Published : 02 Aug 2019 12:08 PM
Last Updated : 02 Aug 2019 12:08 PM

மறக்க முடியாத திரையிசை: கவிதையா, திரைப் பாடலா?

பி.ஜி.எஸ். மணியன் 

வரிகள் காதில் பாய்ந்ததுமே அதை எழுதிய கவிஞனின் முகமும் பெயரும் மனத்திரையில் ஒளிர்வது சிலருக்கு மட்டும்தான். ‘பாட்டுக்கு ஒரு பட்டுக்கோட்டை’ எனப் போற்றப்படும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம் மனங்களில் பதிந்துபோனது அப்படித்தான்.  

இவர் பெயரைச் சொன்னாலே, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா’ போன்ற எளிமையான வார்த்தைகளில் பாமரரின் மனத்தைக் கவர்ந்தவர் என்று சுலபமாக அடையாளம் சொல்லிவிட முடியும்.  ஆனால், இலக்கிய நயம் நிறைந்த அற்புதமான பாடல்களையும்  எளிமையான வார்த்தைகளில் தரவல்லவர் என்பது இவரது கூடுதல் சிறப்பு. இதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாக இன்றும் நம் செவிகளை வருடி மனதை ஆக்கிரமிக்கும் பாடல் ஒன்றை நினைவுகூரலாம். காதல் வயப்பட்ட வாலிபன் அவன். இரவு நேரத்தில், நீரோடை சார்ந்த எழில் கொஞ்சும் இடத்தில் அமர்ந்திருக்கிறான். 

வானத்தில் தவழ்ந்தபடியிருக்கும் முழுமதி அந்த இடத்தையே தனது ஒளியில் முழுக்காட்டிக்கொண்டிருக்கிறது. பொதுவாகக் காதல் என்று வந்துவிட்டாலே காணும் பொருள்களில் எல்லாம் காதலியைக் காண்பது கவிதை மனநிலையில் காணப்படும் இயல்பு போன்ற திரிபுதானே..! அந்த வகையில் முழு நிலவில் தன் மனம் கவர்ந்தவளின் சாயலைக் காண்கிறான் அவன்.  

இந்த நிலவு அவள் முகத்தைப் போலவே இருக்கிறதே..  அவள்தானா இது? இல்லை இல்லை.  அவள் அந்த நாட்டின் இளவரசி அல்லவா!  அப்படி என்றால் அவள் சாயலில் இருக்கும் இந்த நிலவு மங்கை அவளது சகோதரியாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்த மறுகணம் அடுத்த சந்தேகம் வந்துவிடுகிறது. சகோதரி என்றால் இளையவளா அல்லது மூத்தவளா?
எதற்குக் குழப்பம்? இந்த நிலவிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் போயிற்று என்று முடிவெடுத்தவன், நிலவு நங்கையைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்.

 ‘என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே..’

நிலவைச் சுற்றி வான வீதியில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளியைச் சிந்தி மின்னிக்கொண்டிருக்கின்றன.  அதேபோல் அவனது மனம் கவர்ந்த இளவரசியைச் சுற்றி அவளது காவலுக்கும் எத்தனையோ பணிப்பெண்களும் இருக்கிறார்களே!  ஆகவே, அந்த நிலவு மங்கையைப் பார்த்துத் தனது கேள்வியைத் தொடர்கிறான்.

 ‘கண்சிமிட்டும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக் 
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே..’

இப்படிக் கணக்கில் அடங்காத தாரகைகள் காவலோடு இருக்கும் நிலா மங்கையின் முகத்தில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்றால், அது அவளது காதலனால் மட்டுமே முடியும்.  மனம் கவர்ந்த அவனை மட்டுமே அவள் தன்னைத் தீண்ட அனுமதித்திருப்பாள் அல்லவா?  ஆகவே 

 ‘கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன் 
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே’  
என்று கேட்கிறான். 
இப்படி நிலவைப் பார்த்து அவன் வருணிப்பது, பரிதாபப்படுவது எல்லாம் எதற்காகத் தெரியுமா? ஒரு காரணத்துக்காகத்தான்! கள்ளம் கபடம் எதுவுமே அறியாத அவனது இதயத்தை அந்த மங்கை கவர்ந்து கொண்டுவிட்டாளே?  
அவளிடம் சென்று அந்த இதயத்தை வாங்கி  வந்து அவனிடமே தந்து விடவேண்டும் என்பதற்காகத்தான்!  

 ‘கள்ளமில்லா என் இதயம் 
வெண்ணிலாவே - ஒரு
கன்னியிடம் இருக்குதடி 
வெண்ணிலாவே -  அந்த
வஞ்சிதனை நீ அறிவாய் 
வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே..’

அதெப்படி?  
முன்னே பின்னே தெரியாத ஒரு பெண்ணிடம் போய், ‘வனாந்தரத்தில் உன்னை நினைத்துத் தவித்துக்கொண்டிருக்கிறான் ஒரு வாலிபன்.  அவனது இதயம் உன்னிடம் இருக்கிறதாம்.  தயவுசெய்து அதைக் கொடுத்துவிடு’ என்று நிலா மங்கைப் போய்க் கேட்டுவிட்டால் உடனே  அவள், ‘இந்தா பிடி’ என்று கையில் தூக்கிக் கொடுத்துவிடுவாளா என்ன?ஆகவே,  எப்படி வாங்கி வரவேண்டும் என்று அவனே சொல்லிக்கொடுக்கிறான்.

 “வெண்ணிலா மங்கையே.  அவள் உன்னுடைய கெஞ்சலுக்கெல்லாம்  மசிபவள் அல்ல.  ஆகவே அவள் கேட்காமலே நீ பறித்துக்கொண்டு வந்துவிடு.  பயப்படாதே..  அவள் என்னைக் கேட்காமலே அல்லவா என் இதயத்தைக் கவர்ந்து கொண்டாள்? ஆகவே, அவள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவளுக்கே திருப்பிக் கற்றுக்கொடுப்போம்." என்று வெண்ணிலாவை அனுப்புகிறான்  அவன்.

 ‘கெஞ்சினால் தரமாட்டாள் 
வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே 
அஞ்சிடத் தேவையில்லை 
வெண்ணிலாவே - இது 
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே’

கவிதையா திரைப் பாடலா எனப் பகுத்துப் பார்க்க முடியாதபடி எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் 1961-ல் வெளிவந்த ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்துக்காகப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது. இல்பொருள் உவமை அணி நயம் மிகுந்த இப்பாடலை அதன் இலக்கிய நயம் சிறிதும் குறையாமல் அருமையாகக்  கல்யாணி ராகத்தைக் கையாண்டு இசை அமைத்தவர் டி.ஜி. லிங்கப்பா.   

பாடல் வரிகளையும் இசையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனநிலையைக் கேட்பவர் துல்லியமாக உணரும் வண்ணம் பாடிய பெருமைக்குரிய பாடகர் டி.எம். சௌந்திரராஜன். இன்று கேட்டால் கூட நம்மை அப்படியே கட்டிப்போடும் ஒரு ரசவாதம் நிறைந்த இந்தப் பாடல் அடைந்த வெற்றியின் வீச்சு காலத்தை கடந்த ஒன்று.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x