Published : 22 Jul 2019 10:29 AM
Last Updated : 22 Jul 2019 10:29 AM

 பாதை மாறிய பயணம்!

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹாங்காங்கில் முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ‘இண்டிகோ நிறுவனத்தின் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது,  எனவே துணிந்து  முதலீடு செய்யலாம்’ என்று இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோ தத்தா கூறுகிறார். இண்டிகோ நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் என அடுத்தடுத்து ஸ்லைடுகள் நகர, முதலீட்டாளர்களும் ஆர்வமுடன் பார்க்கின்றனர். தொலை நோக்கு பார்வை கொண்ட நிறுவனர்கள் என ராகுல் பாட்டியாவையும், ராகேஷ் கங்வாலையும் குறிப்பிட்டு இக்கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும் புகழாரம் சூட்டுகிறார். இதைக் கூட்டத்தினரும் ஆமோதித்து முதலீடு குறித்த பரிசீலனையில் இறங்குகின்றனர். 

இந்தக் கூட்டம் நடந்து 4 மாதங்கள் கூட முடியவில்லை, தொலைநோக்கு சிந்தனை கொண்ட நிறுவனர்கள், வலுவான கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட இண்டிகோ நிறுவனர்களான ராகுல் பாட்டியா, ராகேஷ் கங்வால் இடையே இப்போது பிளவு ஏற்பட்டிருக்கிறது. கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல் எறிந்துள்ளார் ராகேஷ் கங்வால். ``பீடா கடை’’ போல (பான் கி துகான்) நிறுவனத்தை நடத்துகிறார் என்பதாக பொது அரங்கில் ராகுல் பாட்டியா மீது அவர் வீசிய குற்றச்சாட்டு இண்டிகோ நிறுவனத்தின் கட்டுக்கோப்பை அசைத்துள்ளது. நிறுவன நிர்வாகம் குறித்து விசாரிக்கும்படி அவர் பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்திடம் (செபி) புகார் தெரிவித்தது பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளது. ராகேஷ் கங்வால் புகார் கூறிய நாளன்றே இந்நிறுவன பங்குகள் 11 சதவீத அளவுக்கு சரிந்தன. ரூ.27,500 கோடியாக இருந்த இந்நிறுவன சந்தை மதிப்பு ஒரேநாளில் ரூ.6,423 கோடி அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. 

இண்டிகோவின் உதயம்

இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனம் ‘இன்டர்குளோப் ஏவியேஷன்’ நிறுவனமாகும். இந்
நிறுவனத்தை ராகேஷ் கங்வால் மற்றும் ராகுல் பாட்டியா ஆகியோர் 2006-ம் ஆண்டு தொடங்கினர். இந்நிறுவனத்தில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.350 கோடி. தற்போது இந்நிறுவனத்தில் கங்வாலுக்கு 37 சதவீதமும், பாட்டியாவுக்கு 38 சதவீதமும் பங்குகள் உள்ளன.

இண்டிகோ, இந்தியாவில் விமானத்துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு குறைந்த கட்டண விமான நிறுவனமாக 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் விமான
சேவை ஆரம்பமானது 2006-ம் ஆண்டில்தான். ஹரியாணா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இன்றளவும் வெற்றிகரமாக தொடர்ந்து லாபம் ஈட்டும் தனியார் விமான சேவை நிறுவனமாகத் திகழ்கிறது. விமானப் பயணிகள் சந்தையில் 50 சதவீதம் இந்நிறுவனம் வசம் உள்ளது.

