Published : 17 Aug 2019 12:12 PM
Last Updated : 17 Aug 2019 12:12 PM

தூக்கம் தரும் படுக்கையறை

அனில்

படுக்கையறை என்பது நம் மனமும் உடலும் ஆசுவாசம் கொள்ளும் அறை. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கப் பயன்படுவது படுக்கையறையே. எனவே படுக்கையறையின் விஷயத்தில் கவனத்துடன் இருந்தால் பிற அலுவல்களை நம்மால் சுறுசுறுப்பாகக் கவனிக்க இயலும்.

படுக்கை அறையைப் பொறுத்தவரை சுத்தமும் ஒழுங்கும் அவசியம். இந்த இரண்டும் குழைந்தால் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால் படுக்கையறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் தரையைச் சுத்தப்படுத்துவது நல்லது. அதுபோல் பொருட்களைக் கண்ட இடங்களில் போட்டுவைக்காமல். அதற்குரிய இடங்களில் வைப்பது நல்லது.

சுவர்களில் மென்மையான உணர்வுகளைத் தரும் சுவரோவியங்களைத் தீட்டி வைக்கலாம். படுக்கையறையின் விளக்குகள் மெலிதான வெளிச்சத்தை எப்போதும் வழங்க வேண்டும். வழக்கத்துக்கு அதிகமான கண்களைக் கூசச் செய்யும் விளக்குகள் மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.படுக்கையறையில் ஓய்வெடுக்க வரும்போது அதன் சூழலே நமது மனத்திற்கு உகந்ததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிலின் மீது விரிக்கும் படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் விதவிதமான வண்ணங்களில் வசீகரமான விதத்தில் அமைந்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.

அழகிய ஓவியங்களும் சித்திரங்களும் வரையப்பட்ட தலையணை உறைகளையும் படுக்கைவிரிப்புகளையும் நாம் பராமரித்தால் அவை நமது ஓய்வு நேரத்தைச் சிறப்பாக்கும். சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய படுக்கை நேர்த்தியாக அமையப்பெற்றிருந்தால் படுக்கையில் சாய்வதே பரவசமான அனுபவமாக மாறும். படுக்கை விரிப்புகள் நமது தட்பவெப்ப நிலைக்கு உகந்த வகையில் அமைந்திருக்க வேண்டும்.

படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் அவற்றின் உறைகளும் எப்போதும் சுத்தமான நிலையில் பராமரிக்கப்படுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இம்மாதிரிக் கவனத்துடன் படுக்கையறையை வைத்துக்கொண்டால் படுத்ததும் உடனே தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x