Published : 08 Sep 2019 10:54 AM
Last Updated : 08 Sep 2019 10:54 AM

நட்சத்திர நிழல்கள் 22: கௌரியின் கலையா மௌனம்

பெண்கள் தங்கள் மௌனத்தை எளிதில் கலைப்ப தில்லை. அந்த மௌன நிலையில் உறைந்துகிடக்கும் ஆழ்ந்த அமைதி அச்சமூட்டுவது. அந்த அச்சத்தால் ஆண்கள் வெருள்கி றார்கள். ஒருவகையில் இப்படிச் சொல்லிச் சொல்லியே, தங்கள் மௌனத்தை நினைத்துப் பெண்கள் பெருமைப்படும்படியான சூழலைச் சமூகம் திட்டமிட்டு உருவாக்கி விடுகிறது.

இதன் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விடாமல் பெண்களைச் சமூகம் சாமர்த்தியமாகத் தடுத்துவிடுகிறது. இது ஒரு மாயவலை. இந்த மாய வலையைப் பாதுகாப்பு வலையாக உணரவைக்க சீதா, கண்ணகி என எத்தனையோ கற்பனைக் கதாபாத்திரங்களைப் படைத்து உலவவிட்டிருக்கிறது சமூகம். இதை வலுவூட்ட கற்பெனும் கற்பிதத்தை உருவாக்கி அதைப் பெண்ணுக்கான அணிகலனாகப் பூட்டுகிறது ஆணாதிக்கச் சமூகம்.

பெண்களில் சிறு சதவீதத்தினரே இந்த மாய வலையிலிருந்து தப்பித்தி ருக்கிறார்கள். அப்படித் தப்பிக்கும் வழி தெரியாமல் அந்த வலையில் சிக்கித் தன்னை சீதையாகவும் கண்ணகியாகவும் உணர்வதில் இன்பம் காணும் பெண்களில் ஒருத்தி சியாமளா கௌரி. இயக்குநர் R. சுந்தர்ராஜன் படைத்த இந்தக் கதாபாத்திரமாக நடித்தவர் அம்பிகா. படம், ‘நான் பாடும்பாடல்’ (1984).

சாமி போட்ட முடிச்சு

இளம் பாடகியான சியாமளா கௌரியின் பாடல்கள் கேட்போரை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிடுகின்றன. அப்படி அவளுடைய பாடலைக் கேட்டு மகிழ்ந்த ஆனந்த் எனும் இளம் டாக்டருக்கு கௌரியை மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனந்தின் படிப்பு, பண்பு போன்ற அம்சங்கள் கௌரியையும் கவர இருவரும் மணவாழ்க்கைக்குள் வருகிறார்கள். சிலரது மகிழ்ச்சியைக் காலம் நீண்ட நாள்களுக்கு நிலைக்கவிடுவதில்லை; கனவுபோல் சட்டென்று கலைத்து விடுகிறது. கௌரி வாழ்க்கையிலும் அப்படித்தான் சந்தோஷம் சடுதியில் வடிந்துவிடுகிறது. ஆனந்தின் கையைப் பிடித்துக் ‘கலகல’வென மூன்று நாட்கள் வாழ்ந்த கௌரி நான்காம் நாளில் திடுமெனக் கைம்பெண்ணாகிவிடுகிறாள்.

வசந்தத்தின் வாசலில் இளமை பொங்கியபடி நிற்கும் கௌரியைப் பார்க்கும் யாருக்கும், இந்தச் சின்ன வயதில் சோகம் கரைந்ததும் அடுத்த திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதானே என்றுதான் தோன்றும். அப்படித்தான் கௌரியைச் சேர்ந்த எல்லோருக்கும் தோன்றியது ஆனால், கௌரிக்கு அப்படித் தோன்றவே இல்லை. அவள் அதன் பின்னர் திருமணத்துக்குத் தயாராகவே இல்லை. ஆனந்தின் நினைவுகளுடன் அவனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கே ஆனந்தின் குடும்பத்தினருடன் வந்துவிடுகிறாள். சீதை போல், கண்ணகிபோல் தன்னையும் எண்ணிக்கொண்டு கௌரி புது வாழ்க்கையைத் தொடங்குகிறாள். ஆசிரியையாகத் தனது வாழ்வைத் தொடருகிறாள்.

