Published : 05 Jul 2015 02:37 PM
Last Updated : 05 Jul 2015 02:37 PM

கேளாய் பெண்ணே: அலுவலகத்துக்கு ஏற்ற உடை எது?

எனக்கு 22 வயதாகிறது. சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது. விரைவில் அலுவலகத்தில் சேரப்போகிறேன். நான் கல்லூரிவரை என் சொந்த ஊரிலேயே படித்ததால், இப்போது வேலைக்காகச் சென்னை செல்வது சிறிது பதற்றமாக இருக்கிறது. அத்துடன், அலுவலகத்துக்கு முதல் நாள் செல்லும்போது எந்த மாதிரி யான ஆடையை அணிந்து செல்வது என்றும் குழப்பமாக இருக்கிறது. எனக்கு வழிகாட்டுங்களேன்.

- ரேவதி, ராமநாதபுரம்

அலுவலக ஆடை குறித்த ரேவதியின் சிக்கலுக்குத் தீர்வு தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்டைல் கன்சல்டண்ட் தபு.

உங்கள் அலுவலகத்தில் எந்த மாதிரியான டிரஸ் கோட் பின்பற்றப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதீத மாடர்ன் ஆடை களையும், அதீத பாரம்பரிய ஆடைகளையும் தவிர்ப்பது நல்லது. வெஸ்டர்ன் உடை அணிவதாக இருந்தால், முதல் நாள் அலுவலகத்துக்குச் செல்லும்போது, வெள்ளை சட்டையுடன் அதற்கேற்ற பேண்ட் அணிந்து செல்லலாம். வெள்ளை நிறம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், நம்பகத்தன்மையை உருவாக்கும். புடவை அணிந்து செல்வதாக இருந்தால், அயர்ன் செய்து, புடவையை நன்றாக மடித்து பின் செய்துகொண்டு செல்லலாம். காட்டன் புடவை மட்டுமல்லாமல் எல்லாப் புடவைக்கும் இதைப் பின்பற்றலாம். வழுவழு மெட்டீரியலில் சல்வார் அணிந்து செல்லும்போதும், துப்பட்டாவைப் பின் செய்வது நல்லது. காதுகளில் தொங்காட்டான்கள் அணிவதைவிட காதோடு ஒட்டிக்கொண்டி ருக்கிற மாதிரியான ஸ்டட் அணிவது பொருத்தமாக இருக்கும். ஹேர்ஸ்டைலைப் பொருத்தவரை, கூந்தலை விரித்துவிடாமல் பின்னலோ, குதிரைவாலோ போட்டுச் செல்வது நல்லது. கைப்பை, ரொம்ப பெரிதாகவோ ரொம்ப சிறிதாகவோ இல்லாமல் தேவையான பொருட்கள் மட்டும் எடுத்துசெல்லும்படி சரியான அளவில் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. உங்கள் முதல் நாள் அலுவலக அனுபவம் இனிமையானதாக இருக்க வாழ்த்துகள்.

எனக்கு எண்ணெய்ப் பசை சருமம். இது வெயில் நேரம் என்பதால் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது. பருக்கள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. பருக்கள் குறைவதற்காக சில க்ரீம்களைப் பூசிசேன். அலர்ஜி ஏற்பட்டுவிட்டது. அதனால் இயற்கையான முறையில் முகத்தைப் பராமரிக்க ஆலோசனை சொல்லுங்கள்.

- ஸ்வேதா, சென்னை

ஸ்வேதாவின் பிரச்சினைக்குஆலோசனை வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ். ரோஹிணி.

* கேரட் சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லையும், ஓட்ஸ் பவுடரையும் சேர்த்து முகப்பூச்சு போட்டு சிறிது நேரம் கழித்து கழுவினாலும் முகம் பளிச்சென்று மாறும்.

* பாதாம் பவுடரையும் தேனையும் சேர்த்து முகத்தில் பூசிவர பொலிவு கூடும்.

* வெள்ளைக் கருவுடன் புளிக்காத தயிர், தக்காளி சாறு சேர்த்து முகப்பூச்சு தயாரித்து பயன்படுத்தலாம்.

* ஆரஞ்சுப் பழத்தின் தோலைப் பவுடராக்கி, அதை ரோஸ் வாட்டர் கலந்து பூசிவந்தாலும் பலன் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி சாற்றுடன், சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவிவர பருக்களும் கரும்புள்ளிகளும் நாளடைவில் மறையும்.

* உருளைக்கிழங்கு சாறும் முகத் துக்குப் பொலிவைத் தரும்.

* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் இந்தக் கலவைகளை முகப்பூச்சாகப் பயன்படுத்தலாம். உலர் சருமம் உள்ளவர்களும், மற்றவர்களும் சாறாகப் பூசலாம். பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவிவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x