Published : 09 Mar 2015 11:00 AM
Last Updated : 09 Mar 2015 11:00 AM

பட்ஜெட் சொல்லும் பாடங்கள்

சுமார் பத்து நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் இந்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டங்களை பட்ஜெட்டாக முன்வைத்தார். இந்த பட்ஜெட் முன்வைக்கும் சிந்தனைகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் ஆர்வமுள்ளவர்கள் பல பத்திரிகை கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.

இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றியல்ல. மாறாக, இந்த பட்ஜெட் எந்த வகையான பொருளாதாரக் கண்ணோட்டத்தினை முன்வைக்கிறது என்பது பற்றி.

இந்த ஆண்டு மட்டுமல்ல, 1991-ஆம் ஆண்டு முதலாகவே, எந்த அரசாங்கமாக இருந்தாலும், பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்த வரை ஏறத்தாழ ஒரே மாதிரியான தத்து வார்த்த நிலைபாட்டினையே கொண்டி ருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் டானது இந்த நிலைப்பாட்டினை சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முன்னகர்த்துகிறது. இந்த ஆண்டும் அப்படியே. ஆனால், இந்த நிலைபாடு மக்களுக்குத் தெரிவிக்கும் செய்தி என்ன? நாம் எவ்வாறு நமது நிதி நிர்வாகத்தை அதற்கு இணைந்த விதத்தில் திட்டமிடுவது?

பொருளாதார ரீதியாக ஒரு அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடைமுகமாக இருப்பது ஒரு ஒற்றைச் சொல் - வரி. எதற்கு வரி விதிக்க வேண்டும், எவ்வளவு விதிக்க வேண்டும், எதற்கு விலக்கு அளிக்க வேண்டும், எதற்குத் தளர்த்த வேண்டும் போன்ற முடிவுகளே அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே இருக்கும் பொருளாதார உறவினை வடிவமைக் கின்றன.

ஒவ்வொரு வருடமும் நிதி அமைச்சராக இருப்பவர் பல விஷயங்களை சீர்தூக்கி நிறை செய்கிறார். ஒரு பக்கம், அரசாங்கத்தின் செலவுத் தேவைகள். மறுபக்கம் மக்களின் வருமானத் தேவைகள். இன்னொரு பக்கம் தனியார்துறையின் முதலீட்டுத் தேவைகள்.

இவை தவிர சமூகநலத் தேவைகள். அரசாங்கத்தின் செலவுத் தேவைகளுக்காக மக்களின் வரியை உயர்த்தினால், செலவுக்குப் பணமின்றி மக்கள் துன்பப்படுவார்கள். தனியார்துறையின் வரியை உயர்த்தினால், முதலீடுகளும், வேலை வாய்ப்பும், உற்பத்தியும் பாதிக்கப்படும். அரசாங்கம் தனது செலவுத் தேவைகளை மிகவும் குறைத்தால் சமுகநலத் திட்டங்களும், கட்டமைப்பு மேம்பாடும் பாதிக்கப்படும்.

ஆகையால், எல்லோருக்கும் கொஞ்சம் பாதிப்பு, கொஞ்சம் நலன் என்ற வகையில் முறை செய்ய வேண்டும் என்பதே நிதி அமைச்சர்களின் முன் இருக்கும் சவால். இந்தச் சவாலை அவர்கள் சமாளிக்கும் விதத்தினைக் கூர்ந்து நோக்கினால், அதில் அவர்கள் அரசாங்கத்தின் செயல்களை மட்டும் வடிவமைக்கவில்லை என்பது புரியும்.

பொது மக்களாகிய நாம் நமது நிதி நிர்வாகத்தினை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்த வழி காட்டுதல்களும் கோரிக்கைகளும் அதில் உள்ளுறைந்திருப்பது புலப்படும். அதை நாம் சரியாகப் புரிந்து கொள்வது நமது நிதி நிர்வாகத்துக்கு இன்றியமையாதது.

