Published : 19 Jun 2015 03:14 PM
Last Updated : 19 Jun 2015 03:14 PM

இனியாவது ஹெல்மெட் அணிவீர்களா?

தினமும் காலையில் கண்ணாடி முன் அதிக நேரத்தைச் செலவுசெய்து தலைமுடியைச் சரிசெய்வது உள்ளிட்ட அலங்காரங்களில் ஈடுபடுகிறீர்களா? ஹெல்மெட் அணிந்தால் கூந்தல் பாதிக்கப்படும் என்று கருதி அதை அலட்சியப்படுத்திவிட்டு வாகனத்தில் கிளம்புகிறீர்களா? இப்படியான இயல்புகளைக் கொண்ட இளைஞராக நீங்கள் இருந்தால் அரசின் இந்த அறிவிப்பு உங்களிடம் சிறிய அளவிலாவது பாதிப்பை உருவாக்கும்.

ஜூலை-1 முதல் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்னும் உயர் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளது. ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது புது விஷயமல்ல. ஏற்கெனவே கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது கண்டிப்பான சட்டமாகக் கடைப்பிடிக்கப்பட வில்லை. இப்போது அப்படியல்ல, மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணிந்ததால் ஆபத்தான விபத்துகளிலும்கூட உயிர் பிழைத்தவர்களைப் பற்றிய செய்திகளை தங்கள் நண்பர்களுடன் இளைஞர்கள் பலர் பகிர்ந்துகொண்டாலும் அதனைப் பயன்படுத்துவதில் பலர் மெத்தனமாக இருக்கிறார்கள். உயிரே போகும் அளவுக்கு அபாயம் இருந்தாலும் அலட்சியமாகக் கருதப்படும் விஷயமாக உள்ளது ஹெல்மெட். இனியாவது நிலைமை மாறுமா?

ஹெல்மெட் அணிவது நமது நலனுக்காகத் தான் என்றாலும், பலர் தங்கள் மீது உள்ள அளவற்ற நம்பிக்கை யால் ஹெல்மெட் அணிவ தில்லை என்று சொல்கிறார் திருச்சியைச் சேர்ந்த விஜய்சக்தி (24). இந்த முறை ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்தான் அணிய வேண்டும் என்ற விதியை வற்புறுத்துவதால், போலி முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. காவல்துறையினர் அதையும் சரிபார்த்தால் நல்லது என்ற கோரிக்கையும் வைக்கிறார் அவர்.

ஹெல்மெட்டைக் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசின் ஆணை வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பலர் காவல் துறையினரைப் பார்த்தவுடன் பைக்கின் டேங்க் மேலிருந்து ஹெல்மெட்டை அவசரமாக எடுத்து அணிந்து கொள்கிறார்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற மனநிலை தான் இளைஞர்களிடம் உள்ளது. இது ஏன்?

நடுத்தர மக்கள் ஹெல் மெட்டுக்குச் செலவிடச் சுணங்குவார்கள் என்று கூறுகிறார் சேலத்தைச் சேர்ந்த ராம்குமார் (25). “ஒருவேளை, ஹெல்மெட் போடுறதால எந்தப் பயனும் இல்லைன்னு நினைக்கிறாங்களோ, என்னவோ” என்ற கேள்வியையும் எழுப்புகிறார் அவர்.

“உயிரைக் காப்பாத்திக்கிறத விடக் கூந்தலைக் கவனிச்சிக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சுக்கிட்டு ஹெல்மெட்டை சில பேர் போட்டுக்காம விட்டுடு றாங்க” என்கிறார் புஷ்பா (22). “தலையில ஏதோ பாரத்தை வைச்சது மாதிரி இருக்கும்ங்கிறதால பக்கத்துல எங்காவது போகணும்னா ஹெல்மெட் போட மாட்டேன். ஆனால், நீண்ட தூரம் போனா கண்டிப்பா போட்டுக்குவேன்” என்று ஹெல்மெட்டுக்கு ஆதரவு தருகிறார் இந்தத் திருவள்ளூர்க்காரர்.

“சென்னை மாதிரி நகரங்கள்ல திரும்பிப் பார்த்து ஓட்டுறதுக்கு ஹெல்மெட் கொஞ்சம் தடையா இருக்கு. அது மட்டுமல்ல இங்க அடிக்கிற வெயிலுக்குத் தலை வேர்த்து, முடி கொட்டுற பிரச்சினை வேற வந்துடுது” என்று ஆதங்கப்படுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த ராபின் (23). ஆனாலும், ஒரு முறை கீழே விழுந்து தலையில் அடிபட்டால் எவ்வளவு மருத்துவச் செலவு என்று யோசித்தால் நல்ல ஹெல்மெட் வாங்குவதே மேல் என்பது புரியும் என்கிறார் அவர்.

ஆணை பிறப்பிப்பதைவிட அதை ஒழுங்காகக் கடைப்பிடித்தால்தான் மக்களிடையே ஒரு பயம் வரும். அப்போதுதான் எல்லோரும் ஹெல்மெட் அணியும் பழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்ற பெரும்பான்மை யோரின் கருத்தோடு ஒத்துப்போகிறார் சென்னையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் (21).

நம்முடன் பேசிய இளைஞர்கள் பல்வேறு வகையான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டாலும் கல்லூரி மாணவரான சக்திவேல் (20), இந்த விவாதங்களுக்கெல்லாம் ஜூலை 1 முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார். “கண்டிப்பா ஜூலை 1-ம் தேதியிலருந்து எல்லாரும் ஹெல்மெட் போட்டுக்குவாங்க. உயிருக்குப் பாதிப்பு ஏற்படுதோ இல்லையோ ஃபைன் கட்டுறதைத் தவிர்க்கிறதுக்காகவும், லைசென்ஸைக் காப்பாத்தவுமாவது ஹெல்மெட்ட மறக்காம போட்டுக்குவாங்க” என்கிறார்.

ஹெல்மெட் அணிவது என்பதை விதியாக எண்ணி வெறுப்புற வேண்டிய அவசியமல்ல. அது நமக்கானது, நம்மைப் பாதுகாப்பது என்ற புரிதல் இருந்தால் போதும். ஆரம்பத்தில் சிறிது அலுப்பாக இருந்தாலும் ஹெல்மெட் போட்டுப் பழகிவிட்டால் அதன் பயனை உணர்ந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. இளமைத் துள்ளலின்போது கட்டுப்பாடுகள் பிடிக்காதுதான். ஆனால், இளமையை எப்படிப் பேண வேண்டுமோ அப்படியே நமது பாதுகாப்பையும் நாம்தானே பேண வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x