இந்தியாவில் 66 இடங்களுக்கும், சர்வதேச அளவில் 15 நாடுகளுக்கும் இடையே இந்நிறுவன விமான சேவை விரிந்துள்ளது. 200 விமானங்கள் மூலம் தினசரி 1,300 விமான சேவைகளை இந்நிறுவனம் நாடு முழுவதும் அளிக்கிறது. 60 நகரங்களில் 126 அலுவலகங்களுடன் 25 ஆயிரம் பணியாளர்களுடன் பிரம்மாண்டமாக கிளை பரப்பி சிறப்பாக செயல்படுகிறது இந்நிறுவனம். ஆடம்பரமாக தொடங்கப்பட்டு, ஆர்ப்பாட்டமாக வலம்வந்து சொற்ப ஆண்டுகளில் காலா வதியான கிங்ஃபிஷரின் சந்தையை கைப்பற்றியது இண்டிகோ நிறுவனம் மட்டுமே. ஜெட் ஏர்வேஸோ, ஸ்பைஸ் ஜெட்டோ, இந்தியன் ஏர்லைன்ஸோ அந்த சந்தையைக் கைப்பற்றவில்லை. 1+1=11 என்று புதிய அத்தியாயம் எழுதினர் இந்த ஆர் ஆர் நண்பர்கள்.

வெற்றிக்கூட்டணி

இந்திய விமான துறையில் இருவர் கூட்டணி (ஆர் அண்ட் ஆர்) வெற்றிக் கூட்டணி என வெகுவாகப் புகழப்பட்டது.  பில் கேட்ஸ், பால் ஆலென் (மைக்ரோசாப்ட்), பில் ஹியூலெட், டேவ் பக்கார்டு (ஹெச்பி) ஆகிய வெற்றிகரமான தொழில் கூட்டணி போல இந்தியாவில் ஆர் அண்ட் ஆர் கூட்டணியைக் குறிப்பிட்டனர். ராகுல் மற்றும் ராகேஷ் நண்பர்களைப் பொறுத்தமட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னிக் போல செயல்படுகின்றனர் என்றனர் தொழில்துறை வல்லுநர்கள். வோஸ்னிக்குக்கு கம்ப்யூட்டரை தயாரிக்க தெரியும். அதை மிகச் சிறப்பான சந்தை வாய்ப்பை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு உருவாக்கத் தெரியும். அதைப்போல ராகுல் பாட்டியா விமான சந்தையை கவனித்துக் கொள்ள நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை ராகேஷ் கங்வால் கவனித்தார்.

யுஎஸ் ஏர்வேஸில் பணியாற்றிய அனுபவத்தை தனது சொந்த நிறுவனத்தில் ராகேஷ் சிறப்பாக செயல்படுத்தியதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திய விமான நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள் எகிறிய போதெல்லாம் அதை திறமையாகக் கையாண்டதில் ராகேஷ் கங்வாலுக்குப் பெரும் பங்கு உண்டு. மிகக் குறைந்த முதலீட்டில் நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 100 விமானங்களை வாங்குவதற்கு மிகவும் உதவியாக இருந்தது ராகேஷ் கங்வாலின் யுஎஸ் ஏர்வேஸில் பணியாற்றிய அனுபவம்தான். இண்டிகோ நிறுவனத்தின் வெற்றி சரித்திரத்துக்கு முக்கிய காரணமே, குறைந்த கட்டணத்தில் நிறைவான குறித்த நேர விமான சேவைதான். 

குறித்த காலத்துக்குப் பிறகு பழைய விமானங்களை விற்றுவிடுவது, புதிய விமானங்களை குத்தகைக்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் எப்போதுமே புதிய விமானங்கள் மூலமான சேவை வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தன. பழைய விமானங்களை விற்றதால், இந்நிறுவன விமானங்கள் பழுது பார்ப்பு செலவு குறைந்தது. இதனாலும் நிறுவனத்தின் லாபம் குறையாமலிருந்தது. நிறுவனம் தொடங்கிய உடனேயே 100 விமானங்களுக்கு ஆர்டர் அளித்ததன் மூலம் குறைந்த விலையில் விமானங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்தன.

அத்துடன் விமான நிறுத்துமிடங்களை முன்கூட்டியே இந்நிறுவனம் விமான நிலையங்களில் எடுத்ததும் சாதகமாக அமைந்தது. மேலும் ஸ்திரமான, திட்டமிட்ட வளர்ச்சியும் நிறுவனத்தின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு வழிவகுத்தது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு 6 வாரங்களுக்கும் ஒரு புதிய விமான சேவையை இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடுத்தியது. இதனாலேயே ஓராண்டில் 42 விமானங்கள் இந்நிறுவனத்தின் வசமானது.

