Published : 31 May 2014 03:54 PM
Last Updated : 31 May 2014 03:54 PM

சக்கரங்களில் சுழலும் வாழ்க்கை

எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அரசுப் பொது மருத்துவமனை, தென்னிந்திய ரயில்வே தலைமை அலுவலகம் எனப் பல முக்கிய பகுதிகளுக்கு நடுவே டக்...டக்.. என்ற இரும்புப் பெடல் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது சென்னையில் ரிக் ஷா ஓட்டுபவர்களின் வாழ்க்கை.

கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்னையின் தவிர்க்க முடியாத போக்குவரத்து வாகனமாக ரிக் ஷாக்கள் இருந்தன. இன்றைக்கு பெருகியுள்ள வாகன வசதிகளால் ரிக் ஷா, நம்மிடம் இருந்து விடைபெறப் போகிறது. வரும் தலைமுறையினர் ரிக் ஷாக்களை அருங்காட்சியங்களில் வியப்புடன் காணும் நிலைமையும் ஏற்படலாம்.

எம்.ஜி.ஆர். நடித்த ரிக் ஷாக்காரன் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம்பெற்ற ‘ஐயம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்...’ பாடலில் இளம் இசையமைப்பாளர் அனிருத் வந்து இறங்கும் ரிக் ஷா என அன்று முதல் இன்றுவரை சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளன ரிக் ஷாக்கள்.

இப்படிப்பட்ட ரிக் ஷாக்களை சென்னை முழுவதும் இப்போது காண்பது ஆபூர்வம்தான். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் வரிசை வரிசையாகக் குதிரை வண்டிகள்போல் அணிவகுத்து நிற்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் குதிரை வண்டி நிறுத்தமாக இருந்துள்ளது. பிறகு கைரிக் ஷா நிறுத்துமிடமாக இருந்து, பிறகு அது சைக்கிள் ரிக் ஷா நிறுத்தும் இடமாக ஆனது. போக்குவரத்துத் தேவையைப் பூர்த்திசெய்ய அதிநவீன வாகனங்கள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், சவாரிக்காகத் தவம் கிடக்கும் இந்த ரிக் ஷாக்காரர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டுவதற்கு ரிக் ஷாக்கள் மட்டுமே துணை.

அங்குள்ள ரிக் ஷாக்காரர்களில் ஒருவர்தான் பாளையம். தன்னுடைய 13-ம் வயதில் பெற்றோர்களை இழந்து, கைவிடப்பட்ட நிலையில் பாளையத்திற்கு ரிக் ஷாதான் வாழ்க்கையைத் தந்தது. 25 வருஷத்திற்கும் மேலாக ரிக் ஷா ஓட்டிவருகிறார். “நான் இன்னைக்கி இருக்கறதுக்கு காரணமே என்னோட ரிக் ஷாதான். நா ரிக் ஷா ஓட்டுறதாலதான் மனசுக்குப் பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் செஞ்சிக்க முடிஞ்சது. இப்போ என்னோட பசங்க, என்னை மாதிரி கஷ்டப்படக் கூடாதுன்ற வைராக்கியத்துல படிக்க வைச்சுட்டிருக்கேன். அதுக்கும் இந்த ரிக் ஷாதான் காரணம்” என்கிறார் அவர்.

ரிக் ஷாக்காரர்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் செளகார்பேட்டைவாசிகள்தான். அவர்கள்தான் இன்னும் போக்குவரத்துச் சாதனமாக ரிக் ஷாக்களைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள வியாபார நிறுவனங்களுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்வதும் ரிக் ஷாக்களின் முக்கியமான சவாரி.

இவை இரண்டும் அல்லாமல் ரிக் ஷாக்களில் முக்கியமாக சவாரி செய்பவர்கள் சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள். இவர்களில் பெரும்பாலோர் ரிக் ஷாக்களில் சென்னையைச் சுற்றிப் பார்க்கவே விரும்புகிறார்கள். ஆங்கிலேயர் காலச் சென்னையின் பிரதான வீதிகளை வியப்புடன் சுற்றிச் சிலாகிக் கிறார்கள்.

இவற்றைத் தவிர்த்து ரிக் ஷா வுக்கு முன்னைப் போல சவாரி என்று பெரிதாக ஒன்றும் இல்லை. “ஒரு நாளைக்கு 200 ரூபா வாரதே பெரிய விஷயம். சில நாள் ஒண்ணும் கிடைக்காமலும் போகும். எம்.ஜி.ஆர் காலத்துல கைரிக் ஷா ஓட்டக் கூடாதுன்னு ஃப்ரியா சைக்கிள் ரிக் ஷா கொடுத்தங்க. அதுக்கு அப்புறம் வந்த காவர்மெண்டு எங்களுக்காக எதுவும் செய்ற மாதிரித் தெரியல” என ஆதங்கப்படுகிறார் பாளையம்.

அரசின் அங்கீகாரம் பெற்று தான் ரிக்சா வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரிக் ஷா ஒட்டுநர்கள் குறைந்தபட்சம் அமைப்பு தொழிலாளர் நலவாரியத்தில்கூட இணைக்கப்படாமல் உள்ளனர். கால மாற்றத்தால் ரிக் ஷாக்கள் வரலாற்றின் பக்கங்களுக்குள் செல்லப் போகின்றன. ஆனால் அதை நம்பியிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கைக்கு அரசு கைகொடுக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x