Last Updated : 27 Mar, 2015 12:16 PM

 

Published : 27 Mar 2015 12:16 PM
Last Updated : 27 Mar 2015 12:16 PM

காரோடு விளையாடி... காரோடு உறவாடி...

“சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. உயரமான மலைப்பகுதியிலிருந்து பாய்ந்து செல்லும் ஜீப் பள்ளத்தில் விழுந்து நொறுங்கும் காட்சியைப் படமாக்கினோம். பள்ளத்தாக்கில் போய் விழுந்த ஜீப்பைப் போய்ப் பார்த்தால், அதன் ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை.

நொறுங்கிய பாகங்களை எல்லாம் அந்தக் கிராமத்து மக்களே காய்லான் கடையில் போடலாம் என்பதற்காக எடுத்துப் போய்விட்டார்கள். மலைப்பகுதியில் படப்பிடிப்பு என்றால் அந்தக் காரை மறந்துவிட்டுதான், அதை உருவாக்கும் வேலையையே தொடங்குவோம் ’’ என்று பேச ஆரம்பித்தார் ஆர். சுரேஷ்.

சரோவ் ஆட்டோஸ் என்ற பெயரில், சினிமாவில் எந்த ரகமான காராக இருந்தாலும் பளிச்சென்று பழுது பார்க்கிறார் சுரேஷ். விதவிதமாக அவற்றின் வடிவத்தை மாற்றுகிறார். அதையெல்லாம் தாண்டி சினிமாக்களில் அந்தரத்தில் பறந்து வெடித்து, உருண்டு, சிதறும் சாகஸக் காட்சிகளுக்குப் பக்க பலமாக இருக்கிறார்.

‘சுப்ரமணியபுரம்’, ‘சரோஜா’, ‘சிங்கம் 2’, ‘அரண்மனை’, ‘டமால் டுமில்’, ‘டார்லிங்’ என்று 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது தயாரிப்பில் உருவான கார்கள்தான் சேஸிங், ஸ்டண்டிங் காட்சிகளைக் கலங்கடித்திருக்கிறது.

சினிமாவில் இதுவும் ஒரு துறையா?

சினிமாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. ‘இந்த ஊரில் இப்படி ஒரு சண்டைக் காட்சிக்கு நான்கு சுமோ, 2 ஸ்கார்பியோ கார்களை உடைக்க வேண்டும்’ என்பது மட்டும்தான் எங்களிடம் படநிறுவனம் முன் வைக்கும் விண்ணப்பம். மற்றபடி அது எந்தப் படத்தில் இடம்பெறுகிறது என்பதை நாங்களே படம் பார்த்துதான் தெரிந்துகொள்வோம்.

இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீங்க?

டிப்ளமோ ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தேன். சொந்த ஊர், புதுக்கோட்டை. அப்பாவுக்கு வருமானவரித் துறையில் வேலை. அம்மா அஞ்சல் துறை ஊழியர். இருவருக்குமே சென்னையில் வேலை. இதனால் படித்தது, வளர்ந்தது, மனைவி, இரண்டு குழந்தைகளோடு வாழ்வது என நான் இப்போது முழுமையான சென்னைவாசி. அந்தக் காலத்தில் ஏலத்தில் வரும் பழைய ஜீப்களை வாங்கிப் பழுது நீக்கி ஓட்டும் ரசனையும் ஆர்வம் கொண்டவர் அப்பா.

சிறு வயதில் பல ஊர்களுக்கு அப்பாவின் கஸ்ட்டமைடு ஜீப்களில் சுற்றுலா சென்று திரும்பியிருக்கிறேன். என்னோட மாமா கிருபா சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தார். பத்து வயதில் அவருடன் படப்பிடிப்புக்குப் போய் வருவேன். அப்போது கார் ஸ்டண்ட் காட்சிகள் மட்டும் என்னை ஈர்த்தது இதில் ஆர்வத்தை உருவாக்கி விட்டது.

படங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடிவருமா? வித்தியாசமான வாய்ப்புகள் வந்ததுண்டா?

என்னைத் தேடி வரும் படங்களுக்குப் பணிபுரிவதோடு நண்பர்கள் எடுத்துச் செய்யும் படங்களுக்கும் வேலை செய்கிறோம். ஒரு படத்தில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர் மூலம்தான் இந்த வேலை எங்களுக்கு வரும். ‘மதராசப்பட்டினம்’ படம் என்னோட நண்பர்தான் எடுத்து வேலை செய்தார். சில படங்களுக்கு டம்மி காரை வெடிக்க வைப்பதை மட்டும் செய்வோம்.

ஆனால் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய மாடல் கார்கள் எல்லாம் ஓட வேண்டும் என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் கேட்டுக்கொண்டதால் 1920களில் பயன்படுத்திவந்த போர்டு கார்களில் அம்பாசிடர் இன்ஜின்களை மாற்றி ஓட வைத்தோம். புதுமையான அனுபவம் அது.

அதேபோல ‘சுட்டிக் குழந்தை’ படத்தில் காருக்கே பேய் பிடிக்கும் கதை. ஒரு அட்மாஸ் பியரில் ஒரிஜினல் காரையும் , நாங்கள் டூப் செய்து உருவாக்கிய காரையும் நிறுத்தியபோது வண்டியின் உரிமையாளருக்கு எது தன்னோட கார் என்று அடையாளம் காட்டவே முடியவில்லை. இதுமாதிரி வாய்ப்புகள் எங்கள் வேலைக்கு நல்ல தீனி.

