Published : 02 Mar 2015 10:45 AM
Last Updated : 02 Mar 2015 10:45 AM

முதல் செலவு: ரிஸ்கினைக் காலத்தால் வெல்லலாம்

இந்த வாரத்திற்கான கட்டுரையில் கொஞ்சமே கொஞ்சம் கணித சாத்திரம் கலந்திருக்கிறேன். சரியாக முதலீடு செய்வதற்கு ஒரு சில அடிப்படைக் கணக்கு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது நம்மில் எவரையும் ஆச்சரியப்படுத்தாது.

ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு விற்றால், இருபதாயிரம் ரூபாய் லாபம் என்பதும் அது 20% என்பதும் எளிய கணக்கு. அது போலவே, பத்தாயிரம் ரூபாயை வைப்பு நிதியில் 9% வட்டிக்குப் போட்டு வைத்தால், ஒரு வருடத்தில் நமக்கு பத்தாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது சுலபமான விஷயமே.

இவையெல்லாம், வளர்ச்சிக் கணக்குகள். இவை போலவே தேய்மானக் கணக்கும் சுலபமே. இன்றைக்கு ஒரு பொருள் நூறு ரூபாய்க்கு விற்கிறதென்றால், பணவீக்கம் 8% இருந்தால், அதே பொருள் அடுத்த வருடம் 108 ரூபாய்க்கு விற்கும் என்பது புரிகிறது. கொஞ்சம் சிரமப்பட்டு கணக்கு போட்டுப் பார்த்தால், இன்றைய 100 ரூபாய் என்பது ஒரு வருடத்தில் 92.59 ரூபாய் என்ற அளவில் தேய்மானம் அடையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இவை போன்ற வட்டி விகித, லாப விகிதக் கணக்குகள் வைப்பு நிதிகள் போன்ற `நிச்சயிக்கப்பட்ட’ முதலீட்டு முறைகளைப் புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் உதவும். ஆனால், நிச்சயமில்லாத ரிஸ்க் சம்பந்தப்பட்ட முதலீடுகளை அளவெடுக்கப் பயன் தராது.

அதற்கு நாம் கணித சாத்திரத்தின் இன்னமொரு பகுதிக்குச் செல்ல வேண்டும். நம்மில் பலர் பள்ளியில் நிகழ்தகவுக் கணிதம் (probability) பயின்றிருப்போம். ஒரு நாணயத்தை சுண்டினால், பூ விழுவதற்கு அரைப்பங்கு வாய்ப்பும், தலை விழுவதற்கு அரைப்பங்கு வாய்ப்பும் இருப்பதாகச் சொல்வதே நிகழ்தகவுக் கணிதம்.

ஒரு ஒற்றை தாயக்கட்டை வீசினால், அதில் தாயம் விழுவதற்கு கால் பங்கு வாய்ப்பு இருப்பதும் நிகழ்தகவுதான். ஒரு சம்பவம் நடப்பதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆராயும் இந்த நிகழ்தகவு கணிதம் ரிஸ்கை அளவெடுப்பதற்கு இன்றியமையாத கருவியாகும்.

ரிஸ்க் உள்ள முதலீடு என்றால் என்ன? போட்ட பணம் திரும்பவும் கையில் வருவதற்கு உத்தரவாதமில்லையென்றால் அது ரிஸ்க் உள்ள முதலீடு. எந்த அளவிற்கு வட்டி அல்லது லாபம் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை என்றால் அதுவும் ரிஸ்க்தான்.

ஆனால், இத்தகைய ரிஸ்குகளை நம்மால் அளவிட முடிந்தால் எப்படி இருக்கும்? “இது ரிஸ்கான முதலீடு” என்று ஒற்றை வாக்கியத்தில் சொல்வதற்கு பதில், “இதில் முதலீடு செய்தால், உங்கள் முதல் திரும்பி வருவதற்கு இவ்வளவு வாய்ப்பிருக்கிறது, இந்த அளவிற்கு லாபம் கிடைக்க இவ்வளவு வாய்ப்பிருக்கிறது” என்று சொல்ல முடிந்தால், நமது முடிவுகள் எப்படி மாறி அமையும்?

நாம் அன்றாடம் இத்தகைய கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லி தீர்மானங்களை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் நடைபாதையில் நடக்கும் போது, தெருவில் செல்லும் ஒரு வாகனம் நம் மீது வந்து மோதாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

ஆனால், நமக்குத் தெரியும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் 1%க்கும் குறைவு என்று. ஆகையால் நம்பிக்கையோடு நடக்கிறோம். இப்படியாக ஒவ்வொரு நாளும் நமது உள்மனம் நிகழ்தகவுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டே தான் நம்மை செலுத்துகிறது.

