Last Updated : 06 Mar, 2015 12:09 PM

 

Published : 06 Mar 2015 12:09 PM
Last Updated : 06 Mar 2015 12:09 PM

லஞ்சம் வாங்க மாட்டோம்…!

அரசு அலுவலகத்துக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரை மாநகராட்சி அலுவலகம். அதன் வளாகத்தில், ஹைதர் அலிக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நடந்த மைசூர் போரின் வரலாற்றைக் கதையாக ஒரு குழுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் நல்வினையைச் செய்யமாட்டீராயினும்; அல்லது செய்தல் ஓம்புமின்’ எனப் புறநானூறு பாடல் வாசித்து அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் மற்றொரு குழுவைச் சேர்ந்த இளைஞர்.

இன்னும் சுற்றிப் பார்த்தால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு படிப்புத் துறைகள் சார்ந்த விஷயங்களைக் குழுவாக இணைந்து ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? எதற்காக இங்கு வந்து படிக்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? எனப் பல்வேறு கேள்விகளோடு அவர்களைச் சந்திதோம்.

படிப்புச் செலவுக்கு ஆட்டோ ஓட்டுவேன்

இளங்கலை வேளாண்மைப் பட்டம் பெற்ற வரிச்சூரின் கரும்பு செல்வம், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் உதவி வேளாண் அதிகாரி பணிக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார். “வீட்டுல இருந்தா படிக்கத் தோணாது, அதே இங்க வந்தால் பலர் படிக்கிறதப் பார்த்ததும் நமக்கும் படிக்கனும்னு தோணும். செலவுக்குப் பணம் வேணும்னா ஆட்டோ ஓட்டுவேன், இல்ல பெட்ரோல் பங்கில் வேலைக்குப் போவேன்” என்று அரசு வேலையில் சேரும் நம்பிக்கையுடன் பேசினார் கரும்பு செல்வம்.

கண்டிப்பா லஞ்சம் வாங்க மாட்டேன்

எம்.பி.ஏ. முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் ஜீவா. அந்த வேலையில் திருப்தி கிடைக்காததால் அரசு வேலையில் சேரும் நோக்கில் படித்துக்கொண்டு இருக்கிறார். “இங்க படிச்சுட்டு அரசாங்க வேலைக்குச் செல்லும் நாங்கள் யாரும் நிச்சயமாக லஞ்சம் வாங்க மாட்டோம். ஏனென்றால் இங்கு படிக்கும் அத்தனை பேரும் ராப்பகலா கஷ்டப்பட்டுப் படிச்சு நேர்மையாகத் தேர்வெழுதி வெற்றி பெற்று வேலைக்குச் செல்லும் நோக்கத்தோடு இருப்பவர்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங்களும் அதுக்கும் கீழே இருப்பவர்களும் தான் இங்க வந்து படிக்கிறோம். எங்களுக்கு மக்களோட கஷ்டம் நல்லாவே தெரியும்” என்று உறுதிபடச் சொல்கிறார் ஜீவா.

வேலை கிடைத்த பின்பும்…

கடந்த மாதம், டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவில் தேர்வாகி இருக்கிறார் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ். இவருடன் சேர்த்து இவர்களுடைய குழுவில் மொத்தம் நான்கு பேர் இந்த வருடம் வி.ஏ.ஓ. வாகத் தேர்வாகி இருக்கின்றனர். “நான் கடந்த ஒரு வருடமாக இங்க வந்து படிக்கிறேன். குழுவாக உட்கார்ந்து கலந்துரையாடி படிச்சதுதான் எங்கள் வெற்றிக்குக் காரணம். இங்க படிச்சுட்டு வேலைக்குப் போன பலரும் அவங்களுக்குக் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் வந்து எங்களுக்குச் சொல்லி கொடுப்பாங்க. எதாச்சும் பணம் தேவைப்பட்டால்கூடக் கொடுத்து உதவுவாங்க. நானும் அதே மாதிரி என்னால முடிஞ்ச உதவிகளை இங்க படிக்கிறவங்களுக்குக் கண்டிப்பா செய்வேன்” என்கிறார் சுரேஷ்.

கொசு வலை கட்டிக்கிட்டுப் படிப்போம்

மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்கிப் படிக்கிறார்கள். “வெளியிலே ரூம் எடுக்கிறதுக்கு வசதி இல்லாதவங்கதான் இங்க தங்கி படிக்கிறாங்க. சாப்பாடுகூடப் பகிர்ந்துதான் சாப்பிடுவோம். காலையில் வேலைக்குப் போறதால ராத்திரி கொசு வலையைக் கட்டிக்கிட்டுப் படிப்போம். இந்த எஸ்.ஐ செலக்ஸன்ல கண்டிப்பா செலக்ட் ஆகிடுவேன்” என்று நம்பிக்கை தொனிக்க பேசினார் எஸ்.ஐ தேர்வுக்காகத் தங்கி படிக்கும் எம்.காம் பட்டதாரியான ராஜா.

இவர்களுக்கு அனுமதி வழங்கியதுடன் குடிநீர், கழிப்பறை மற்றும் விளக்கு வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது மதுரை மாநகராட்சி. சாதாரண நாட்களில் 300 பேர் வரையிலும் தேர்வுக் காலங்களில் 700-க்கு மேற்பட்டோரும் இங்கே படித்துவருவதாகச் சொல்கிறார்கள். ஆயிரங்களில் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பல இளைஞர்களுக்கு மத்தியில் தன்னைத் தானே ஊக்குவித்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் படிக்கும் இந்த இளைஞர்களின் விடாமுயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x