முக்கியமாக, அரசாங்கம் பட்ஜெட் டுகளில் எத்தகைய செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு வரித் தளர்ச்சிகள் மற்றும் விலக்குகள் கொடுக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இவையே ஒரு அரசு நமக்குக் கொடுக்கும் மறைகுறிப்புகள் (hints). இவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை, அரசாங்கம் பொது மக்களிடமிருந்து பெறும் கடனுக்கான வரிச்சலுகை. இது அரசின் தேவைக்கேற்ப அவ்வப்போது நடைமுறைக்கு வரும். உதாரணத்துக்கு, தற்போது நமது நாட்டின் கட்டுமானச் செலவுக்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அதை உள்நாட்டில் பொது மக்களிடமிருந்து கடனாகப் பெறுவதே செலவு குறைந்த வழி.

இது ஒரு பொதுத் தேவை என்பதைக் காரணமாகக் கொண்டு, இப்படிக் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டியும் உண்டு, வரி விலக்கும் உண்டு (ஒரு எல்லை வரை) என்று சலுகையை அரசாங்கம் வழங்குகிறது. இந்த வருடம் ‘கட்டுமானக் கடன் பத்திரம்’ என்ற வகையில் இது மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இரண்டாவது வகை, மக்கள் தமது நிதி நிர்வாகத்தில் தன்னிறைவு எய்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக வழங்கப்படும் வரிச் சலுகைகள் மற்றும் விலக்குகள். தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் அவற்றுக்காக அரசாங்கத்தை நாடும் நிலையில் இருப்பார்கள்.

இதனால் அரசின் பொருளாதார பளு அதிகரிக்கும். ஆகையால், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, சொந்த வீடு வைத்திருத்தல் போன்ற தன்னிறைவுப் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவற் றுக்கு வரி விலக்கு அல்லது தளர்ச்சி அளிக்கப்படுகிறது. சில சமயம் இதில் சமூக நோக்கும் கலந்திருக்கும். உதாரணத்துக்கு, இந்த வருடம் பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்புத்’ திட்டத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.

மூன்றாவது வகை, இந்தப் பத்தியில் நாம் அடிக்கடிப் பேசிக்கொண்டிருக்கும் ‘ரிஸ்க்’ சம்பந்தப்பட்ட முதலீடுகள். அதாவது தனியார் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகள். இதை ஏன் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்?

ஏனெனில், ஒரு வளமான, ஆழமான தனியார் துறை என்பது பரவலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க இன்றியமையாதது. அதில் பொது மக்கள் எந்த அளவிற்கு பரந்து பட்ட அளவில் பங்கேற்கிறார்களோ, அந்த அளவிற்கு, பல வகைகளில், நாடு வளம் பெறும்; நாம் அரசாங்கத்தினைச் சார்ந்திருப்பது குறையும்.

இந்த விதத்தில் இந்த வருடம் நிதி அமைச்சர் ஒரு முக்கியமான அறிவிப்பினைச் செய்திருக்கிறார். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPF) இருப்பவர்கள் அதற்கு மாற்றாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தினைத் (NPS) தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இது ஒரு பெரிய விஷயம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பங்குச் சந்தை முதலீடு (ஓரளவிற்கு) உண்டு.

இதனால், ஊழியர் பெறும் லாபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் அரசாங்கத்துக்கு ஓய்வூதியத்திற்கான வட்டி கொடுக்க வேண்டிய சுமையும் குறையும். பொது மக்கள் கொஞ்சத்திற்குக் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அவர்களும் பயன் பெற்று அரசின் பளுவையும் குறைக்க உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அதாவது, நமது தற்கால மற்றும் எதிர்கால நிதித்தேவைகளுக்கு நாம் அரசாங்கத்தைச் சாராமல் நமது சேமிப்பு மற்றும் முதலீடுகளையே சார்ந்திருக்க வேண்டும் என்பதே பல பட்ஜெட்டுகள் நமக்குச் சொல்லும் தலையாய பாடம். இதை நாம் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டு நமது நிதி நிர்வாகத்தைச் சீர் செய்கிறோமோ, அந்த அளவிற்கு நமது எதிர்கால நிதி வளத்திற்கு நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x