Published : 13 Aug 2019 12:55 PM
Last Updated : 13 Aug 2019 12:55 PM

வேலை வேண்டுமா? - எல்.ஐ.சி. வீட்டுவசதி நிறுவனப் பணி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

எல்.ஐ.சி.-யின் சார்பு நிறுவன மான எல்.ஐ.சி. வீட்டுவசதி நிறுவனத்தில் உதவியாளர், அசோசியேட், உதவி மேலாளர் ஆகிய பதவிகளில் 300 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
உதவியாளர் பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். அசோசியேட் பதவிக்குப் பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் சி.ஏ. இடைநிலை (Inter) முடித்திருக்க வேண்டும்.

உதவி மேலாளர் பதவிக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகள், பட்டப் படிப்புடன் மேலாண்மையில் 2 ஆண்டு கால முதுகலை டிப்ளமா படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இக்கல்வித்தகுதியை முழுநேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டியது அவசியம். அஞ்சல்வழி, பகுதிநேரப் படிப்பாக முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேற்குறிப்பிட்ட 3 பதவிகளுக்கும் வயது வரம்பு 21 முதல் 28 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஆன்லைன்வழித் தேர்வாக இருக்கும். இதில், பொது ஆங்கிலம், ரீசனிங், பொது அறிவு, அடிப்படைக் கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்' முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண். 2 மணி நேரம் தரப்படும்.
உரிய கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் எல்.ஐ.சி. வீட்டுவசதி நிறுவனத்தின் இணையதளத்தைப் (www.lichousing.com) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான ஹால்டிக்கெட்டை செப்டம்பர் 9-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம், ஒவ்வொரு பதவிக்கும் கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26 ஆகஸ்ட் 2019
ஆன்லைன் தேர்வு: 9 அல்லது 10 அக்டோபர் 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x