Last Updated : 28 Apr, 2014 10:00 AM

 

Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM

மேல்நிலைப் பள்ளிக்கு மேல்...

தமிழகத்தில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது தொடர்பான கேள்விகள் ஒவ்வொரு மாணவர் மனத்திலும் எழும்பிக்கொண்டேயிருக்கும்.

ஆளாளுக்கு ஒவ்வோர் ஆலோசனை வழங்குவார்கள். எனவே மேற்படிப்பு குறித்த சரியான முடிவுகளை எடுத்துச் செயல்படும்போது மாணவர்கள் வாழ்வில் வெற்றிகளை அடைய இயலும்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயல்பட்டுவரும் தேசிய வேலைவாய்ப்புத் தகவல் மையம் மாணவர்களுக்காகக் கல்வி & வேலைவாய்ப்பு மலர் ஒன்றை ஏ4 அளவிலான நூலாக வெளியிட்டுள்ளது. இலவசமாக எம்.பி.பி.எஸ்., பி.டெக். போன்ற படிப்புகளைப் படிக்க வழி என்ன, இந்தப் படிப்புகளைப் படிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது, எங்கே விண்ணப்பம் கிடைக்கும், எந்த இணையதளத்தில் விவரம் அறியலாம் போன்ற பல விவரங்களும் இந்த மலரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடற்படை, ராணுவம் மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவற்றில் வேலை பெற உதவும் மருத்துவ, பொறியியல் படிப்புகளைப் படிக்கத் தேவையான ஆலோசனைக் குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளியில் படித்த பாடங்களுக்கு ஏற்பக் கல்லூரியில் என்ன படிப்புக்குச் செல்லலாம் என்பது எளிய அட்டவணை மூலம் சொல்லப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை, மாநில அரசின் கல்வி உதவித் தொகை, சிறுபான்மையின மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை, அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை ஆகியவற்றைப் பெறுவது தொடர்பான தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சார்ட்டட் அக்கவுண்டண்ட், சட்டப் படிப்புகள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், விமானம் ஓட்டக் கற்றுத் தரும் பைலட் பயிற்சி போன்ற பலவற்றைப் பற்றிய தகவல்களையும் இம்மலரில் காணமுடிகிறது.

வெளிநாட்டில் உயர்கல்வி பெற என்னென்ன தேர்வுகள் உள்ளன என்பது குறிப்பிடப்பட்டு அவை தொடர்பான தகவல்களைத் தரும் இணையதள முகவரியும் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு தொடர்பாகவும் தனி அத்தியாயத்தைத் தந்துள்ளனர். என்ன படிப்புக்கு என்ன வேலை என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஜாப் சார்ட் ஒன்றைக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் உங்கள் படிப்புக்குப் பொருத்தமான வேலை எது என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடிகிறது. அனைத்துத் தகவல்களையும் முழுமையாகத் தர முடியாத நிலையில் அத்தியாவசிய தகவல்களை அளித்துவிட்டுப் பிற தகவல்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரியையோ அஞ்சல் முகவரியையோ அளித்துள்ளனர்.

கல்வி & வேலைவாய்ப்பு மலர்,
தேசிய வேலைவாய்ப்பு தகவல் மையம்,
இராசிபுரம்- 637408
கைப்பேசி: 98439 20500

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x