Published : 17 Jul 2019 11:26 AM
Last Updated : 17 Jul 2019 11:26 AM

திறந்திடு சீஸேம் 42: மொவாய் சிலைகள்

ஜேக்கப், டச்சு கடற்பயணி. தென் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த அவர், கி.பி. 1722, ஏப்ரல் 5-ல் அந்தத் தீவை அடைந்தார். ‘கடவுளே! ஈஸ்டர் அன்று உலகில் யாருமே அறியாத இந்தத் தீவைக் கண்டறிந் துள்ளேன். இதற்கு ‘ஈஸ்டர் தீவுகள்’ எனப் பெயரிடுகிறேன்’ என்று கடவுளுக்கு நன்றி சொன்னார் ஜேக்கப். அவரது குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அங்கே பல அடிகள் உயரத்தில் மனித உருவிலான, விநோதமான கற்சிலைகள் தென்பட ஆரம்பித்தன. அதுவும் ஒன்றிரண்டு அல்ல; நூற்றுக்கணக்கில். ஜேக்கப்பும் குழுவினரும் விக்கித்து நின்றபோது, தீவின் பழங்குடியினர் சூழ்ந்துகொண்டனர். நல்ல மனிதர்கள். கொஞ்ச காலம் அவர்களோடு தங்கிய ஜேக்கப், அடுத்த நிலப்பரப்பைத் தேடி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

ஈஸ்டர் தீவு எங்குள்ளது? தென் அமெரிக்கக் கண்டத்தின் சிலியிலிருந்து மேற்கில் 2,300 மைல்கள். ஹவாய் தீவுகளுக்குத் தெற்கே 4,300 மைல்கள். அண்டார்டிகாவிலிருந்து வடக்கே 3,700 மைல்கள் தூரத்தில் இருக்கிறது. ஈஸ்டர் தீவுக்கு அருகிலிருக்கும் மனிதர் வாழும் நிலப்பரப்பு என்றால் 1,260 மைல்கள் தொலைவில் அமைந்த பிட்கெய்ரன் தீவைத்தான் சொல்ல வேண்டும். உலகின் மிகவும் தனிமையான தீவு ஈஸ்டர்தான். அப்படிப்பட்ட தீவுக்கு,  பழங்குடி மக்கள் எப்படி வந்தார்கள்? யார் அவர்கள்?
பாலிநேசியர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் ஆகச் சிறந்த கடல் பயணிகளாக விளங்கியவர்கள். சாதாரண கட்டுமரத்தில் ஏறி, பசிபிக் பெருங்கடலையே அளந்தவர்கள்.

பாலிநேசியர்கள் கண்டடைந்த கடைசி நிலப்பரப்பு ஈஸ்டர் தீவுதான். அதன் பாலிநேசியப் பெயர், Rapa nui. கி.பி. 4-ம் நூற்றாண்டில் நடந்ததாக, பாலிநேசியர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். பாலிநேசியர்களின் ஒரு குழுவுக்கு அரசனாக இருந்த ஹோட்டு மட்டுவுக்கு மோதல் ஒன்றில் தோல்வி ஏற்பட்டது. அரசாளப் புதிய தீவு தேவைப்பட்டது. அவரது உதவியாளரான ஹௌ-மகா, தான் கண்ட கனவை விவரித்தார். ‘‘என் உடல் சூரியன் தோன்றும் திசையில் பறந்து சென்று, ஒரு புதிய தீவை அடையாளம் காட்டியது.’’

ஏழு பேர் படகுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பினர். நீண்ட பயணத்துக்குப் பின் ஈஸ்டர் தீவைக் கண்டடைந்தார்கள். கைவசம் கொண்டுவந்த சில தாவரங்கள், கிழங்குகள், கரும்பு, வாழையைப் பயிரிட்டார்கள். தங்கள் கடவுளின் விருப்பத்துக்குரிய ‘மொவாய்’ சிலை ஒன்றையும் நிறுவினார்கள். ஓர் ஆளை மட்டும் அங்கே வைத்துவிட்டு, மற்றவர்கள் திரும்பினார்கள். அரசரிடம் நடந்ததை விவரித்தார்கள். அரசர் ஹோட்டு மட்டு, தன் குடும்பத்துடனும் பெருங்குழுவுடனும், சில கால்நடைகளுடனும் இரண்டு பெரிய படகுகளில் வந்து ஈஸ்டர் தீவில் இறங்கினார். அரசாள ஆரம்பித்தார்.

