Published : 21 Jul 2019 10:42 AM
Last Updated : 21 Jul 2019 10:42 AM

அஞ்சலி: பெரியார் பெருந்தொண்டர் காந்தியம்மாள்

ஓவியா

கொள்கையும் வாழ்க்கையும் ஒன்றாகக் கொண்டவர் காந்தியம்மாள். கடின உழைப்பு, அந்த உழைப்பின் மீதான அறம். ஏற்றத்திலும் இறக்கத்திலும் தனக்கான உலகைப் படைத்துக்கொள்ளும் தன்னம்பிக்கை. நான்காவது தலைமுறைக்குப் பெரியாரின் கொள்கைகளைக் கடத்திச்சென்றிருக்கும் ஆளுமை.

இந்தச் சுயமரியாதை இயக்க வீராங்கனையின் அப்பத்தா ஒரு மடத்தில் சாமியார் (அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள நாலாராம்புதூர்). வள்ளலார் பக்தை. தன் மகனை ஈன்றெடுத்த பொழுதில் கணவன் வேறொரு பெண்ணிடம் சென்றதை அறிந்ததும், அந்தக் கணவன் வேண்டாமென ஒதுக்கி பர்மா நோக்கிப் பயணமான தன்மானமும் வீரமும் செறிந்த பெண். அந்தத் தாயின் மகனான சண்முகம், பல கலைகளில் வித்தகர். 

சிற்பக்கலை, தையற்கலை, ஒளிப்படக் கலை ஆகிய அனைத்தும் அவருக்கு அத்துப்படி. பல தொழில் செய்யும் கலைஞன் எனக்கு இந்தச் சாதிக் கட்டுமானங்கள் ஒத்துவராது என்று உதறிய வீரர். அதனால் அந்தக் காலத்திலேயே சாதி விலக்கமும் இவருக்கு விதிக்கப்பட்டது. 

பொம்பளைப் பிள்ளைக்கு எதுக்குப் பூவும் பொட்டும் என்று கேட்ட ஒரு தகப்பன் கிடைத்தது காந்தியம்மாளின் முதல் பலம். மூல பலம் என்றும் சொல்லலாம். 

தமிழகத்திலேயே வறட்சி நிரம்பிய மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் (இன்று விருதுநகர் மாவட்டம்) அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் காந்தியம்மாள். ஊர்ப்பாசம் மிக்க அவருக்கு அருப்புக்கோட்டை என்கிற சொல் இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் சொல்லாகவே இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் அந்த வறட்சியான நிலம் அம்மண்ணின் மக்களை இயல்பாகவே கடுமையான உழைப்பாளர்களாக உருவாக்கியது. அதனால்தான் காந்தியம்மாளின் சாரம் இறுதிவரை உழைப்பும் சுயமரியாதையுமாகவே இருந்தது. ஜூலை 12 அன்று தனது கடைசி மூச்சை நிறுத்தும்வரை மண் வாசனையை மறக்காமலும் இழக்காமலும் இருந்தார். 
சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்ட இவரின் பிறந்த தேதி துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அந்த நேரம் காந்தி வந்திருந்தார். அவர் மேல் கொண்ட பற்றினால் தன்னுடைய அப்பா தனக்கு ‘காந்தி’ என்று பெயரிட்டதாகக் கூறுவார் பாட்டி. எனவே 1920-களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிப் பார்த்தால் நடப்பு ஆண்டு அவரது 100-வது ஆண்டு. தன் சகோதரிகளால் மாறி மாறி வளர்க்கப்பட்ட இவர் அந்தச் சகோதரிகளில் ஒருவரான ராசம் அம்மையாரால்தான் சுயமரியாதைச் சுடரொளி ச.வீ.க. முத்துச்சாமி அவர்களுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். இராசம் அம்மையார் அன்றைய உள்ளூர் அரசியல் பிரமுகர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அவருடைய கணவர் சாது அய்யா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்திருக்கிறார். அவருடைய நண்பரைத்தான் காந்தியம்மாள் மணந்து கொண்டார்.

