Last Updated : 12 May, 2015 12:30 PM

 

Published : 12 May 2015 12:30 PM
Last Updated : 12 May 2015 12:30 PM

நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்ட முடியுமா?

கிச்சுக்கிச்சு மூட்டினால் குழந்தைகள் இடைவெளி இல்லாமல் கள்ளங்கபடமற்ற சிரிப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் அறியாதபோது திடீரென்று உடலின் குறிப்பிட்ட பகுதிகளைத் தொட்டுவிட்டால் கூச்சம் ஏற்பட்டுவிடுகிறது. இதெல்லாம் சரி, நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்ள முடியுமா? அப்படிச் செய்யும்போது நமக்கு உடல் கூச்சம் ஏற்படுமா, சிரிப்பு வருமா?

தப்பிக்கும் வழி

கிச்சுக்கிச்சு மூட்டும்போது நம் உடலை நெளிப்பதும் முகத்தைச் சுளிப்பதும் ஏன் ஏற்படுகிறது? நம்முடைய எதிரிகள் உடலின் முக்கியமான பகுதிகளைப் பிடித்துக்கொள்ளும்போது, இயற்கையான உடல் அசைவுகளின் மூலம் தப்பிப்பதற்கு என்ன செய்வோமோ, அதைத்தான் கிச்சுக்கிச்சு மூட்டும்போதும் செய்கிறோம் என்கிறார் பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின்.

கிச்சுக்கிச்சு என்ற வெளிப்பாட்டை விளக்கவே டார்வின் இப்படிக் கூறியிருக்கிறார். நமக்குத் தெரியாமல் எதிர்பாராத நேரத்தில் அந்நியர் நம் உடல் பாகத்தைத் தொடும்போது ஏற்படும் அசைவின் ஒரு வெளிப்பாடுதான் கிச்சுக்கிச்சு. இதனால் நிச்சயமாக உயிருக்கோ, உடலுக்கோ ஆபத்து இல்லை.

நமக்கு நாமே

நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்ள முடியாது. அதற்குக் காரணம் இருக்கிறது. நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்ளும்போது, உடலின் எந்தப் பகுதியில், என்ன செய்யப் போகிறோம் என்பது நமது மூளைக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதுதான் அந்தக் காரணம்.

நம்மை நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்ளும்போது, நமது சிறுமூளை அந்தச் செய்தியை மூளையின் சோமாட்டோசென்சரி கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பும். அதுதான் தொடு உணர்வுக்கான மூளையின் பகுதி. நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்வது பற்றி, தொடு உணர்வுக்கான மூளைப் பகுதிக்கு நமது சிறுமூளை முன்கூட்டியே உளவு சொல்லி விடுகிறது. அதனால், மூளை அதைக் குறைந்தபட்ச ஆபத்தாகக்கூட நினைப்பதில்லை. அதனால்தான் கிச்சுக்கிச்சுவோ, சிரிப்போ தோன்றுவதில்லை.

பெண்களைவிட ஆண்களே அதிக உடல் கூச்சம் கொண்டவர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அத்துடன் மூளையின் இடது பகுதிதான் சிரிப்பு போன்ற நமது ஆக்கப்பூர்வமான உணர்வுகளுக்கான பகுதி. அதனால், உடலின் வலது பாகத்தில் செய்யப்படும் கிச்சுக்கிச்சு அதிக உடல் நெளிவை ஏற்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x