ஈஸ்டர் தீவில் சுமார் இருபது ஆண்டுகள் அரசாட்சி புரிந்த ஹோட்டு மட்டு, அங்கேயே இறந்து போனார். பின் அவரது மகன் டு-மஹேகி அரசரானார். 1886 வரை அவர்கள் வம்சத்தினர் ஈஸ்டர் தீவின் அரசராக இருந்திருக்கிறார்கள். இன்றும்கூட ஹோட்டு மட்டுவின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஈஸ்டர் தீவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

இந்தத் தீவின் மொத்தப் பரப்பளவு வெறும் 63 சதுர மைல்களே. அதற்குள் சில மலைகள், எரிமலைகள், குன்றுகள் இருக்கின்றன. மணல் நிரம்பிய கடற்கரை சிறியது. மற்றவை செங்குத்தான பாறைகளால் நிரம்பியது. சமவெளி மிகக் குறைவான நிலப்பரப்பில் பாலிநேசியர்கள் பயிரிட்டு, 1,400 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தது  ஆச்சரியமான விஷயம்.
ஜேக்கப்பின் குறிப்புகள் இப்படிச் சொல்கின்றன. ‘நான் கண்ட தீவில் ஒரு மரம்கூட இல்லை. சுமார் இரண்டாயிரம் மக்கள்வரை இருந்திருப்பார்கள். நாகரிகத்தில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். மக்கள் எண்ணிக்கைக்குச் சரிசமமாகச் சிலைகளும் இருந்தன. கடற்கரைகளில், மலைச்சரிவுகளில், சமவெளிகளில் என எங்கே பார்த்தாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சிலைகள். அந்தச் சிலைகளுக்கான அர்த்தம்தான் விளங்கவில்லை.’

ஜேக்கப்புக்கு மட்டுமல்ல; இன்றுவரை யாருக்குமே விளங்காத புதிர் அந்தச் சிலைகள். ‘மொவாய்’ (Moai) என்று பாலிநேசியர்களால் அழைக்கப்படும் அந்தச் சிலைகள், எரிமலைகளின் பாறைகளில் செதுக்கப்பட்டவை. நீள்சதுர மனித முகங்கள். சில சிலைகள் மார்பளவும், சில கால் முட்டியளவும் இருக்கின்றன. எதற்கும் கால்கள் கிடையாது. அனைத்துமே ஆண் முகம் கொண்டவை. இப்படி நூற்றுக்கணக்கான மொவாய் சிலைகள், தீவு எங்கும் முகம் காட்டிக்கொண்டிருக்கின்றன. மார்பளவுச் சிலைகளின் மீதி உடல் மண்ணுக்குள் புதைந்திருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தச் சிலைகள் பாலிநேசியர் களால் கி.பி. 1100 - 1680 இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆஜானுபாகுவான மனித உடலும், நீண்ட, வளைந்த அலகுடைய பறவையின் தலையும் கொண்ட டேன்கடா-மனு என்ற பறவைக் கடவுளுக்காக, பாலிநேசியர்கள் இத்தகைய மொவாய் சிலைகளைச் செய்திருக்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், பாலிநேசியர்கள் வாழ்ந்த மற்ற தீவுகளில் இப்படிப்பட்ட சிலைகள் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிநேசியர்கள் தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செய்யும்விதமாக இத்தகைய சிலைகளைச் செய்து வழிபட்டிருக்கிறார்கள் என்று சில வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள்.

அப்போது வாகனங்கள் கிடையாது. பல டன் எடையுள்ள இந்த மொவாய்களை, மனிதர்களும் தூக்கிச் சென்றிருக்க முடியாது. யானை போன்ற பெரிய விலங்கு களும் அங்கே கிடையாது. எனில் இந்தச் சிலைகளை, தீவின் பிற பகுதிகளுக்கு எப்படிக் கொண்டு சென்றிருப்பார்கள்?
மரங்களை வெட்டி வரிசையாக உருளைகள் போல அடுக்கி, அவற்றின் மீது மொவாய்களை நிற்க வைத்தோ, படுக்க வைத்தோ உருட்டிச் சென்றிருப்பார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இப்படி ஆயிரக்கணக்கான சிலைகளைச் செய்வதற்கும் அவற்றைக் கொண்டு செல்வதற்கும் மரங்கள் அதிக அளவில் வெட்டி அழிக்கப்பட்டன. எனவேதான் ஜேக்கப் அங்கு இறங்கியபோது ஒற்றை மரம்கூடத் தென்படவில்லை என்பது ஓர் அனுமானம். ஒரு காலத்தில் ஈஸ்டர் தீவில் மக்கள் தொகை பத்தாயிரத்தையும் தாண்டி இருந்திருக்கலாம். மரங்கள் எல்லாம் அழிய, வாழ்வாதாரங்கள் தொலைய, ஜனத்தொகை குறைந்திருக்கலாம் என்கிறார்கள். 

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் ஈஸ்டர் தீவின் முகம் மாறியது. அடிமைகளாக பாலிநேசியர்கள் பிற தேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மக்கள் மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட மொவாய் சிலைகளும்தான். தவிர, இயற்கையாகவே சிதிலமடைந்த சிலைகளின் எண்ணிக்கையும் நூறைத் தாண்டும். தற்போது ஈஸ்டர் தீவில் மிஞ்சியிருப்பது 887 மொவாய் சிலைகள். அதில் இருப்பதிலேயே பெரிய மொவாய், 33 அடி உயரமும் 80 டன் எடையும் கொண்டது. 69 அடியில் 270 டன் எடையில் முடிக்கப்படாத ஒரு சிலைதான் அதிக எடை உடையது. இருப்பதிலேயே சிறிய மொவாய், 3.76 அடி உயரம் உடையது.  
மொவாய் சிலைகள், ஈஸ்டர் தீவுகளின் அதிசயம்! உலகின் பழம்பெரும் பொக்கிஷம்!

- முகில் 
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x