சாதி மறுப்புத் திருமணம்

அன்றைய சாதி மறுப்புத் திருமணமாக இத்திருமணம் பதிவுத்      திருமணமாக நடந்திருக்கிறது. 1937- களில் நடந்த இதை அன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டிருக்குமா? இத்திருமணம் தாத்தா முத்துச்சாமியின் குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை தாத்தா வீட்டார் திருமணமொன்றில் பாட்டியை மட்டும் அழைத்துத் தனியே மாட்டுக்கொட்டகையில் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். இதையறிந்து சினம்கொண்ட தாத்தா, பாட்டியை அழைத்துக்கொண்டு இனிமேல் எந்தக் காரியங்களுக்கும் எங்களை அழைக்காதீர்கள் என்று வெளியேறிவிட்டார். சித்தப்பாவும் சின்னம்மாவும் வராவிட்டால் நான் தாலி கட்ட மாட்டேன் என்று தாத்தாவின் அண்ணன் மகன் பிடிவாதமாக நின்றதில் சரிந்தது சாதியக் கோட்டை. அதன்பின் வீட்டுக்கு வரத்தொடங்கிய பின்னும் பாட்டி கையில் தண்ணீர் வாங்கிக் குடிக்க மனமில்லாமல் இருந்திருக்கிறார்கள். மீண்டும் இளைய தலைமுறையின் கோபம்தான் அதைச் சரிசெய்திருக்கிறது.

திருமணத்தில் சமூகப் புரட்சி

இவர்களது சாதி மறுப்புத் திருமணம், மிகக் கடுமையான சமுதாயச் சவால்களையும் சாதியத்தின் எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனால், சமுதாய எதிர்ப்பால் இந்தத் தம்பதியரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்கள் தங்களை முழுமையாகச் சுயமரியாதை இயக்கத்துக்குள் கரைத்துக்கொண்டார்கள். பெரியாரின் சொல்லுக்குக் காத்திருந்தார்கள். அவர் இடும் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தினார்கள். பெரியாரின் அன்பைப் பெற்ற தமிழ்க் குடும்பங்களில் ஒன்றாக இந்தக் குடும்பம் ஆனது. சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக விலக்கிவைத்த ஊரை இவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் தெரியுமா? இங்கு சாதி மறுப்புத் திருமணங்களும் கைம்பெண் மறுமணங்களும் நடத்தி வைக்கப்படும் என்று பலகை எழுதி வீட்டில் மாட்டினார்கள். அந்தக் காலகட்டத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டிப் பல சாதி மறுப்புத் திருமணங்கள் இவர்களால் நடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கணவர் இறந்த பிறகும் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்துவந்தார் காந்தியம்மாள். அவருடைய பேத்தியான என் சாதி மறுப்பு திருமணம் வள்ளிநாயகத்துடன் இவர் தலைமையிலேயே நடந்தது.

ஜமீன் குடும்பம் என்கிற பெயர் மட்டும் தங்கியிருக்க தாத்தாவின் கல்லாப் பெட்டி காலியாகவே இருந்தது. குடும்பப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற, குடும்ப உறுப்பினர்களாகவே மாறிப்போன ஜீவன்கள் பாட்டி வளர்த்த மாடுகள், மரங்கள், கோழிகள் ஆகியவைதாம். பாட்டியின் கடுமையான உழைப்புதான் இந்தக் குடும்பத்தை நிலை நிறுத்தியது என்பதைத் தாண்டி இந்தக் குடும்பத்தின் தலைமுறைரீதியான தொடர்ச்சியைப் பெரியார் இயக்கத்துக்குள் உறுதிசெய்ததும் பாட்டியின் பெரிய பங்களிப்பு. தாத்தாவின் கைபிடித்து இயக்கத்துக்குள் நுழைந்தவர் அதன்பின் தானே தனித்தும் தனது தலைமுறைகளோடும் இயக்கத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

மாநாட்டுக்குச் செல்வதே திருவிழா

படித்த பெண் பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் சிறு வயதில் கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டு வந்ததையும் தான் அவர்களை வீடு வீடாகக் கூட்டிச் சென்றதையும் நினைவுகூர்வார். தான் மட்டும் படிக்காமல் விட்டுவிட்டதை வருத்தத்துடன் சொல்வார். முத்துச்சாமி தாத்தா ஓரளவு படிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார். எனவே, சற்று மெதுவாக வாசிக்கும் அறிவைப் பெற்றிருந்தார் பாட்டி.

