Published : 16 Jul 2019 06:16 PM
Last Updated : 16 Jul 2019 06:16 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: நூலகத்தில் சிங்கம்

மருதன் 

‘‘மிஸ் மெரிவெதர்! 
மிஸ் மெரிவெதர்!”

கத்தியபடி ஓடினார் மெக்பீ. தலைமை நூலகர் மெரிவெதர் சிடுசிடுத்தார். ‘‘நூலகத்தில் யார் சத்தமிட்டாலும் வெளியேற்ற வேண்டும் என்பது விதி. துணை நூலகரான உனக்கு இது தெரியாதா?”
‘‘தெரியும். ஆனால், நூலகத்துக்குள் சிங்கம் நுழைந்துவிட்டது. என்ன செய்வது?’’
கொஞ்சம் திடுக்கிட்டாலும், ‘‘சிங்கம் நூலகத்துக்கு வரக் கூடாது என்று எந்த விதியும் கிடையாது’’ என்றார் மெரிவெதர். ‘‘சரி, அது என்ன செய்கிறது என்று பார்ப்போம், வா.’’

கண்களை உருட்டியபடி மிக இயல்பாக உள்ளே நுழைந்தது சிங்கம். ஏற்கெனவே பழக்கமான இடம்போல் ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. மூலையில், குழந்தைகளை அமர வைத்து ஒரு பெண் கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். சிங்கம் அங்கே சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது. இது என்ன புது வரவு என்பதுபோல் குழந்தைகள் ஆச்சரியத்தோடு சிங்கத்தைத் திரும்பிப் பார்த்தனர். கதை படித்துக் கொண்டிருந்தவரோ பதறிவிட்டார். ‘‘மிஸ் மெரிவெதர், இதென்ன சிங்கத்துக்குமா நான் கதை சொல்ல வேண்டும்?”
மெரிவெதர் தலையசைத்தார். ‘‘எனக்கு விதிகள்தான் முக்கியம். சிங்கம் கதை கேட்கக் கூடாது என்று எந்த விதியும் சொல்லவில்லை. நீ படி.’’

கதை நேரம் முடிந்ததும் எல்லோரும் கிளம்பத் தயாரானார்கள். ஆனால், சிங்கத்துக்கு வருத்தம். அதற்குள் கதை முடிந்துவிட்டதா? இன்னொன்று சொன்னால்தான் என்னவாம்? வாயைத் திறந்து கர்ஜித்தது சிங்கம்.
மெரிவெதர் சிங்கத்தை நோக்கிப் பாய்ந்தார். ‘‘இதோ பார் சிங்கம். நீ உள்ளே வந்ததோ கதை கேட்டதோ எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், சத்தம் போட்டதன் மூலம் விதியை மீறிவிட்டாய். கிளம்பு.’’

சிங்கம் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கியது. உடனே ஒரு சிறுமி ஓடிவந்து சிங்கத்தைக் கட்டிக்கொண்டாள். ‘‘மிஸ் மெரிவெதர், பாவம் சிங்கத்துக்கு நூலக விதிகள் எல்லாம் தெரியாது. விதியை மீறுபவர்களை ஒரேயொருமுறை மன்னிக்கலாம் என்றும் விதி சொல்கிறது அல்லவா? இந்த முறை மன்னித்துவிடுங்கள். அது கத்தாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.’’

மெரிவெதர் அகன்றதும் சிறுமி நிதானமாகச் சிங்கத்துக்கு எல்லாவற்றையும் விளக்கினாள். ‘‘இதோ பார் சிங்கம், தலையே போனாலும் மெரிவெதர் விதிகளைத் தளர்த்த மாட்டார். நீ உள்ளே வந்தததற்குக் காரணமே விதிகள்தான். சேட்டை செய்யாமல் ஒழுங்காக இருந்தால் தினமும் கதை கேட்கலாம். என்ன சொல்கிறாய்?”
சிங்கம் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டது. ஒவ்வொரு நாளும் நூலகம் திறப்பதற்கு முன்பாகவே ஓடிவந்து கதவு அருகில் நின்றுகொள்ளும். இதென்ன சிங்கமா, பூனைக்குட்டியா என்பதுபோல் முகத்தை ரொம்பவும் பாவமாக வைத்துக்கொண்டு அடி மேல் அடி வைத்து நடக்கும்.

தும்மல் வந்தால்கூட வெளியில் வந்துதான் தும்மும்.
விரைவில் சிங்கம் குழந்தைகளின் நண்பனாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால் சிங்கத்தின் தொப்பையின் மீது சாய்ந்துகொண்டு புத்தகம் படிக்கும் அளவுக்கு. சிங்கம் இங்கே வா என்று கூப்பிட்டு அதன்மீது ஏறிநின்று எட்ட முடியாத உயரத்திலுள்ள புத்தகங்களைக் குழந்தைகள் எடுத்து வாசித்தார்கள். வயதானவர் யாராவது வந்தால் சிங்கம் விரைந்து சென்று அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கிக்கொள்ளும். மாலை நேரத்தில் தனது வாலைச் சுழற்றி நூலகத்தைச் சுத்தம் செய்யும்.

