Last Updated : 14 Dec, 2013 01:22 PM

 

Published : 14 Dec 2013 01:22 PM
Last Updated : 14 Dec 2013 01:22 PM

வேலைக்காரி - கண்டிப்பாக வயது ஆனோருக்கு மட்டும்!

சரித்திர நாயகர்கள், சாதனையாளர்கள், போராளிகள், திறமையாளர்கள், நிபுணர்கள், வல்லுநர்கள், தன் உடலமைப்பால் வசீகரிப்போர், ஏதோ ஒரு வகையில் தனித்துவம் மிகுந்தவர்கள்.. இத்தகையோரது வாழ்க்கை, சுவாரசியம் மிகுந்த கதை, திரைக்கதைகளைப் பார்த்துப் பார்த்து அசதி ஏற்பட்டதாய் உணர்ந்த தருணத்தில் பார்த்த படம், புயலுக்குப் பிந்தைய அமைதியைத் தந்து, மனதுக்குக் கிடைத்த மிருதுவான முத்தமாக இருந்தது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்த ஹாங்காங் படம்தான் அது.

ஆன் ஹுய் என்ற இயக்குனர் தனது வாழ்க்கையில் உறவாடிய ஒருவரை முன்னிலைப்படுத்தி, எ சிம்பிள் லைஃப் (A Simple Life) என்ற படத்தைப் படைத்திருக்கிறார். நான்கு தலைமுறைகளாக ஒரு பணக்கார குடும்பத்துக்குப் பணிப்பெண்ணாக இருந்து வரும் சுமார் 70 வயது பெண்மணிதான் அந்த நாயகி.

மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, தனது எஜமானர்கள் அனைவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, நான்காவது தலைமுறையைச் சேர்ந்த 30 வயது இளைஞன் ரோஜர் லீ-க்குப் பணிவிடைகள் செய்யும் பொறுப்பைச் செய்யத் தொடங்குகிறார் சிஸ்டர் பீச்.

ஒரு நாள், சிஸ்டர் பீச்சை பக்கவாதம் தாக்குகிறது. அதன்பின், தன் இளம் எஜமானருக்குப் பணிவிடைகள் செய்யும் தெம்பு இல்லாமல் போகிறது. தன் கடைசி கால வாழ்க்கை எப்படி இருக்கும் என யோசனை கூட செய்யாதிருந்தவரிடம், அதுபற்றி ரோஜர் பேசுகிறார். வயோதிகர்களைக் கவனித்துக்கொள்ளும் நர்ஸிங் ஹோமில் சேர்க்கப்படுகிறார். அத்துடன், ரோஜர் தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. தனது பிஸியான வாழ்க்கைக்குக்கு இடையே அவ்வப்போது சிஸ்டர் பீச் உடன் நேரத்தை அன்போடு செலவிடுகிறான்.

நான்கு தலைமுறைகளாக, ஒரு வாழ்க்கையையே தனகு குடும்பத்துக்காக அர்ப்பணித்துவிட்ட பெண்மணிக்கு, அன்பைத் திருப்பிச் செலுத்துவது மிக முக்கியக் கடமையாகவே பார்க்கிறார் ரோஜர். அதற்கும் மேலாக, சிஸ்டர் பீச் தன்னுடைய பாட்டி என்று சொல்லிக்கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறார். பூவுலகில் இருந்து அந்தப் பாட்டிக்கு விடைகொடுக்கும் பொறுப்பும் பேரனுக்கு உரியதாகிறது.

சினிமாவுக்குக் கதையில் சுவாரசியமோ, திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ, ஆச்சர்யங்களோ எதுவும் முக்கியமல்ல. ஓர் எளிய கதையை காட்சியமைப்புகளால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுவிட முடியும் என்று சொல்லித் தருகிறது இந்தப் படைப்பு.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் கிழவன்கள், கிழவிகள், அவர்களது அன்றாட வாழ்க்கை... திரையில் நம்மை நோகடிக்க இது போதாதா? ஆனால், எ சிம்பிள் லைஃப் - இத்தகைய கொட்டாவிக் களத்தைக் கொண்டாட்டமாக்குகிறது.

திரையில் நிழலும், வெளியில் நிஜமும் வீட்டுக் வேலைக்காரர்களை வந்து போகும் வெற்றுத் துணையாகவே பார்க்கிறது. ஆனால், அவர்களுக்குள் புதைத்து பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் அவர்களின் எஜமானர்களது வாழ்க்கைச் சுவடுகளும், அவர்களுக்குள் இருக்கும் தனிமை வடுக்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதை அழுத்தமாகக் கண்டுகொண்டிருப்பதால், இப்படம் மேன்மை நிலையை எட்டுகிறது.

நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாருமே நல்லவர்கள்தான். இதுதான் உண்மை நிலை. ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற எதிர்மறை விஷயங்கள் கண்டுகொள்ளப்பட வேண்டியவை அல்ல என்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

தம் வீட்டில் பணியாளர்களைக் கொண்டுள்ளவர்கள் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால், தங்கள் பணியாளர்கள் மீதான அன்பும் நெருக்கமும் கூடும் என்பதை உணர முடிகிறது.

ராணி சீதை ஹாலில், நண்பர்கள் பிரேம், பிரவீனுடன் இந்தப் படத்தைப் பார்த்தேன். எங்களுடன் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ரசிகர்களே ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். படம் முடிந்ததும் பத்து பேரிடம் இருந்து கைதட்டல். 'கிரேட் எக்ஸ்பீரியன்ஸ்' என்றான் பிரேம். குட்நைட் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனான் பிரவீன்.

கோவா கடற்கரையில் கும்பலாகச் செல்வதைப் பிடிக்கும் பிரவீன்களுக்கு, மகாபலிபுரக் கடற்கரையில் பெளர்ணமி இரவில் தனிமையை ருசிப்பது பிடிக்காமல் போவதில் ஆச்சர்யமில்லை.

ஆன் ஹுய் என்ற பெண் படைப்பாளி கொடுத்தது என்னவோ 'ஓர் எளிய வாழ்க்கை' தான். ஆனால், அதில்தான் உன்னதம் எனும் மேன்மை மிகுந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x