Last Updated : 05 May, 2015 11:37 AM

 

Published : 05 May 2015 11:37 AM
Last Updated : 05 May 2015 11:37 AM

ஆஸ்கருக்கு இணையான இசை விருது: கிராமி

இசையில் பரிச்சயமுள்ளவர்கள் கேள்விப்பட்டிருக்கும் விருது கிராமி. திரைப்படத் துறையில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது என்று சொல்லப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியே ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக அதிகப் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது என்பதே இதன் பெருமைக்குச் சான்று. இசைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு 1958-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

முதல் விருது வழங்கும் நிகழ்ச்சி 1959-ம் ஆண்டு மே 4 அன்று நடைபெற்றுள்ளது. இசைக் கலைஞர்களையும் பாடகர்களையும் மட்டும் அங்கீகரித்து விருது அளிப்பது வழக்கமான செயல். ஆனால் இசைத் துறையின் பின்னணியில் பங்களிப்பைத் தரும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்கூட விருது வழங்கத் தொடங்கியது த ரிக்கார்டிங் கம்பெனி. ஆல்பம் விற்பனைக்கும் விருதுக்கும் சம்பந்தமில்லை, தரத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விருது அளிக்கப்படுகிறது.

கிராமபோன் விருது

இசை உலகில் திறம்படச் செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே த ரிக்கார்டிங் கம்பெனி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1957-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இசைத் துறையில் கலையின் உச்சம் தொட்ட, தொழில்நுட்பத் துல்லியம் தந்த, ஒட்டுமொத்தத் திறமையாளர்களை மரியாதை செலுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. முதலில் இது கிராமபோன் விருது என அழைக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஒரு போட்டியை நடத்தி, கிராமி என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 1971-ம் ஆண்டில் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 1973-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் விருது வழங்கும் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்திய வம்சாவளியினர்

ஆண்டுதோறும் வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நடைமுறை ஜூலை ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுகிறது. கடந்த பிப்ரவரியில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 57-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிக்கி கேஜ், நீலா வாஸ்வாணி ஆகியோருக்கு விருது கிடைத்தது.

இந்த ஆண்டு சுமார் 83 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆனால் தொடக்கக் காலத்தில் 28 பிரிவுகளில் மட்டுமே கிராமி விருது வழங்கப்பட்டது. சர் ஜார்ஜ் ஸோல்டி என்பவர் 31 முறை கிராமி விருதை வென்று அதிக முறை இவ்விருது பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் இவ்விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x