புராணங்களில் உலவும் பெண் கதாபாத்திரங்கள் நமது வீட்டுப் பெண்களாக இருந்தால் அவற்றைப் பெரிதாகக் கொண்டாடுவோமா என்பது சந்தேகமே. சீதா நம் வீட்டில் இருந்தால் என்ன சொல்லியிருப்போம், ‘நீ எதுக்கு தீக்குளிக்கணும்? ராமனைத் தீக்குளிக்கச் சொல்லலாமே? கற்புள்ள பெண்ணுக்குக் கணவன்தானே முக்கியம். உன்னைக் காக்கும் கற்பு ராமனை உன்னைவிட அதிகமாகக் காத்து நிற்குமே’ எனத்தானே கேட்போம். மன்னனிடம் நீதி கேட்ட கண்ணகியிடம் ‘முதலில் நீ கோவலன் கழுத்தைப் பிடித்துக் கேள்வி கேட்டிருந்தால் கோவலனும் தப்பித்திருப்பான் மதுரையும் தப்பித்திருக்குமே’ என்றுதானே சொல்வோம். நமது குடும்பத்துப் பெண்களிடம் இப்படியெல்லாம் கேட்டுவிட முடியும். ஆனால், புராண, இதிகாச கதாபாத்திரங்களிடம் அப்படிக் கேட்க முடியுமா? அவற்றை நம்புவோரது பண்பட்ட மனம் புண்பட்டுவிடக் கூடாதே என அமைதிகாத்துவிடுகிறோம்.

காலமெல்லாம் காத்திருப்பேன்

ஒருவகையில் ஆனந்த் இறந்ததற்குக் காரணம் கௌரிதான். தன் கணவனைக் காப்பாற்ற வேண்டிய அறுவை சிகிச்சையை ஆனந்த்தைச் செய்யச் சொல்லி லட்சுமி என்னும் பெண் வற்புறுத்துகிறார். கௌரியுடன் அவளது பாடல் பதிவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆனந்த் சிகிச்சை செய்ய மறுத்துவிட்டுக் கிளம்புகிறான். அன்று பதிவு செய்யப்பட்டது நமக்கு நன்கு அறிமுகமான ‘பாடவா உன் பாடலை…’ என்னும் பாடல்தான். அறுவை சிகிச்சை விஷயம் கேள்விப்பட்ட கௌரி சிகிச்சையளித்து லட்சுமியின் தாலி யைக் காப்பாற்ற ஆனந்திடம் கோருகிறாள். ஆசை மனைவியின் வேண்டுகோளைத் தட்ட வழியின்றிச் செல்லும் ஆனந்த் சிகிச்சையை முடித்துத் திரும்பும்போது விபத்தில் சிக்கி இறக்கிறான். இந்தக் குற்றவுணர்வு காரணமாக கௌரி இன்னொரு திருமணத்தை மறுத்திருந்தால் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மரபுவழி வந்த உணர்வு காரணமாக கௌரி முன்வைக்கும் வாதங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை.

ஆசிரியையாக வாழ்வை நகர்த்தும் கௌரியின் மனங்கவர்ந்த எழுத்தாளர் சி.ஆர்.எஸ். அவருக்கு வாசகர் கடிதம் எழுதுவாள் கௌரி. சில நாள்களைக் கழிப்பதற்காக கௌரி வசிக்கும் காம்பவுண்டுக்கே வருகிறார் சி.ஆர்.எஸ். ஆனால், அவர்தான் சி.ஆர்.எஸ். என்பது முதலில் அவளுக்குத் தெரியாது. பின்னர் நடைபெறும் சம்பவங்களால் அவளும் அதை அறிந்துகொள்கிறாள். இதனிடையே கௌரியின் வாழ்க்கை பற்றி அறியும் சி.ஆர்.எஸ்ஸுக்கு அவள்மீது பரிவு ஏற்படுகிறது. பரிவு பரிணாம வளர்ச்சியில் காதலாகக் கனிந்துவிடுமே. கௌரியும் அவர் மீது பிரியத்துடன் நடந்துகொள்கிறாள்.

