செய்திப்பிரிவு

Published : 04 Sep 2019 11:11 am

Updated : : 04 Sep 2019 22:53 pm

 

கதை: சூரியனை ஒளித்து வைத்த மதி

tamil-stories

கொ.மா.கோ. இளங்கோ

ஓவியக் கண்காட்சி அறை. பிரபல ஓவியர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் அனுமதி நேரம் முடிந்திருந்தது. மாலை நேரம் கடந்து, இருள் பரவ ஆரம்பித்தது. அறைக்குள் பேரமைதி நிலவியது.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஓர் ஓவியம் லேசாக அசைந்தது. சத்தம் இல்லாமல் இட, வலமாகச் சற்று வேகமாக அசைந்தது. ஓவியத்தில் இருந்த சிறுமி, துறுதுறுவென்று உற்சாகமாக இருந்தாள். எவ்வளவு நேரம்தான் சட்டங்களுக்குள் இருப்பது? சட்டென்று வெளியில் குதித்தாள்.

ஒவ்வோர் ஓவியத்தின் முன்பும் நின்று ரசித்தாள். இயற்கைக் காட்சி ஓவியம் அவளைக் கவர்ந்தது. அதிலிருந்த சூரியன் பிரகாசமாக ஒளிவீசியது. அதன் வெளிச்சம், இரவு நேரச் சூழலைச் சீர் குலைப்பதாக நினைத்தாள்.
உடனே சூரியனிலிருந்த மஞ்சள் நிறத்தை எடுத்தாள். அடுத்த ஓவியத்திலிருந்த கடலுக்கு அடியில் சூரியனை ஒளித்து வைத்தாள். சூரியன் ஒளி மங்கியது. ஓவியக் கண்காட்சி அறை குளிர ஆரம்பித்தது. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

‘ஓவியங்களில் உள்ள நிறங்களை மாற்றினால் என்ன?’ என்று அவளுக்குத் தோன்றியது.
தன்னைப் பல வண்ணங்களால் அழகுபடுத்திக்கொள்ள ஆசைப்பட்டாள். அவளது ஆசையை அங்கிருந்த மற்ற ஓவியங்கள் ஏற்க மறுத்தன.

“பேராசைக்காரி.”
“வேண்டாம், இந்த விளையாட்டு.”
எதிர்ப்புக் குரல்கள் அதிகமாயின. மூன்றாவது ஓவியத்திலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.
“அக்கா, இந்தக் கத்திரிப்பூ வண்ணச் சட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை மாற்ற விடமாட்டேன்” என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தான் அந்தச் சிறுவன்.
“அழாதே தம்பி. அக்கா உனக்கு எதிராக ஒன்றும் செய்ய மாட்டேன்” என்ற வாக்குறுதியை ஏற்று, அழுகையை நிறுத்தினான் அந்தச் சிறுவன்.
“அக்கா, உன் பெயர் என்ன?”
“ஓவியர் பெயர் வைக்கவில்லையே?”
“மதி என்று வைத்திருக்கலாமே?”
“அதென்ன மதி?”

“புத்திசாலி என்பதால் அப்படிச் சொன்னேன்” என்று சிரித்தான். மதியும் சிரித்தாள்.
மதியின் உடை அலங்காரம் கண்களைக் கவர்ந்தது. எல்லோரும் பாராட்டினர். நன்றி சொன்னாள் மதி.
ஓர் ஓவியத்தில் பிரம்மாண்டமான அரண்மனை இருந்தது. அரசவைக் கூடத்தில் அமைச்சரவை கூடி விவாதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள் மதி.

அரசர் அணிந்திருந்த தங்கக் கிரீடம் கவனத்தை ஈர்த்தது. அரசவைக்குள் நுழைந்த மதி, மன்னரின் கிரீடத்திலிருந்த பொன் நிறத்தை விரலால் எடுத்துத் தலையில் பூசிக்கொண்டாள்.
அரசரின் கம்பீரமும் மிடுக்கும் காணமல் போனது. அரசர் அதிர்ச்சி அடைந்தார். கோபம் கொண்டார். காவலர்களை அழைத்து மதியைப் பிடிக்கச் சொன்னார்.

அவள், காவலர்களின் பிடியில் சிக்காமல் ஓடினாள். மலை, ஆறு, மரம் போன்ற ஓவியங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள். எவ்வளவு தேடியும் காவலர்களால் மதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வளவு நேரம்தான் அவளால் ஓவியங்களுக்குப் பின் மறைந்திருக்க முடியும்? களைத்துப் போனாள்.

அப்போது ஓவியத்திலிருந்த ஒரு சேவல் கீழே குதித்தது. பொழுது விடியப் போகிறது என்பதை மதி புரிந்துகொண்டாள்.
“அக்கா, எவ்வளவு நேரம்தான் கடலுக்கு அடியில் சூரியனை மறைத்து வைத்திருப்பாய்? சூரியன் உதிக்க வேண்டாமா?” என்று கேட்டு அவளைச் சிந்திக்க வைத்தான், கத்திரிப்பூச் சட்டைக்காரச் சிறுவன். கண்காட்சி அறைக்கு வெளியே மழை விழும் சத்தம் கேட்டது. குளிர்காற்று வீசியது. “மதியக்கா, தங்க நிறத்திலிருக்கும் உன் முடியைப் பார்த்தால் வெளிநாட்டுச் சிறுமியை நினைவுபடுத்துகிறது. இதைவிட உன் கறுப்புத் தலைமுடிதான் அழகாக இருந்தது. இயற்கையாக எது கிடைக்கிறதோ அதுவே சிறந்தது” என்றான் சிறுவன்.

”நீ சொல்வதும் உண்மைதான்” என்ற மதி, அவன் கையைக் குலுக்கிப் பாராட்டினாள்.
சேவல் கூவியது. அரண்மனைக்குச் சென்று அரசரிடம் மன்னிப்பு் கேட்டாள் மதி. கிரீடத்திலிருந்து எடுத்த நிறத்தை மீண்டும் தடவினாள். கிரீடம் பொன் நிறத்தில் ஜொலித்தது.

“கொக்..க..ரக்..கோ”
மறுபடியும் பொழுது விடியப் போவதை அறிவித்தது சேவல்.
கடலுக்குள் குதித்த மதி, அடியிலிருந்த சூரியனை எடுத்து வானில் வைத்தாள். அடுத்த நொடியே இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் பிரகாசித்தான். பொழுது விடிந்தது. மதி சட்டென்று தன்னுடைய ஓவியத்துக்குள் தாவினாள்.
ஓவிய அறைக் கதவு திறக்கப்பட்டது. அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.

கதைதமிழ் கதைகள்சூரியன்மதி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author