Published : 12 Aug 2019 14:56 pm

Updated : 12 Aug 2019 14:56 pm

 

Published : 12 Aug 2019 02:56 PM
Last Updated : 12 Aug 2019 02:56 PM

என் பாதையில்: அன்பு எனும் அருமருந்து

mothers-care

“கண்ணம்மா எழுந்துக்கோடா செல்லம். ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று தொடங்கும் காலை. முந்தைய நாளின் வேலைச் சோர்வு நீங்கியும் நீங்காமலும் உடலை வறுத்திக்கொண்டிருக்க, குழந்தைக்காக என்றவுடன் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்கிறது, ஒரு உத்வேகம். மனத்துக்குள் அன்றைய வேலைகளைப் பட்டியலிட்டவாறே தொடங்கிவிடும் அந்தக் காலை.

அன்பு மகள் கண்ணைத் திறந்தவுடன், “அம்மா ஒரு ஹக்கி குடும்மா ப்ளீஸ்...” என்று கொஞ்ச, அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு கண்களை மூடி அன்பு மகளை வாரி அணைக்கையிலேதான் எவ்வளவு ஆனந்தம்! உடம்பில் உள்ள அவயங்கள் அனைத்தும் ஒருசேர வாரிக் கொடுக்கின்றன அந்த அன்பு வார்த்தைகளை, “நல்லா இருடா கண்ணு. நூறு வயசு நல்லா இருக்கணும். எல்லா நலனும் எல்லா சந்தோஷமும் பெற்று தீர்க்காயுசா, ஆரோக்கியமா, நிம்மதியா இருக்கணும்டா செல்லம்” என்று ஆசிர்வதித்து மகிழும்போதுதான் என்ன ஒரு உற்சாக ஊற்றெடுப்பு!


நூறு வாட்ஸ் பிரகாசம் கண்களில் தெரிய, உடம்புக்குள் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்கின்றன தெம்பும் புத்துணர்வும். பக்கத்து வீட்டு மாமா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. “குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா. ஆசிர்வாதம் பண்ணிக்கிட்டே இருங்க. ஒரு நாளைக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஆசிர்வாதம் பண்ணுங்க. ஒவ்வொரு முறை ஆசிர்வாதம் பண்ணும்போதும் உங்களுக்கும் நல்லது; குழந்தைக்கும் நல்லது. அதுவும் ஒரு தாய் ஆசிர்வாதம் பண்ணும்போது அந்தக் குழந்தை மனதில் ஒரு அதீத நம்பிக்கை உருவாகிறது. அது அந்தக் குழந்தையைக் கண்டிப்பா நல்வழிப்படுத்தும்.”

பணிக்குச் செல்வதால் பல நேரம் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவைக்குக்கூட அருகில் இருக்க முடியாத நிலையில் ஒவ்வொரு தாயும் குற்றவுணர்வில் தவிக்கும் நாட்கள் பல. அதனால், ஏங்கும் தம் பிள்ளைகளின் அன்புத் தேடலை, கிடைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன வாய்ப்பையும் பயன்படுத்தி நிறைவேற்றத் துடிக்கிறாள் அந்தத் தாய்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளையும் மகிழ்ச்சியையும் முன்வைத்து, தனது ஆரோக்கியம், சந்தோஷம், தேவைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்பு, பாசம், வாத்சல்யம் எனும் அருமருந்தை அள்ளிக் குடித்துத் தன் பிள்ளைகளுக்கும் வாரிவழங்கி, ஒவ்வொரு நாளும் தன்னுடைய குழந்தைகளுக்காகவே வாழ்ந்துவரும் தாய்மார்கள் ஒவ்வொருவரும் வாழும் தெய்வங்களே!

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு என்னதான் வேலைப்பளு இருந்தாலும், இரவு வேலை முடித்து வீடு திரும்பியவுடன், “அம்மா வந்துட்டீங்களா” என்று ஓடிவந்து கட்டியணைக்கும் அந்தச் செல்லக் குழந்தையைவிடவா ஆறுதல் தரும் மருந்து ஒன்று இருந்துவிடப் போகிறது? சில நிமிடம் அந்த ஆனந்தத்தை அள்ளிப் பருகிக்கொண்டே அமைதியாக நின்றுவிட, அப்போதே அந்தத் தாயின் உடலும் மனமும் எல்லா இறுக்கங்களில் இருந்தும், சோர்விலிருந்தும் விடுபடத் தொடங்கிவிடுகின்றன.

பல நேரம் பிள்ளைகளே நம் பெற்றோர் ஆகிறார்கள். வளர்ந்துவிட்டதால் நாம் பெறத் தவறிய பாசத்தையும் அன்பையும் மீண்டும் நம் மீது பொழியும் அன்பு ஊற்றுகள், நம் செல்லக் கண்மணிகள். காலம் கொடுத்த காயங்களை எல்லாம் மெதுமெதுவாகத் தமது அன்பென்ற மருந்தை ஊற்றி குணமடையச் செய்வார்கள் நம் பிள்ளைகள்.
ஒவ்வொரு நாள் உறக்கத்தின் போதும் உடல் தனது அவயங்களைச் சீர்படுத்திக்கொண்டு அடுத்த நாள் ஓட்டத்துக்குத் தயாராகிறதாம்.

அதுபோல ஒவ்வொரு முறை தாய் தன் குழந்தைகளை வாரி அணைக்கும் போதும் அந்தப் பெருமூச்சில், மெளனத்தில், நிச்சலனத்தில், தனது மன அழுத்தம், உடல் சோர்வு அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் ஊதித் தள்ளி பேரானந்தத்தையும் பேரமைதியையும் பெற்றுத் திளைக்கிறாள் அன்னை.
மனமும் உடலும் செம்மை பெறவும், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், இன்றைய புதுயுக தாய்மார்களுக்குக் கிடைத்த சாவா அருமருந்து இந்த வாத்சல்யமே! எத்தனை முறை தந்தாலும் எத்தனை முறை பெற்றாலும் அள்ள அள்ளக் குறையாத ஜீவ ஊற்று இந்த வாத்சல்யம் என்னும் வரமே.- ந. ரெங்கநாயகி, மதுரை.


என் பாதையில்அன்புஅருமருந்துஅன்பு மகள்தவறிய பாசம்

You May Like

More From This Category

dream

கனவு மெய்ப்பட...

இணைப்பிதழ்கள்
mobile-homes

நடமாடும் வீடுகள்

இணைப்பிதழ்கள்

More From this Author