‘விடுதலை’ நாளேடு, ‘உண்மை’ இதழ், ‘தினத்தந்தி’ ஆகியவற்றுடன் நாவல்கள், கதைகள் போன்றவற்றைத் தாத்தா சத்தமாக வாசிக்க, பாட்டி கேட்டுக்கொள்வார். வீட்டில் குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சிக்கும் இந்தப் பொதுவான உரக்க வாசிக்கும் பழக்கம் பெரும் பங்காற்றியது. 

குடும்பத்தின் பொது உணர்வாகக் கொள்கை உணர்வு வளர, இந்த வாசித்தலும் ஒரு காரணி. எந்தச் சடங்கையும் பண்டிகையையும் ஏற்றுக்கொள்ளாத இவர்கள் திராவிடர் கழக மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் போகத் தவறியதேயில்லை. அப்படிப் போவது 
கடமை என்றும் கருதினார்கள். பலமுறை மாநாடுகளுக்குப் போவதற்காக, இருந்த சொற்ப நகைகள் அடகுக்கடைக்குப் போய்விடும். இந்தி எழுத்துக்களைத் தார் கொண்டு அழித்தது பாட்டியின் நினைவுகளில் பசுமையாகத் தங்கியிருந்த போராட்டம். அதே போன்றுதான் மதுரையில் கருப்புச்சட்டை மாநாட்டுக்குத் தீ வைக்கப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் கணவர், குழந்தைகளுடன் சிக்கியதும் வன்முறையாளர்களுடன் தீரமுடனும் தன்னம்பிக்கையுடனும் போராடியதும் அவர் எத்தனை முறை விவரித்தாலும் பிரமிப்புடன் கேட்போம்.

இடுப்பில் எப்போதும் கத்தி

பெரியார் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னார் என்று ஒரு மடக்குக்கத்தியை எப்போதும் இடுப்பில் முடிந்துவைத்திருந்தார் பாட்டி. பெரியார் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றபோது பெரும் எழுச்சி உணர்வுடன் அதில் பங்கேற்ற இவர்கள் திரும்பி வரும்போது முத்துச்சாமி தாத்தா ரயிலில் மாரடைப்பால் காலமானார். இந்தச் சாதி அமைப்பிலிருந்து முற்றிலும் விலகி, சுயமரியாதை இயக்கமே உலகமாக வாழ்ந்த நிலையில் விழுப்புரத்தில் இறங்கி அந்தச் செய்தியை முதலில் பெரியார் திடலுக்கு ஆசிரியர் வீரமணிக்குச் சொல்லச் சொன்னார் காந்தியம்மாள்.

தன்னுடைய கணவர் மறைந்த பின்பு தனித்து இந்தக் கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணித்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான மரியாதையாக, அவர் நேசித்த மனித சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 

பெரியார் பெருந்தொண்டர், பெரியார் தொண்டறச் செம்மல் ஆகிய விருதுகள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியால் அவருக்கு அளிக்கப்பட்டவை. சுயமரியாதை வீராங்கனை என்ற விருதைப் பெரியார் திராவிடர் கழகம் அவருக்கு அளித்தது.
எல்லோரும் பயணித்த பாதையில் பயணித்தவர் அல்ல காந்தியம்மாள். தனக்கெனத் தனிப் பாதை போட்டுக்கொண்டவர். அந்தப் பாதையில் எங்களையும் பயணம் செய்யவைத்துச் சென்றிருக்கிறார். பெரும்பான்மைச் சமூகம் பின்பற்றும் கொள்கையிலிருந்து மாறி அதற்கு நேரெதிரான பாதையில் தொடர்ச்சியான தலைமுறைகளை வளர்த்தெடுப்பது காந்தியம்மாளுக்கு எப்படிச் சாத்தியமானது என்கின்ற கேள்விக்கு ஒற்றைப் பதிலை யாரும் சொல்லிவிட முடியாது. 

கட்டுரையாளர், சமூகச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x