இந்திய விமானத் துறையில் தனியார் நிறுவனங்கள் பலவும் வந்து பாதியிலேயே நஷ்டத்தை சந்தித்து சேவையை நிறுத்தி விட்டன. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேலான கடன் சுமையில், அரசின் தயவால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1990-களுக்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட தனியார் விமான நிறுவனங்கள் பலப்பல.  ஏர் கார்னிவலில் தொடங்கி ஜூம் ஏர் வரை சுமார் 39 நிறுவனங்கள் இந்தியாவில் தொழிலைத் தொடர முடியாமல் நஷ்டத்தில் மூடப்பட்டன. ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ், பாரமவுன்ட், வாயுதூத், தமானியா ஏர்வேஸ், என்இபிசி, சகாரா என நமக்கு பரிச்சயமான நிறுவனங்களாகும். ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தவிர பெரும்பாலும் கடன் சுமையால் மூடப்பட்டவைதான் இவை. சமீபத்திய உதாரணம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். கால் நூற்றாண்டைக் கொண்டாடிய ஜெட் ஏர்வேஸும் முடங்கிவிட்டது. ஆனால், அனைத்து நெருக்கடியான சூழலிலிலும் இண்டிகோ தப்பித்து லாபம் பார்த்தது. 

என்னதான் பிரச்சினை?

சிறந்த விமான சேவை நிறுவனமாக வளர்ந்துகொண்டிருந்த இண்டிகோவில், உறவினர் குழுக்களிடையிலான பரிவர்த்தனை (ஆர்பிடி) குறித்து கங்வால் எழுப்பிய புகார் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலக இடத்தை ராகுல் பாட்டியா குழும நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதில் தொடங்கியது பிரச்சினை. முதலில் அளிக்கப்பட்ட 10 ஆண்டு குத்தகைக் காலம் முடிந்த பிறகு, கட்டணம் உயர்த்தப்படாமல் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது கங்வாலை கோபமடையச் செய்துள்ளது.

அதேபோல விமான என்ஜின் வாங்குவதில் பிராட் விட்னி நிறுவனத்துக்கு டெண்டர் முறை அல்லாமல் கால நீட்டிப்புச் செய்ததையும் கங்வால் விமர்சித்துள்ளார். முதலில் செபி தலையிட வேண்டும் என்று வலியுறுத்திய கங்வால், பின்னர் நிறுவன விவகார அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும், பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு நிறுவனர்களிடையிலான பிரச்சினையை தீர்த்து வைப்பதுதான் பிரதமரின் வேலையா என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் எழுப்பும் கேள்வியையும் புறந்தள்ளிவிட முடியாது.

ஆனால் நிறுவன நிர்வாகம் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டது செபி. நிறுவன விவகார அமைச்சகமும் தன் பங்குக்கு விதிமுறைகளை பின்பற்றியுள்ளதா என ஆராய ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்நிறுவன இயக்குநர் குழு கூட்டம் தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், இப்போதைக்கு 6 பேராக உள்ள இயக்குநர் குழுவின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,203 கோடி. இப்போதைக்கு லாபம் ஈட்டும் நிறுவனம் வார்த்தைப் போரால் பெரும் இக்கட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் இரு நிறுவனர்கள் மட்டுமின்றி 25 ஆயிரம் பணியாளர்களும், சிறிய முதலீட்டாளர்களின் நலனும் அடங்கியுள்ளது.

நிறுவனர்களின் பங்கு அளவைக் குறைக்க வேண்டும் என்ற செபி அறிவுறுத்தலின்படி இரு நிறுவனர்களும் பங்குகளைக் குறைத்தாலும், பழையபடி இந்நிறுவனம் சிறப்பாக செயல்படுமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது இயல்பானதே. விமான துறையில் தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவனர்கள் இருவரின் 25 ஆண்டுக்கால நட்பில் விரிசல் விழுந்துவிட்டது. உடைந்த கண்ணாடி ஒருபோதும் ஒட்டாது. 
ஆனாலும், லாபம் ஈட்டும் நிறுவனம் சரிந்தது என்ற புதிய அத்தியாயத்தை இண்டிகோ எழுதாது என்று நம்புவோம். 

எம். ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x