குழந்தைகளை மட்டுமா சிங்கம் கவர்ந்தது? நாள் தவறாமல் மெரிவெதரின் நாற்காலிக்கு அருகில் சென்று தனது நீண்ட நாக்கைத் தொங்கப்போட்டுக்கொள்ளும். மெரிவெதர் கடிதங்களை ஒவ்வொன்றாக மடித்து பசை தடவிய உறையில் போட்டு சிங்கத்தின் நாக்கில் ஒரு தடவு தடவி, ஒட்டுவார். சில நேரம் அதன் தலையைச் செல்லமாகத் தட்டிக்கொடுப்பார். ஒரு நாள் ஏணியில் ஏறி மேலே உள்ள ஒரு புத்தகத்தை எடுக்க முயன்றபோது கால் இடறி மெரிவெதர் விழுந்துவிட்டார். சிங்கம் மெக்பீயிடம் விரைந்தது. கையையும் காலையும் வாலையும் வேகமாக அசைத்தது. ஆனால், மெக்பீ திரும்பக்கூட இல்லை.

சிங்கம் வந்தது முதல் குழந்தைகளிலிருந்து மெரிவெதர் வரை ஒருவரும் தன்னிடம் உதவி கேட்பதில்லை என்று அவருக்கு ஏற்கெனவே வருத்தம். மெக்பீ தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்ததும் சிங்கம் தன் வாயை அகலமாகத் திறந்து தனது பலத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி நூலகமே அதிரும்படி கர்ஜித்தது. வாழ்நாளில் அத்தனை சத்தமாகச் சிங்கம் கத்துவது அதுவே முதல் முறை. மெக்பீக்கு வந்ததே கோபம். ‘‘மிஸ் மெரிவெதர், மிஸ் மெரிவெதர், சிங்கம் விதியை மீறிவிட்டது. உடனே வெளியேற்றுங்கள்!” என்று கத்தியபடியே உள்ளே நுழைந்தார். கீழே விழுந்துகிடந்த மெரிவெதரை அப்போதுதான் அவர் கவனித்தார். மருத்துவர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

மறுநாள் சிங்கத்தைக் காணோம். அடுத்த நாளும் வரவில்லை. அதற்கடுத்த நாளும். கதை நேரத்தில் கலகலப்பே இல்லை. சிங்கம் எங்கே, சிங்கம் எங்கே என்று குழந்தைகள் ஏங்க ஆரம்பித்தனர். புத்தகங்களில் தூசி படியத் தொடங்கியது. நான் நன்றாகத்தான் இருக்கிறேன் மெக்பீ என்று சொன்னாலும் மெரிவெதரும் கலக்கத்தில்தான் இருந்தார். எனக்கு விதிகள் முக்கியம், உண்மைதான். ஆனால், என்னைக் காப்பாற்றதானே சிங்கம் கத்தினாய்? உன்னை வெளியேற்றிவிடுவேனோ என்று அஞ்சிவிட்டாயா?

மெக்பீயும் கலங்கிதான் போனார். கொட்டும் மழையில் வீதி முழுக்கத் தேடி அலைந்தார். நீண்ட தேடலுக்குப் பிறகு சிங்கம் அகப்பட்டது. நூலகத்தைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டு,  அமர்ந்திருந்தது சிங்கம். ‘‘நீயில்லாத நூலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாளை முதல் வழக்கம்போல் நீ வரலாம், சிங்கம்!”
மறுநாள் காலை. ‘‘மிஸ் மெரிவெதர், மிஸ் மெரிவெதர்!” உற்சாகமாகக் கத்தியபடி உள்ளே ஓடினார் மெக்பீ. ‘ ‘சிங்கம் வந்துவிட்டது.”

இந்தப் படக்கதையை எழுதிய மிஷெல் நட்ஸனுக்கு ஒரே குழப்பம். குழந்தைகளுக்கான இந்தக் குட்டிக் கதையை ஏன் பெரியவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு படிக்கிறார்கள்? ஏன் லட்சக்கணக்கில் இந்தப் புத்தகம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது? இதற்கு ஏன் விருதுகள் குவிகின்றன?

மெக்பீக்கும் குழப்பம்தான். விதியை உடைத்த சிங்கத்தை எப்படி மெரிவெதரால் நேசிக்க முடிகிறது? நான் வெளியேற்ற நினைத்த சிங்கத்தை நானே ஏன் தேடிப்பிடித்து அழைத்து வந்தேன்? குழந்தைகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படவில்லை? வாலால் புத்தகத் தூசியைத் துடைத்துக்கொண்டிருந்த சிங்கத்திடமே கேட்டுப் பார்த்தார் மெக்பீ. நான் ஒரு சாதாரண சிங்கம். எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டது சிங்கம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.comஇடம் பொருள் மனிதர் விலங்குசந்திரனில் மனிதன் - 50

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x