Last Updated : 08 May, 2015 12:49 PM

 

Published : 08 May 2015 12:49 PM
Last Updated : 08 May 2015 12:49 PM

இணையதளம் காக்கும் இளைஞர் படை

கடந்த மாதம் யுடியூபில் வெளியான ஒரு வீடியோ பதிவு இணையதள வாசிகளை இணையதளத்திலேயே புரட்சி செய்யத் தூண்டியது. “இணையதளம் இல்லை எனச் சொன்னால்கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால் மந்தமான இணையதளத்தைச் சகித்துக்கொள்ளவே முடியாது!” என அறைகூவல் எழுப்பினார்கள் அந்த வீடியோவில் தோன்றிய இளைஞர்கள். நெட் நியூட்ராலிட்டிக்கு வாக்களிக்கும் பிரசாரம் (Vote for Net Neutrality Campaign) எனும் அமைப்பு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

அதற்குச் சுவாரஸ்யமான வடிவம் கொடுத்தவர்கள் ஏஐபி இளைஞர்கள். எப்போதும் சினிமா பிரபலங்களையும், அரசியல் பிரமுகர்களையும் வறுத்தெடுக்கும் இளைஞர் காமெடி படைதான் ஏஐபி. இந்த முறை அவர்கள் இணையதள வம்புகளைக் கிளறியுள்ளார்கள். ஒட்டுமொத்த இணையதளத்தின் செயல்பாட்டைப் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்கள்தான் நாம் எந்த வலைதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். இது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டிய குற்றம் என்றது அந்தப் பதிவு.

உதாரணத்துக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் ஒருவர் இணையதளத்தைத் திறக்கிறார். அமேசானை முதலில் தேர்வு செய்கிறார். ஆனால் அதன் முதல் பக்கம் திறக்கவே நீட்டி நெளிகிறது. உடனே கடுப்பாகி ஃபிளிப்கார்ட்டுக்குள் நுழைகிறார். கண் சிமிட்டும் நேரத்தில் வேலை முடிகிறது. இனி அவர் அமேசான் பக்கம் திரும்பமாட்டார். எதற்கெடுத்தாலும் ஃபிளிப்கார்ட்தான்.

ஆக, எல்லா வலைதளங்களும் இணையத்தில் அணிவகுத்திருக்கும்போது, ஒரு சில வலைதளங்கள் மட்டுமே துரிதமாக இயங்குகின்றன. இதற்குப் பின்னால் தொலைத்தொடர்பு சுறாக்கள் தந்திரமாகச் செயல்படுகின்றன . “நீங்கள் எந்த நிறுவனச் சேவையின் பயனாளியாகவும் இருக்கலாம்.

ஆனால் அனைத்து வலைதளங்களையும் ஒரே வேகத்தில் பயன்படுத்தும் நிலை வர வேண்டும்.” என்கிறது இந்த அமைப்பு. எல்லா வலைத்தளங்களும் சிறப்பான சேவையைத்தான் அளிக்கின்றன. ஆனால் பெரு நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்கள் மட்டும் அதி வேகமாக இயங்கச் சாதுரியமாகச் செயல்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை வைக்கிறது இந்த அமைப்பு.

இந்த இணையதள சர்ச்சை பெரும் பூதமாகக் கிளம்பி இணையவாசிகளைப் பிடித்து ஆட்டியது. விளைவு லட்சக்கணக்கான டிவிட்டர்வாசிகள் சேவ் தி இண்டர்நெட் (# savetheinternet) எனும் ஹாஷ் டாகைப் பார்த்துவிட்டு டிராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின்னஞ்சல்களை ஏவுகணைபோல ஏவினார்கள்.

மற்றொரு புறம், நெட் நியூட்ராலிட்டி என்பது இணையதளப் பயனாளிகளின் அடிப்படை உரிமை. இணையதளத்தை உடனடியாகப் பாதுகாக்கத் தவறினால் விரைவில் வெவ்வேறு வலைதளங்களை உபயோகிக்க அதிகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்னும் எச்சரிக்கை பலரால் விடுக்கப்பட்டது. அதே நேரம் இது ஒன்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை அல்ல. பெருவாரியான இணையதள நிறுவனங்கள் நெட் நியூட்ராலிடியை ஆதரித்துவருகிறார்கள் எனவும் சொல்லப்பட்டது.

இதன் எதிர்வினையாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தோடு இணைந்து தொடங்கவிருந்த ‘ஏர்டெல் ஜீரோ’ திட்டத்திலிருந்து பின்வாங்கியது. “இந்தியாவில் நெட் நியூட்ராலிடியைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்றது அந்நிறுவனம். பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் ஏழை, எளிய மக்களுக்கு இலவச இணையதளச் சேவை அளிக்க இண்டர்நெட்.ஓஆர்ஜி ( >internet.org) எனும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கல்வி, வேலை, சுகாதாரம், தகவல் பரிமாற்றம் தொடர்பாகப் பிராந்திய மொழிகளில் இலவச இணையதளச் சேவைகள் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வட மாநில கிராமமான சண்டவுலிக்கு வந்தபோது ஏழ்மையிலும் ஆர்வத்தோடு இணையம் மூலம் கல்வி கற்கும் பள்ளிக் குழந்தைகளைக் கண்ட பிறகு, இணையதளம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் எனத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

அரசுத் தரப்பிலும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதிலும் ஜனநாயகப் பூர்வமாக இது குறித்த அறிக்கையை டிராய் இணையதளத்திலேயே வெளியிட்டுள்ளது. ஆனால் என்ன, 118 பக்கம் நீளம் கொண்ட அறிக்கை அது. அதுவும் 10 எண் ஃபான்ட் அளவில். குறுக்கே குறுக்கே வேறு சுட்டிகள் கச்சா முச்சாவென உங்களைக் குழப்பிவிடும் அவ்வளவுதான். இருந்தாலும் >savetheinternet.in என அவர்கள் அளித்த சுட்டியைப் பின்தொடர்ந்து இதுவரை 2 லட்சம் மின்னஞ்சல்கள் அவர்களை சென்றடைந்துள்ளனவாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x