முதலீடுகளும் அது போலத்தான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை வைத்து நடக்கப் போவதை அனுமானிக்கும் நிகழ்தகவுக் கணக்குகளைத் தேர்ந்தோமேயானால், நம்மால் நம்பிக்கையோடு முடிவுகளை எடுக்க முடியும். இந்தியப் பங்குச் சந்தை குறித்த ஒரு முக்கியமான ஆய்வின் முடிவுகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறேன். இந்திய பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடாகிய சென்செக்ஸைப் பயன்படுத்தி, கடந்த இருபதாண்டு கால அன்றாடப் புள்ளி விவரங்களை அலசி ஆராய்ந்து சில நிகழ்தகவு உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஒரு முதலீட்டாளர் பங்குச்சந்தையில் (அதாவது ஒரு குறிப்பிட்ட பங்கில் இல்லை, குறியீட்டில் உள்ள அத்தனை பங்குகளிலும்) ஒரே ஒரு வருடத்திற்கு மட்டும் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீடு நஷ்டத்தில் செல்வதற்கான வாய்ப்பு 32%. அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் அல்லது ஒருவரின் முதலீடுகள் மூன்றில் ஒரு முறை நஷ்டத்தில் சென்று முடியும்.

ஆனால், அதே குறியீட்டில், தொடர்ந்து நான்கு வருடங்கள் முதலீடு செய்தால், நஷ்டத்திற்கான வாய்ப்பு 13% என்று குறைகிறது. இப்படி ஒவ்வொரு வருடம் கூட்டிக் கொண்டே சென்றால் இந்த நிகழ்தகவு குறைந்து கொண்டே வருகிறது.

இதை ஏழு அல்லது அதற்கு மேலான வருடங்கள் என்று நீட்டினால், நஷ்டத்திற்கான வாய்ப்பே இல்லை - பூஜ்யம்! ஆம், கடந்த இருபது வருடங்களில் எந்த ஒரு ஏழு வருட பங்கு சந்தை குறியீட்டு முதலீடும் நஷ்டம் அடைந்ததே இல்லை. நீங்கள் என்று முதலீடு செய்தீர்கள், சந்தையின் உச்சத்திலா, மட்டத்திலா என்ற கேள்விகளே தேவையில்லை.

அது மட்டுமல்ல, இதைப் பத்து வருடங்கள் என்று நீட்டினால், உங்கள் முதலீட்டின் லாபம் குறைந்த பட்சம் வருடத்திற்கு 10.5% என்று இருந்திருக்கும். சராசரியாக 13% என்று இருந்திருக்கும். இதெல்லாம் வெறும் சந்தைக் குறியீட்டில் எந்த சிந்தனையும் இல்லாமல் முதலீடு செய்து கிடைக்கும் பலன்கள். ஒரு நிர்வகிக்கப்பட்ட நிதியில் முதலீடு செய்தால், இந்த எண்ணிக்கைகள் இன்னமும் சாதகமாக இருக்கும்.

அதாவது முதலீட்டின் ரிஸ்க் என்பது முதலீட்டின் காலம் நீள நீளக் குறைந்து கொண்டே வருகிறது. அது மட்டுமல்ல, லாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவும், லாப விகிதம் உயர்வதற்கான நிகழ்தகவும் உயர்ந்து கொண்டே வருகின்றன.

இந்த நிகழ்தகவுக் கணக்கு தான், நீண்ட கால முதலீடுகளுக்கு பங்குச் சந்தை உகந்தது என்று சொல்வதற்கான ஆதாரமான அடிப்படை. முதலீட்டு ஆலோசகர்கள் உறுதியோடு இம்முறை களைப் பரிந்துரை செய்வதற்கு கடந்த காலம் குறித்த இந்தப் புரிதல்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கின்றன.

இத்தகைய நிகழ்தகவுக் கணக் குகள் ஸ்திரமில்லாத முதலீட்டு முறைகளுக்கு ஒரு கணிதம் சார்ந்த ஆதாரத்தை அளிக்கின்றன. ரிஸ்கினை அளவெடுத்து, முதலீட்டுக் காலம் என்பதே அதை வெல்லும் வழி என்று அடையாளம் காட்டுகின்றன.

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x