அந்த நேரத்தில் ‘ஒரு மௌனம் கலைகிறது’ என்னும் ஒரு கதையை எழுதுகிறார் சி.ஆர்.எஸ். கன்னியாகுமரிச் சம்பவங்களை உள்ளடக்கிய கதை வழியே தனது மனத்தையும் வெளிப்படுத்துகிறார். கதையில் வரும் கணவனை ஆறே மாதங்களில் இழந்த, இளம் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கும்படி கௌரியே வேண்டுகிறாள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு தன்னைப் போலவே கௌரியும் தன்னைக் காதலிப்பதாக நம்புகிறார் சி.ஆர்.எஸ். பாவம் தமிழ் எழுத்தாளர்தானே அவர்!

தழுவாத கைகள்

ஒரு விழாவுக்காக அனைவரும் கோயிலுக்குச் செல்கிறார்கள். நல்ல காரியம் நடைபெறும்போது தான் அங்கே இருக்கலாகாது என்னும் பழமைவாதக் கருத்துக்கு ஏற்ப விலகி நிற்கிறாள் கௌரி. சி.ஆர்.எஸ். கௌரி யுடன் உரையாட வருகிறார். கதையின் முடிவு பற்றி வினவுகிறாள் கௌரி. தான் முடிவுவெடுத்துவிட்டதாகவும் அந்த முடிவு பிறருக்குப் பிடிக்குமா என யோசிப்பதாகவும் கூறுகிறார் சி.ஆர்.எஸ். ‘நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்குப் பிடிக்கும்’ என்கிறாள் கௌரி.

அதைக் கேட்டு மகிழ்ந்த சி.ஆர்.எஸ்., கதையில் வரும் கைம்பெண்ணுக்கு வாழ்வு கிடைப்பதையே விரும்பும் கௌரி, தனக்குக் கிடைப்பதையும் விரும்பத்தானே செய்வாள் என எண்ணிக்கொண்டு, அவளுக்கு வாழ்வு தருவதான பெருமிதத்துடன் குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் பொட்டு வைக்கிறார். அடுத்த கணத்தில் அவருடைய கன்னத்தைப் பழுக்கவைத்துவிடுகிறாள் கௌரி. அத்துடன் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. விடுவிடுவென்று சென்று, அடுப்பில் எரிந்துகொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தன் நெற்றியைச் சுட்டுப் பொசுக்கிக் கொள்கிறாள். நிலைகுலைந்துபோன சி.ஆர்.எஸ்ஸிடம் கௌரி பேசும் ‘எங்கழுத்துல தாலி இல்லாம இருக்கலாம். ஆனா, என் உடம்புல இருக்குற எல்லா நரம்புமே அவர் கட்டிய தாலிதான்’ உள்ளிட்ட ஒவ்வொரு வசனமும் கைம்பெண் மறுமணத்தை முன்னெடுக்கும் மனிதர்கள் முதுகில் விழும் சாட்டையடிதான் போங்கள்.

மனத்துக்குப் பிடித்த பண்பாளரைக் கைப்பிடிக்கவே கௌரி மறுத்ததன் காரணம் பண்பாட்டுப் பொதியின் அழுத்தமன்றி வேறென்ன? பண்பாடு, மரபு போன்றவை எல்லாம் மனிதரின் நல்வாழ்வுக்கு உகந்தவையாக இருக்கும்வரை அவற்றைப் போற்றலாம். அவை தனி மனிதருடைய நல்வாழ்வுக்கு இடையூறாக இருக்கும்போது அவற்றை மீற வேண்டியதும் அவசியமே என்பதையே கௌரி மறைமுகமாக உணர்த்துகிறாள்.

(நிழல்கள் வளரும்)
- செல்லப்பா
chellappa.n@hindutamil.co.in | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x