Published : 22 Jul 2019 09:15 AM
Last Updated : 22 Jul 2019 09:15 AM

விலை குறைவான ஹைபிரிட் கிளான்சா

மாருதி-டொயோட்டா கூட்டணியில் உதயமாகி விற்பனைக்கும் வந்துவிட்ட கிளான்சா எந்த வகையில் மாருதி பலெனோவிலிருந்து வேறுபடுகிறது என்பது கார் பிரியர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. உண்மையில் வெளிப்புறத் தோற்றத்தில் கிளான்சா பேட்ஜ்களையெல்லாம் நீக்கிவிட்டால், பார்க்க அப்படியே மாருதி பலெனோவைப் போலவே இருக்கும். வண்ணங்கள், எல்இடி, ஹெட்லைட், அலாய் வீல் என எதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே வித்தியாசம் கிரில் அமைப்பு மட்டும்தான். வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல உட்புறத் தோற்றத்திலும் பலெனோவுக்கும் கிளான்சாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இரண்டு கார்களுமே ஒரே அசெம்ப்ளி லைனில்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும், கிளான்சா கார் பிரியர்களைக் கவரும். காரணம் கிளான்சாவின் விலை. விலை குறைவான ஹைபிரிட் காராக டொயோட்டா கிளான்சா விளங்குகிறது. கிளான்சாவில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே உண்டு. ஆனாலும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் உள்ளன.

ஒன்று மாருதியின் 1.2 லிட்டர் கே12எம் இன்ஜின். இது 83ஹெச்பி பவர், 113 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதுதவிர்த்து மாருதியின் புதிய 1.2 லிட்டர் கே12என் டூயல் ஜெட் மோட்டார் இன்ஜின். இது 90 ஹெச்பி பவர் 113 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் ஸ்மார்ட் மைல்டு ஹைபிரிட் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுமே பாரத் 6  விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பலெனோவில் ஜீட்டா, ஆல்ஃப் என இரண்டு வேரியன்ட்கள் வருவதுபோலவே கிளான்ஸாவில் ஜி, வி என இரண்டு வேரியன்ட்களாக வருகின்றன.

ஹைபிரிட் மாடலில் பேட்டரி முன்பக்க பயணி இருக்கையின் அடியில் பொருத்தப்படுகிறது. டூயல் ஜெட் இன்ஜினுடன், ஹைபிரிட் அமைப்பையும் இணைத்திருப்பதால் இவை வெளிப்படுத்தும் செயல்திறன் மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன. இதன் டூயல் ஜெட் இன்ஜின் அதிகபட்ச கம்ப்ரஷனை ஏற்படுத்தும் சேம்பரைக் கொண்டுள்ளது. இதனால் இதன் கம்ப்ரஷன் விகிதம் 12:1 என்ற அளவில் உள்ளது. பலெனோ லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் கொடுக்கிறது எனில், இந்த இதன் டூயல் ஜெட் மைல்ட் ஹைபிரிட் இன்ஜின் 23.87 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. ஆனால் கியர் பாக்ஸ் ஆப்ஷனைப் பொருத்தவரை கே12எம் இன்ஜினில் சிவிடி கியர்பாக்ஸ் கிடைக்கிறது. அதேசமயம் கே12என் டூயல் ஜெட் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொண்டுள்ளது.

கிளான்சாவின் ஜி வேரியன்ட்டில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை,  7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடுத், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஜிபிஎஸ் நேவிகேஷன், வாய்ஸ் கன்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஸ்டியரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், டூயல் டோன் அலாய் வீல் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. வி வேரியன்ட்டில் இவை போக கூடுதலாக யுவி கதிர்களைத் தடுக்கும் கண்ணாடிகள், எல்இடி டிஆர்எல் ஹெட்லைட், புதிய எல்இடி டெயில் லைட், லெதர் பினிஷிங் தரப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் தரப்படுகின்றன. 

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தமட்டில், வழக்கமான ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு காற்றுப்பைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. கிளான்சா ரூ.7.22 லட்சத்தில் இருந்து ரூ.8.90 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளான்சாவின் ஸ்மார்ட் ஹைபிரிட் வேரியன்ட் பலெனோவின் ஜீட்டா ஸ்மார்ட் ஹைபிரிட் மாடலைக் காட்டிலும் ரூ.70 ஆயிரம் விலை குறைவாகக் கிடைக்கிறது. அதேபோல் சர்வீஸ் வாரண்ட்டியும் கிளான்சாவுக்கு கூடுதலாகவே கிடைக்கிறது. 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ வரை வாரண்ட்டி கிடைக்கிறது. 3 ஆண்டுகளுக்கு இலவச ரோடு சைடு அசிஸ்டன்ஸும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x