Last Updated : 09 May, 2014 12:31 PM

 

Published : 09 May 2014 12:31 PM
Last Updated : 09 May 2014 12:31 PM

எண்ணங்கள்: பாதை காட்டும் பத்து வழிகள்

விளம்பரம் மற்றும் விநியோகத்திற்குத் தேவைப்படும் பட்ஜெட் பற்றிக் கடந்தவாரம் பார்த்தோம். ஒரு தயாரிப்பாளர் செலவு செய்து தனது படத்துக்கு விளம்பரம் செய்ய முடியுமோ இல்லையோ, செலவில்லாமல் பல விளம்பரங் களைக் கொண்டுவர முடியும். பத்திரிகைகள் முக்கிய விளம்பரக் களமாக இருந்தாலும் இன்று தொலைக்காட்சி, பண்பலை வானொலி, இணையதளம் என ஊடகங்கள் வலுவாக வளர்ந்துவிட்டன. இவற்றில் திரைப்படங்களைப் பற்றிய செய்திகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. ஊடகங்கள் சதா ’செய்திப் பசி’யுடன் வாழ்கின்றன. எனவே தங்கள் படம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளிவரச்செய்து, படம் பற்றிய ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்குவது தயாரிப்பாளர்களின் கடமை. அதற்குத் தேவை சரியான திட்டமிடுதல்,

செலவில்லா விளம்பரங்கள்

செலவில்லா விளம்பரங்கள் ஒரு படத்திற்கு எளிதாகக் கிடைக்காது. ஆனால் ஊடகங்களுடன் நல்ல உறவு, ஒரு நல்ல ஊடகத் தொடர்பு அலுவலர், தொடர் முயற்சி இவை இருந்தால் சாத்தியம். ஒரு படத்தின் தொடக்கம் முதல், அது வெளியாகும் வரை பல முறைகளில், செலவில்லா விளம்பரங்களைக் கொண்டுவர முடியும். அவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்....

1. நடிகர்கள் / தொழில்நுட்ப வல்லுநர்கள்:

இவர்களே ஒரு படத்தின் ஆதாரம். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேர்வு ஒரு பரபரப்பான, தொடர் செய்தியாக மாற முடியும். உதாரணத்திற்கு, மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற உலகப் புகழ் இசையமைப்பாளர் சேரும்போது, அது மிகப் பெரிய செய்தியாகி, பரபரப்பை உண்டாக்கி, அப்படத்தை ஒரு பெரிய பட்ஜெட் படமாக்குகிறது.

2. படத் தலைப்பு:

ஒரு படத்தின் தலைப்பை, பரபரப்பான, அனைவரும் பேசும் ஒரு செய்தியாக, ஊடகங்கள் கருத வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தீயா வேலை செய்யணும் குமாரு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவன் வேற மாதிரி, சூது கவ்வும், புறம்போக்கு, கோ, மாற்றான், வீரம், தசாவதாரம், விஸ்வரூபம், உத்தம வில்லன், எந்திரன் போன்ற தலைப்புகள் பார்வையாளர்களை உடனே கவர்ந்து, ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகின்றன. மக்கள் மனதில் அழுத்தமாகப் படியும் ஒரு பெயர், படம் வெளியாகும் முன் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி விடுகிறது.

3. பட பூஜை:

ஒரு படத்தின் தொடக்கமான பட பூஜை நிகழ்ச்சியை, தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மூலம் ஒளிபரப்பிப் படத்தைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த முடியும்.

4. படப்பிடிப்புத்தளம்/ சுவாரசிய மான தகவல்கள் / பேட்டிகள் / புகைப்படங்கள்:

ஒரு படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குப் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டி, படம் பற்றிய ‘ஷூட்டிங் ஸ்பாட்’ அனுபவங்களை அவர்களை எழுத வைப்பது, படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத சம்பவங்கள், நடிகர்களின் பேட்டி, தொழில்நுட்ப வல்லுநர்களின் பேட்டிகள், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், போட்டோ ஷூட் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனப் பல வடிவங்களில் ஊடகங்களுக்குத் தீனி கொடுத்துக்கொண்டே இருக்கலாம். இதற்குத் தேவை சரியான திட்டமிடல் மட்டுமே.

5. முதல் தோற்றம் (First look):

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், படத் தலைப்பின் லோகோ டிசைன், லோகோ டிசைனுடன், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் ஏற்று நடிக்கும் காதாபாத்திரத்துக்கான தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விளம்பரம், ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் சரியான முறையில் வெளியாகும்போது, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் கூடும்.

6. டீஸர் வெளியீடு:

டீஸர் வீடியோ எனப்படும் முதல் ஒளி-ஒலி வெளியீடு (ஒரு நிமிட அளவில்), படத்தை அடுத்த கட்டத்திற்கு ரசிகர்களிடம் கொண்டு செல்லும்.

7. படம் உருவான விதம் வீடியோ ( Making video) வெளியீடு:

டீஸருடன், படம் உருவான விதம் பற்றிய வீடியோ வெளியிடுதல், அப்படத்தின் தரம் மற்றும் புதுமைகளைப் பற்றிய ஆவலை ஏற்படுத்தும்.

8. படத்தின் முன்னோட்டம் (Trailer) வெளியீடு:

டிரைலர் வெளியாகும்போது, படத்தைப் பற்றிய முழுமையான எண்ணம் மக்கள் மனதில் பதிவாகி, அந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிவிடுகிறது. முன்னோட்டமே அப்படத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை அனேக நேரங்களில் முடிவுசெய்துவிடுகிறது. ஒரு சிறந்த முன்னோட்டம், படத்திற்கு, சிறப்பான தொடக்க வசூலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பலாம்.

9. பாடல்கள் (Audio release) வெளியீடு:

மனதைக் கவரும் பாடல்கள் அமைந்த காரணத்தாலேயே பல சாதாரணப் படங்கள்கூட நல்ல வெற்றி அடைந்துள்ளன. எனவே, நல்ல பாடல்களுடன் புதுமையான பாடல் வெளியீடு நிகழ்ச்சி ஒரு படத்திற்கு அதிக எதிர்பார்ப்பைக் கூட்டி, வெற்றிக்கு வழிவகுக்கிறது.

10. பட வெளியீட்டிற்கு முன் பேட்டிகள்:

பாடல் வெளியீட்டுக்குப் பின், நடிகர்கள், இயக்குநர், இசை அமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் தரும் பேட்டிகள், படத்திற்கு எதிர்பார்ப்பை மேலும் கூட்டும். இதுவரை படம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் (முதல் பதிவு, முன்னோட்டம் என அனைத்தும்), பலமாக இருக்கும் பட்சத்தில், ஊடகங்கள், அப்படத்தின் வெற்றியை ஊகித்து, பல பேட்டிகளை ஒலிபரப்ப/ எழுத முன்வந்து படத்திற்குப் பலம் சேர்ப்பார்கள். ஊடகங்களின் இந்தத் தேவையைத் தயாரிப்பாளர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திட்டமிட்டுச் செய்தால், மேலே குறிப்பிட்ட அனைத்தையுமே விளம்பரத்திற்கென பைசா செலவில்லாமல் ஒரு தயாரிப்பாளர் சிறப்பாக நிறைவேற்றி, படத்தைப் பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்க முடியும், அது பெரிய நடிகர் அல்லது சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் சாத்தியமே.

தொடர்புக்கு: dhananjayang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x