Last Updated : 27 Apr, 2015 10:42 AM

 

Published : 27 Apr 2015 10:42 AM
Last Updated : 27 Apr 2015 10:42 AM

இணையதள பொருளியல்

பிளாட்பாரம் பொருளியல் என்று ஒன்று உண்டு. ஒரு தொடர் வண்டி நிலையத்தில் ஒவ்வொரு பிளாட்பாரமும் ஒரு தனியார் நிறுவ னத்துக்கு சொந்தம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிளாட்பாரத்தை இரண்டு குழுக்கள் பயன்படுத்துவர். ஒன்று, பயணிகள் மற்றொன்று தொடர் வண்டி நிறுவனங்கள்.

பிளாட்பார உரிமையாளர் பயணிகளிடமும் தொடர் வண்டி நிறுவனத்திடமும் கட்டணம் வசூலிக்கலாம். அதிக தொடர்வண்டி வரும் பிளாட்பாரத்துக்கு அதிக பயணிகள் வருவார்கள். அதே போல் அதிக பயணிகள் வரும் பிளாட்பாரத்துக்கு அதிக தொடர்வண்டிகள் வரும். இதில் 3 வகை செயல்பாடுகள் இருக்கலாம்.

1. A என்ற பிளாட்பார நிறுவனம் பயணிகளிடம் கட்டணம் வாங்காமல் தொடர்வண்டியிடம் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது. A பிளாட்பாரத்தில் அதிக பயணிகள் வருவர் ஏனெனில் பிளாட்பார கட்டணம் இல்லை. எந்தெந்த தொடர் வண்டியால் கட்டணத்தைக் கொடுக்கமுடியுமோ அந்த தொடர்வண்டிகள் மட்டுமே A பிளாட்பாரத்திற்கு வருகின்றன அவை மட்டுமே பயணிகளின் தேவைக்கு கிடைக்கும். அத்தொடர்வண்டிகளும் தாங்கள் பயணிகளிடம் வசூலிக்கும் பயணக்கட்டணத்தில் இதையும் சேர்த்துதான் வாங்கும்.

2. B என்ற பிளாட்பார நிறுவனம் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வாங்கிக் கொண்டு, தொடர்வண்டிகளிடம் கட்டணம் வாங்குவதில்லை. B பிளாட்பாரத்தில் எல்லா தொடர்வண்டிகள் வந்தாலும், பணம் இருக்கும் பயணிகள் மட்டுமே கட்டணம் செலுத்தி அந்த தொடர் வண்டிகளை பயன்படுத்த முடியும். ஏழை கள் வெளியே இருக்கவேண்டியது தான்.

3. C என்ற பிளாட்பாரத்தில் பயணி களிடமும் தொடர்வண்டிகளிடமும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இதில் இரு குழுவிலும் பணம் இருக்கும் பகுதியினர் மட்டுமே பிளாட்பார வசதியை பயன்படுத்த முடியும். பயணி களும், தொடர்வண்டிகளும் சேர்ந்து கட்டணம் செலுத்தும் போது அவர் அவர் பொருளாதார நிலைக்கேற்ப கட்டணம் வசூலிக்கலாம்.

எது சிறந்தது?

இந்த மூன்றில் எது சிறந்தது? சூழ்நிலைக்கேற்ப இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பேருந்து நிலையங்கள் மேலே குறிப் பிட்ட முதல் செயல்முறையைக் கொண் டது. அரசு பேருந்து நிலைய வசதி எல்லா பயணிகளுக்கும் இலவசமாக கொடுக்கவேண்டும் என்று கட்டணம் வசூலிக்காமல், ஒவ்வொரு பேருந்து நிறுவனத்திடமும் அக்கட்டணத்தை வசூலிக்கிறது. அக்கட்டணத்தையும் சேர்த்துத்தான் நமது பயணக்கட்டணத்தை பேருந்து வசூலிக்கிறது. உலகில் எதுவும் இலவசம் இல்லை.

டி.வி. சேனல் கட்டணங்கள்

இதே போன்றதொரு நிலையை நாம் TataSky, Dish TV, Sun Direct போன்ற Direct-To-Home (DTH) தொலைக்கட்சி சேவையில் பார்க்கலாம். DTH நிறுவனத்துக்கு இரண்டு பக்கமும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு புறம் Channelகள் மற்றொருபுறம் பார்வை யாளர்கள். TRAI என்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு என்ன செய்திருக்கிறது? ஒவ்வொரு DTH நிறுவ னமும் ஒரு குறைந்தபட்ச கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சேனல்களை கொடுக்கவேண்டும். அதற்கு கூடுதலாக உள்ள சேனல்களுக்கு பார்வையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் சமநிலை அல்லது நடுநிலை என்பது எங்கு உள்ளது?