ஒவ்வொரு படத்துக்கும் கார்களைத் தயார் செய்ய எவ்வளவு அவகாசம் எடுத்துக் கொள்வீர்கள்?

நேரமே இருக்காது. திடீரெனத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து “இன்னும் சிலதினங்களில் படப்பிடிப்பு; இத்தனை வண்டி பறக்க வேண்டும், இத்தனை வண்டி உடைய வேண்டும்” என்பார்கள். உடனடியாக வேலையைத் தொடங்க வேண்டியதுதான்.

போதிய அவகாசம் கொடுத்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம். அதற்கு வாய்ப்பே அமையாது. சில படங்களில் ஒரிஜினல் வண்டியே ஓடாது. டூப் வண்டியை ஓட வைப்போம். அதை ஓட்ட இருக்கும் சண்டைக் கலைஞர்களையும் நடிகர்களையும் ஓட்டி பார்க்க வைப்போம்.

சமீபத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவில் சுமோ, அக்சண்ட், ஐகான், குவாலிஸ் நான்கு கார்களும் மோதிக் குதிக்கும் காட்சியை உருவாக்க வேண்டும். முதல் நாள்தான் கூறினார்கள். உடனடியாக அதைச் செய்தும் முடித்தோம். இதுமாதிரியான நேரங்கள் அமையும் என்றே எப்போதும் அதற்குத் தயாராகவே இருப்பதுதான் எங்களது வேலை.

படங்களுக்கான டம்மி கார்களை எங்கே வாங்குகிறீர்கள்?

பழைய கார்களைத் தேடிப்பிடித்து வாங்குவதே விறுவிறுப்பான திரைக்கதை மாதிரிதான்.

‘நந்தலாலா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒர் ஆண்டுக்கு முன்பே இயக்குநர் மிஷ்கின் எங்களை அழைத்து மூன்று சக்கர டெம்போ வேன் வேண்டும் என்று கூறிவிட்டார். தமிழ்நாடு முழுக்க அலைந்து திரிந்தோம். அது அந்தக் காலத்து மெட்டடோர் மாடல்.

வட இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று அந்தப் பக்கம் உள்ள நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நான்கு மாதத் தேடலுக்குப் பின் அந்த மாடல் வண்டி கல்கத்தாவில் ஷேர் ஆட்டோவாக ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு பிடித்தோம். அந்த நேரத்தில் 80 ஆயிரம் பணம் கொடுத்து அந்தக் காரை வாங்கி வந்து படத்துக்குத் தயார் செய்தோம்.

விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘நினைத்தது யாரோ’ படத்தின் படப்பிடிப்பு விடிந்தால் நடக்க வேண்டும். முதல் நாள் இரவு வரை அவர்கள் கேட்ட மாடல் பேருந்து கிடைக்கவில்லை. ‘உன்னை நம்பி 200 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார்கள்’ என்று தயாரிப்பாளர் டென்ஷனை ஏற்றினார்.

அதிகாலை 5 மணிக்கு ஒரு இடத்தில் பழைய பேருந்தைப் பார்த்து, படப்பிடிப்பு நடந்த தினத்தன்று மாலை 3 மணிக்குள் பேருந்தைத் தயார் செய்து கொண்டு வந்தேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பிலும் நீங்கள் இருக்க வேண்டுமே?

சமயத்தில் எங்கள் வண்டி பிரேக் டவுன் ஆகிவிடும். அந்த நேரத்தில் அவசியம் எங்களது உதவி தேவை. ஒரே நாளில் மூன்று நான்கு படங்களின் படப்பிடிப்புகள் கூட நடக்கும். ஆட்களைப் பிரித்து ஒவ்வொரு இடங்களுக்கும் அனுப்பி வைப்பேன். எனது நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

சினிமா வேலைகள் மட்டும்தான் எடுத்துச் செய்கிறீர்களா?

அதை மட்டும் செய்தால் கிடைக்கும் வருமானம் நிறுவனத்தை நடத்தப் போதுமானதாக இருக்காது. விபத்தில் சிக்கும் வண்டிகளை வாங்கி அதைச் சரி செய்து விற்பனைக்கு அனுப்புவோம். பழைய வண்டிகளை விரும்பும் மாடலில் புதுப்பித்துக் கொடுக்கும் வேலைகளையும் தொடர்கிறோம். கார்களைப் போல பைக்குகள் வேலையும் நடக்கிறது. சமீபத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்காக புல்லட் தேவைப்பட்டது.

அதை உருவாக்கி பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்புக்குப் பயன்படுத்திவிட்டு இப்போதுதான் கொண்டு வந்தோம். அதைத் தற்போது பிரித்து அடுத்த படத்தின் வேலைக்குத் தயார்படுத்தி வருகிறோம். அதேபோல தற்போது 1.5 கோடி மதிப்புள்ள ஹம்மர் காரை, ஒரு படத்தின் படப்பிடிப்புக்காகச் சில லட்சம் மதிப்பில் டூப் காராக உருவாக்கி வருகிறோம். இது எங்களோட அடுத்த கட்ட வளர்ச்சி. ”

புன்னகையோடு விடைகொடுத்து கைகுலுக்கினார் சுரேஷ். வியர்வையும் கறுப்பு நிற கிரீஸும் நம் கைகளில் ஒட்டிக்கொண்டது. அதில் உழைப்பின் வாசத்தை நுகர முடிந்தது.

படங்கள்: ம.பிரபு







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x