Published : 23 Jul 2019 12:16 PM
Last Updated : 23 Jul 2019 12:16 PM

ஜப்பானுக்குப் போகும் ‘வேண்டாம்’

ஷங்கர் 

திருத்தணி அருகே நாராயணபுரம் கிராமத்தில் பிறந்த அந்தப் பெண், அம்மையார்குப்பம் ஆசிரியர் மங்கலங்கிழார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பிளஸ் 2-வில் 188.7 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து, குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் 100 சதவீதம் உதவித்தொகை பெற்றுப் பொறியியல் கல்வியில் சேர்ந்தபோது, அந்தக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே. எம். மதனா அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டார். அந்தப் பெண்ணோ, ’வேணாம்’ என்று அவசரமாகச் சொல்லி வாயை மூடிக்கொண்டார்.

பெயர் கேட்பதற்கு ஏன் வேணாம் என்று சொல்கிறார் என்று மதனா மீண்டும் கேட்டிருக்கிறார். அவரது வகுப்பு சகாவிடமிருந்து அவரது பெயரே ‘வேண்டாம்’ என்பதுதான் என்பதைத் தெரிந்துகொண்டார். அந்தப் பெயரைச் சொல்வதற்கு ஏற்பட்ட சங்கடத்தால்தான், தன் பெயரை அவர் வேகமாகச் சொல்லிக் கடக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதாக முதல்வர் மதனா குறிப்பிடுகிறார். தன் பெயரைச் சொல்வதற்குக் கூச்சப்பட்ட அந்த ‘வேண்டாம்’தான், தற்போது ஜப்பானின் புகழ்பெற்ற நிறுவனமான ‘ஹியூமன் ரிசோசியா’-வில் ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் பணிக்கு வளாகத் தேர்வு மூலம் தேர்வாகியுள்ளார்.

படிக்கட்டான முட்டுக்கட்டைகள்

விவசாயக் கூலி வேலை பார்க்கும் அசோகன், கௌரி தம்பதியின் மூன்றாம் மகள் ‘வேண்டாம்’. அவரோடு பெண் குழந்தைகள் போதும் என்பதற்காக, அந்த ஊரின் வழக்கப்படி ‘வேண்டாம்’ என்று அவருக்குப் பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தைகளை விரும்பாத நிலையில் தமிழகக் கிராமங்களில் ‘வேண்டாம்’, ‘போதும் பொண்ணு’ போன்ற பெயர்களைச் சூட்டும் வழக்கம் இப்போதுவரை நிலவுகிறது.

அம்மாயார்குப்பம் கிராமத்தில் பொதுவாக, பெண் குழந்தைகளைப் படிப்பதற்கு அனுப்பும் வழக்கம் இல்லாவிட்டாலும், ‘வேண்டாம்’-ன் தந்தை அசோகன், தன் குழந்தைகளைக் கல்விதான் வறுமையிலிருந்து விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு படிக்க வைத்துள்ளார். ‘வேண்டாம்’-ன் அக்கா, பி.ஏ. ஆங்கிலம் படித்தவர். இன்னொரு அக்கா பி.எஸ்சி. வேதியியல் படித்துவிட்டு அரசுப் பணிக்காகத் தேர்வுகளை எழுதி வருகிறார். தங்கை கல்லூரியில் படித்துவருகிறார்.

“பிளஸ் 2-வில் 1095 மதிப்பெண்கள் எடுத்தேன். கலை-அறிவியல் படிப்பு, இன்ஜினீயரிங் இரண்டுக்கும் விண்ணப்பித்திருந்தேன். நல்ல கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்ததால் பொறியியல் கிடைக்குமென்று தெரியும். ஆனால், அதற்கான கட்டணத்தைக் கட்டும் சூழல் வீட்டில் இல்லை. அப்போதுதான் எனக்கு இங்கே 100 சதவீதம் உதவித்தொகையோடு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவுப் பொறியியல் படிப்பு் கிடைத்தது. வழக்கமான பாடங்களோடு ஜப்பானிய மொழியையும் கல்லூரியிலேயே கற்றுத் தேர்ந்தேன். அண்மையில் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலுக்கு வந்த ஜப்பானிய நிறுவனமான ‘ஹியூமன் ரிசோசியா’ என்னுடைய தொழில்நுட்ப அறிவோடு ஜப்பானிய மொழித் திறனையும் சோதித்தது. அப்போது சிறப்பாகச் செயலாற்ற முடிந்ததால் வேலை கிடைத்துவிட்டது. விரைவில் ஜப்பான் செல்லவிருக்கிறேன்” என்கிறார்.

புதுப் பெயரைத் தேடி

இத்தனை காலம் ‘வேண்டாம்’ என்ற விரும்பாத பெயரைச் சுமந்தவர், இனியேனும் பெயரை மாற்றிக்கொள்ள விரும்புகிறாரா என்று கேட்டபோது, ஜப்பானுக்குப் போவதற்கு முன்னால் பெயரை மாற்றப் போவதாகச் சொல்கிறார்.
“ஊரிலிருந்த வழக்கப்படி எனக்கு அந்தப் பெயரை அப்பா வைத்தாரே தவிர, அது கொடுத்த சங்கடங்களை அவர்கள் அறியவில்லை. இப்போது என் பெற்றோர் எனக்கு கல்பனா என்ற புதிய பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எங்கள் கல்லூரி நிர்வாகமும் எனது பெயர் மாற்றத்துக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறது. டோக்கியோவுக்குக் கல்பனாவாகச் செல்வேன்” என்கிறார் ‘வேண்டாம்’.

19 வயதான ‘வேண்டாம்’, டெனிகாய்ட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். பொறியியல் பாடத்தைத் தவிர, பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட அயல்மொழிகளும் கற்றுத்தரப்படும் கல்லூரியில் ஜப்பானிய மொழியை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். படிப்பு, கொஞ்சம் விளையாட்டைத் தவிரப் பொழுதுபோக்கென்று இவருக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. கடைசியாகப் பார்த்த படம், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’. விவசாயப் பின்னணியிலிருந்து ஒரு பெண்ணாக கிரிக்கெட் விளையாட வந்து சாதிக்கும் நாயகியின் கதையைப் போலத்தான் உள்ளது வேண்டாம், வேண்டாம் என்று சொல்லப்பட்டும் பெற்றோர்களுக்கும் ஊருக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் ‘வேண்டாம்’-ன் கதை.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x