானது. நாற்பது மைல்களுக்குத் தார்ச்சாலை போடப்பட்டது. இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு, பதினாறு சிறிய ரயில் நிலையங்களும் முளைத்தன. அரசர் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவி ஏற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப் பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் தங்குவதற்காக 233 முகாம்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்கு உரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் வந்து செல்ல பாதை, தங்கத்தாலான கழிவறை, குதிரைகள் – யானைகள் கட்டுவதற்கு இடம், பெரிய ரதங்களை நிறுத்த இடம் என்று முகாம்களை வடிவமைத்துக்கொண்டார்கள்.
அனைத்து இடங்களிலும் மின்சார வசதியும் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டி ருந்தன. தர்பார் நடக்கும் காலத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணக்கிடப் பட்டிருந்தது.


அத்தனைப் பேருக்கும் தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, பால், ரொட்டி, பழங்கள், பானங்கள் எல்லாம் வந்து இறங்கின. முப்பது இடங்களில் தற்காலிகத் தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆங்கிலம் உட்பட இந்தியாவின் முக்கிய இருபது மொழிகளில் தந்தி சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1911 நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன.

அரசரும் அரசியும் அமர்க்கள மான வரவேற்புடன் இந்தியாவில் இறங்கினார்கள். அதேநேரம் மழையும் வந்து இறங்கியது. பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். வைஸ்ராய் ஹார்டிங், தவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாட்கள் தான் பாக்கி இருந்தன. ஆயிரக்கணக்கான கூலி ஆட்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கிவிட்டார். டிசம்பர் 12-ல் தர்பார்.

அதற்கு முந்தைய நாள் எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஐந்தாம் ஜார்ஜும் 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக்கொண்டார். ஆனால், இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக்கொள்ள விரும்பினார்.

அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப் பட்டன. ஐந்தாம் ஜார்ஜுக்காகப் புதிய மணிமகுடம் ஒன்றைத் தயார் செய்தார்கள். லண்டனின் பிரபல நகை நிறுவனமான ’Garrard & Co.’ தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட். எடை 920 கிராம். 6170 பெரிய, சிறிய வைரக்கற்கள், 9 மரகதக்கற்கள், 4 ரத்தினக்கற்கள், 4 நீலக்கற்கள் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், ’Imperial Crown of India.’ டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது. இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. என்ன, செய்யலாம்?

முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை. எந்தவித மதச்சடங்குகளும் இன்றி, அரசர் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டார். அரசி மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற ப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் வண்டியில், குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க ஊர்வலம் ஆரம்பமானது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அரசருக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் நின்றது. மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. பதவி ஏற்புக்குரிய மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கிக் குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King - வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே தொடங்கியது.

பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. உண்மையில் ஐந்தாம் ஜார்ஜுக்கு அந்தக் கீரிடம் பிடிக்கவே இல்லை. அதைத் தனது டைரி குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ‘சுமார் மூன்றரை மணி நேரம் அந்தக் கீரிடத்தை அணிந்துகொண்டு தர்பார் நிகழ்வுகளைக் கண்டது களைப்பாக இருந்தது.’
1911 டெல்லி தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை ஒருமுறைகூட அணியவே இல்லை. 1936-ல் அரசர் இறந்து போனார். அவருக்குப் பின் வந்த யாரும் அதைச் சூட்டிக்கொள்ளவே இல்லை.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்தியப் பேரரசர் என்ற விதத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சூட்டிக்கொண்ட அந்தக் கீரிடத்தை இந்தியாவுக்கே திருப்பித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கீரிடம் மட்டுமல்ல, அதைப்போல பிரிட்டிஷார் இங்கிருந்து அபகரித்துச் சென்ற பல்வேறு பொக்கிஷங்கள் இதுவரை இந்தியாவுக்குத் திரும்பவில்லை.
உலகப் புகழ்பெற்ற லண்டன் அருங்காட்சியகமானது, பிரிட்டிஷார் தாங்கள் காலனி அமைத்திருந்த நாடுகளிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொக்கிஷங்களாலும் பொருட் களாலும்தான் நிரம்பியிருக்கிறது. அரசர் ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுட மானது பல காலமாக லண்டன் டவரில் அமைந்துள்ள ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

(நிறைவடைந்தது.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

திறந்திடு சீஸேம்மணிமகுடம்தர்பார்டெல்லிவடக்குப் பகுதிகுதிரைகள்யானைகள்உணவுப்பொருட்கள்காய்கறிகள்இறைச்சிபால்ரொட்டிபழங்கள்பானங்கள்அரச பரம்பரை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author