இணைய சமநிலை

இதேதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இணைய சமவாய்ப்பு (Net Neutrality) என்பதும். ஒவ்வொரு இன்டர்நெட் நிறுவனமும் இரு வகை வாடிக்கையாளர்களிடையே உள்ளது. ஒரு புறம் தகவல் அளிக்கும் இணையதள நிறுவனம் மற்றொருபுறம் இணையதள உபயோகிப்பாளர்கள். ஒரு நிறுவனத் திடம் அதிக உபயோகிப்பாளர்கள் இருந்தால் அதிக இணையதள நிறுவ னங்கள் வரும். அதே போல் ஒரு நிறுவனத்திடம் அதிக இணையதள நிறுவனங்கள் இருந்தால் அதிக உபயோகிப்பாளர்கள் வருவார்கள். இந்த இரு குழுக்களிடமும் கட்டணம் வசூலிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

எது சமவாய்ப்பு?

நீங்கள் வாங்கும் இன்டர்நெட் தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட டேட்டா (data) அளவு வரை டவுன்லோடு வேகம் அதிகமாக இருக்கும், அந்த டேட்டா அளவை தொட்டவுடன் டவுன்லோடு வேகம் குறைந்துவிடும். அதே போல்தான் இலவசமாக டேட்டா டவுன்லோடை அதிக வேகத்தில் வழங்கும் இன்டர்நெட் பிளாட்பாரம்கள் ஒரு சில இணையதளத்தை இலவச மாக வழங்கி மற்றவற்றை ஒரு கட்டணத்திற்கு வழங்குவார்கள். இந்த பிளாட்பாரம் பொருளியல் பின்புலத் தில்தான் சமவாய்ப்பு என்ன என்பதை விளக்கவேண்டும்.

எல்லா தகவல் நிறுவனங்களும் இலவசமாக தங்களின் இணையதளங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றால், இன்டர்நெட் நிறுவனத்தின் bandwidth அதிகமாக்கவேண்டும். இதற்கு உபயோகிப்பாளர்கள் மேலும் அதிக கட்டணம் செலுத்தவேண்டி வரும். அதனால் இன்டர்நெட்டை எல்லோ ருக்கும் எடுத்துச் செல்லமுடியாது. குறிப்பாக மாணவர்கள், கிராமப்புற உபயோகிப்பாளர்கள் அதிக கட்டணம் செலுத்தமுடியாது. உபயோகிப் பாளர்களின் கட்டணத்தை குறைத்தால், இணையதள நிறுவனங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவேண்டும். இதனால் சிறிய இணையதள உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சிறிய இணையதள உரிமை யாளர்களும் பாதிக்கப்படக் கூடாது, குறைந்த கட்டணத்தில் உபயோகிப் பாளருக்கு இன்டர்நெட் வசதி கொடுக்கவேண்டும் என்றால் DTH TV சந்தையில் இருப்பது போன்ற ஒரு செயல் முறை தேவை. அதாவது, சில இணையதளங்களை இலவசமாகக் கொடுப்பது. இதிலும் பெரிய பிரச்சினைகள் உண்டு. எதை இலவசமாக கொடுக்கவேண்டும்? தகவல் பரிமாற்றத்திற்கு தேவைப்படும் வாட்ஸ்அப், டிவிட்டர் அல்லது செய்தி தாள்கள்? தினம் வரும் ஆயிரக்கணக்கான புதிய இணைய தளங்களை எப்படி இனம் கண்டு சேர்ப்பது? என்ற பல கேள்விகளுக்கு நாம் விடை அளிக்கவேண்டும்.

பொருளியல் ரீதியில் இணைய சமநிலைக்கு ஏற்ப எல்லா இணைய தள வசதிகளும் சமஅளவில் கொடுக்கப் பட்டால் இணையதள நிறுவனங்கள் தங்கள் தொலைபேசி சேவைக்கான சந்தையை இழக்கக்கூடும். இது கூட இணையதள சேவைக்கான கட்டணத்தை உயர்த்த ஒரு காரணமாகிவிடும்.

இணைய சமவாய்ப்புகளினால் சமுதா யத்திற்கு நல்லதா? என்ற கேள்விக்கு பொருளியலில் தீர்மானமாக பதில் இல்லை. எல்லா இணையதள சேவை களையும் இலவசமாகக் கொடுக்கும் போது, அதிக bandwidth தேவைப்படும் யூடியூப், ரேடியோ போன்றவை பாதிப்புக்கு உள்ளாகும்.

அதே நேரத்தில் அதிக bandwidh இலவசமாக கொடுக்க தொலைதொடர்பு நிறுவனங்களிடம் முதலீடு இருக் காது. கட்டணம் கொடுக்கும் இணைய தளங்களை மட்டுமே கொடுத்தால், மக்களுக்குத் தேவைப்படும் பல இணையதளங்கள் கிடைக்காமல் போகும். பொருளியலின் தொடர் ஆராய்ச்சி மட்டுமே இதற்கு பதில் சொல்லவேண்டும்.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x